PUBLISHED ON : டிச 09, 2011

இதுவரை: முகுந்தனை பழிவாங்க நினைத்த பணக்கார பசங்க, அவனை ஸ்டார் ஓட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பிட்டுவிட்டு பணம் கட்டாமல் சென்றனர். இனி-
பைவ் ஸ்டார் ஓட்டலில் முகுந்தனை விசாரித்துக் கொண்டிருந்த பேரர், முகுந்தன் ஓசூர் பகுதியிலிருந்து அறுபது சிறுவர்களைக் காப்பாற்றியவன் என்பதை அறிந்தார். அப்படிப்பட்ட ஒருவன் நிச்சயமாக தவறு செய்யமாட்டான் என, நினைத்தார். அது மட்டுமல்ல முகுந்தனின் பேச்சிலிருந்து அவனது நண்பர்கள் அழைத்து வந்து முகுந்தனை மாட்டி விட்டுச் சென்றிருக்கின்றனர் என்பதையும் தெரிந்துக் கொண்டார்.
''தம்பி... உன்னைப் பார்த்தால் பரிதாபமா இருக்கு! நீ ரொம்ப நல்லவனாவும் இருக்கே! எதுக்காக உன்னை மாட்டிவிட்டு வேடிக்கை பாக்கற பையன்கள்கிட்ட கூட்டு சேர்ந்துக்கிட்டு வந்தே?'' எனக் கேட்டார் பேரர்.
''அவர்கள் கிரிக்கெட் விளையாடும் போது சிக்ஸர் அடித்தால், 'ட்ரீட்' வைப்பதாக சொன்னார்கள். நானும் அடித்தேன். அவர்கள் கார் வைத்திருக்கும் பணக்கார வீட்டுப் பிள்ளைகள். அதனால் அவர்கள் பேச்சைக் கேட்டு வந்துவிட்டேன். ஆனாலும் இன்று என்னால் இந்த பில்லுக்குப் பணம் செலுத்த இயலவில்லை என்றாலும் என்றைக்காவது பணத்தைக் கொண்டு வந்து கட்டுகிறேன், எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?'' எனக் கேட்டான்.
''மூன்றாயிரத்து ஐந்நூறு ரூபாய் பில் ஆகியிருக்கிறது,'' என்றார் பேரர்.
''பெரிய தொகைதான் என்றாலும் நான் எப்படியாவது உழைத்துச் சம்பாதித்து இந்த பில் தொகையைக் கட்டிவிடுகிறேன்,'' என்றான்.
அந்த ஓட்டலின் மேனேஜரிடம் பேரர் நடந்ததைக் கூறினார். மேனேஜர் முகுந்தனின் மீது பரிதாபப்பட்டு அவனை வெளியே விடச் சொன்னார்.
சாமியார் உடையில் வந்து இவ்வளவையும் கவனித்துக் கொண்டிருந்த லாரி ராஜமாணிக்கம், 'எப்படியாவது முகுந்தனுக்கு உதவி செய்து அவனை தான் அழைத்துக் கொண்டு செல்லலாம்' என, நினைத்தான். அதனால் ஓட்டல் மேனஜர் முன் வந்து நின்றான் லாரி ராஜமாணிக்கம்.
''சார்... நான் நடந்ததையெல்லாம் கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். பையன் பிரச்னையில மாட்டிக்கிட்டான் போல இருக்கு! பணத்தை நான் கட்டுகிறேன்,'' என்றார் லாரி ராஜமாணிக்கம்.
''நீங்க யாரு?'' மேனேஜர் கேட்டார்.
''நான் ஒரு சன்யாசி,'' என்றான்.
''பரவாயில்லை, நாங்களே பையனுடைய பில் தொகையை ஏற்றுக்கொண்டோம்,'' எனக் கூறி முகுந்தனை அனுப்பிவிட்டனர்.
முகுந்தன் பெரும் நிம்மதி கொண்டு அந்த ஓட்டலை விட்டு வெளியே வந்தான். கார் பார்க்கிங் வழியாக வந்ததால், வித விதமான கார்கள் நிறைய நின்றிருந்தன. கார்களைக் கடந்து ரோட்டுக்கு வந்தான். இருட்டியிருந்தது. மின் விளக்குகள் பளிச்சென்று வெளிச்சத்தைக் கொட்டிக் கொண்டிருந்தன. அந்த இடம் வழக்கமாய் வந்து போகும் இடம் கிடையாது. தன் வீட்டிற்கு எப்படிச் செல்ல வேண்டும் என்று தெரியாமல், குழம்பிக் கொண்டு இருந்தான்.
லாரி ராஜ மாணிக்கம் தனது காரை முகுந்தனின் அருகில் வந்து நிறுத்தினான்.
''தம்பி... ஓட்டல்ல இருந்து உன்னை கவனிச்சுக்கிட்டுத்தான் வர்றேன். உனக்கு ஏதாவது வழியில உதவலாம்னு நெனைக்கிறேன். என் கூடவா உன்னை உன் வீட்டில் கொண்டு போய் விட்டிடறேன்,'' என்றார் லாரி ராஜமாணிக்கம்.
''சார்... நீங்க எனக்கு உதவி செய்யறதா சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்க. ஏற்கனவே ஒருத்தர் இந்த மாதிரி உதவி செய்யறதா என்னை வண்டியில ஏத்திக்கிட்டுப் போனாரு! அதனால நிறையக் கஷ்டங்களை நான் அனுபவிச்சேன். அதனால, நான் இனிமே யார் கார்லயும் ஏறுறதா இல்லைன்னு முடிவு பண்ணியிருக்கேன்,'' என்றான் முகுந்தன்.
''நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை,'' என்றான்.
''ப்ளீஸ்... என்னை வற்புறுத்தாதீங்க''
''உதவி செய்யறதாத்தானே சொன்னேன்''
''தேவையில்லைன்னு சொல்றேனே,'' என்றான்.
இருவரும் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு பெரிய கறுப்பு நிறக் கார் வேகமாக வந்தது. பாதையோரம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுமி மீது மோதியது. சிறுமி, 'அம்மா' என்ற அலறல் சப்தத்துடன் சுருண்டு விழுந்தாள்.
காரில் மோதியவன் எட்டிப் பார்த்தான். இறங்கினால் தனக்கு தரும அடி விழும் என நினைத்தவன் காரை நிறுத்தாமல், வேகமாக ஓட்டினான். முகுந்தன் சட்டெனக் காரின் பின்னால் ஓடினான்.
''காரை நிறுத்துங்க... காரை நிறுத்துங்க...'' என்று கத்தினான். கார் நிற்காமல் சென்றது.
சுருண்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியைத் தூக்கினான். தன் தோளில் போட்டுக் கொண்டு கார் சென்ற திசையை நோக்கினான்.
தான் அணிந்திருந்த மாய மோதிரத்தை வாய் அருகே கொண்டு வந்து, ''மாய மோதிரமே... அந்தக் காரை நான் பிடித்தாக வேண்டும்... இந்தச் சிறுமியை மருத்துவமனையில் சேர்த்துப் பிழைக்க வைத்தாக வேண்டும்... அதற்கு நீதான் உதவ வேண்டும்,'' எனக்கூறி ஓட ஆரம்பித்தான்.
சிறுமியைத் தோளில் போட்டுக் கொண்டு முகுந்தன் காரைத் துரத்தியபடி வேகமாக ஓடினான். லாரி ராஜமாணிக்கம் முகுந்தனின் ஓட்டத்தைக் கண்டு மேலும் அதிர்ச்சி அடைந்தான்.
சிறுவனா இவன்? அவ்வளவு பெரிய சிறுமியைத் தூங்குவதே பெரிய விஷயம். அதுவும் தோளில் போட்டுக் கொண்டு இவ்வளவு வேகமாய் ஓடுகிறானே! அது மட்டுமல்ல, ஓடும் முன்பு கையை வாய் அருகில் கொண்டு வந்து ஏதோ சொன்னானே! அது என்ன? மந்திரமா? மாயவித்தை தெரிந்த மந்திரக்காரனா? எதுவானாலும் அவனைத் துரத்தி அவனிடம் எப்படியாவது நட்புக் கொள்ள வேண்டும் என, நினைத்து முகுந்தன் ஓடிய திசை நோக்கி தன் காரை செலுத்தினான் ராஜமாணிக்கம்.
அந்தக் கறுப்புக் கார் மெயின் ரோட்டை விட்டு ஒரு திருப்பத்தில் திரும்பியது. காரை ஓட்டிக் கொண்டிருந்தவன் கார் கண்ணாடியில் பார்த்தான். தன் வண்டியில் அடிபட்ட பெண்ணைத் தூக்கிக் கொண்டு ஒரு சிறுவன் தன்னைத் துரத்திகிறான் என்பதை உணர்ந்தான். காரை இன்னும் வேகமாக ஓட்டினான்.
''மாயமோதிரமே... இந்தக் காரை போக விடாமல் தடுத்து நிறுத்து,'' என்றான்.
முகுந்தனின் பிடியில் கார் நின்றது. சங்கரங்கள் மட்டும் சுற்றிக் கொண்டே இருந்தது. கார் மூவ் ஆகவில்லை. பாதையில் வந்து கொண்டிருந்தவர்கள் அங்கு ஏதோ ஒரு விபரீதம் நடப்பதை உணர்ந்து கூடி விட்டனர்.
''ஐயா... இந்தச் சிறுமி மீது காரை மோதி விட்டுக் காரை நிறுத்தாமல் வந்து விட்டான். நான் சிறுமியைத் தூக்கி வந்து காரைத் துரத்திப் பிடித்து நிறுத்தினேன். உடனே இந்தக் குழந்தையை மருத்துவ மனையில் சேர்க்க உதவி செய்யுங்கள்,'' என்றான்.
''இல்லை. இந்தச் சிறுவன் பொய் சொல்கிறான். என் காரில் இந்தச் சிறுமி அடிபடவில்லை. இதற்கு சாட்சி யார்?'' எனக் கேட்டான் காரை ஓட்டி வந்தவன்.
''சாட்சியா கேக்கிறாய்? ராஸ்கல். நான் சாட்சி. மரியாதையாக இச்சிறுமியை மருத்துவமனையில் சேர்த்து நடந்த விபத்துக்கான உண்மையை ஒப்புக்கொள்,'' என்று லாரி ராஜமாணிக்கம் கறுப்பு நிறக் காரை ஓட்டிவந்தவனின் சர்ட் காலரைப் பிடித்தான். பொதுமக்களும் சரமாரியாக அவனைத் திட்டவே கார்காரன் உண்மையை ஒப்புக் கொண்டான்.
அதன் பிறகு பக்கத்தில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் அச்சிறுமியை சிகிச்சைக்காகச் சேர்த்தான். டாக்டர்கள் மருத்துவம் செய்து அச்சிறுமியின் உயிரைக் காப்பாற்றினர்.
சாதாரணப் பிச்சை எடுக்கும் குழந்தை தானே என்று விட்டு விடாமல், குழந்தையைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு ஓடி வந்து காரைத் துரத்திப் பிடித்த முகுந்தனை அனைவரும் பாராட்டினர்.
லாரி ராஜமாணிக்கம் முகுந்தனைப் பாராட்டியதோடு, தான் வீட்டில் கொண்டு போய் விடுவதாக் கூறினான்.
ராஜமாணிக்கத்தின் பேச்சில் முகுந்தனுக்கு நம்பிக்கை பிறந்தது. காரணம், விபத்தை உண்டாக்கிய கார்காரனிடம் சண்டை போட்டதும், அச்சிறுமியின் உயிர் பிழைக்க உதவியதும் முகுந்தனுக்கு பிடித்திருந்தது. அதுமட்டுமல்ல, சிறுமிக்கு பெற்றோர் இல்லாமல் இருந்தால் ஏதேனும் குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விடும்படி ராஜமாணிக்கம் டாக்டர் ஒருவரிடம் பரிந்து பேசினான்.
இத்தனையும் முகுந்தனின் மனதில் தனக்கு ஒரு நல்ல இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், அவனது சக்தியை அறிந்தால் அதைத் தான் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் ராஜமாணிக்கத்தின் நோக்கமாக இருந்தது.
மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது மேலும், இருள் சூழ்ந்திருந்தது. சரியாக இரவு எட்டு மணியைக் கடந்திருந்தது. தன் இருப்பிடம் தேடிக் கண்டுபிடிப்பது கூட அவனுக்குக் கஷ்டமாகத்தான் தெரிந்தது.
''தம்பி... இவ்வளவு நல்லவனாக இருக்கும் உனக்கு என்னால் ஆன உதவியை நான் செய்ய வேண்டும் என நினைக்கிறேன். உன்னை உன் வீட்டில் விட்டு விட்டுச் செல்கிறேன்,'' என்றான் ராஜமாணிக்கம்.
''எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று நீங்கள் எதற்காக நினைக்கிறீர்கள்? உங்களுக்கும், எனக்கும் எந்தவித அறிமுகமும் கிடையாது இல்லையா?'' என்றான் முகுந்தன்.
''நீ இப்போது மருத்துவமனையில் சேர்த்த அச்சிறுமிக்கும், உனக்கும் ஏதேனும் அறிமுகம் இருக்கிறதா? அப்படி அறிமுகம் இருந்தால் மட்டும்தான் நீ உதவி செய்வாயா?'' எனக் கேட்டான் ராஜமாணிக்கம்.
''உதவி செய்வது என் கடமை,''
''அது போலத்தான் நானும் பிறருக்கு ஏதேனும் உதவி செய்யாமல் இருக்க என்னாலும் முடியாது.''
''உங்கள் பேச்சில் எனக்கு நம்பிக்கை வருகிறது. அதனால் உங்கள் உதவியை நான் ஏற்றுக் கொள்கிறேன். உங்களுடன் வருகிறேன். என்னை என் வீட்டில் கொண்டு சென்று விட்டு விடுங்கள்,'' என்றான்.
லாரி ராஜமாணிக்கத்துக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது.
''சரி வா!'' என்று முகுந்தனைத் தன் காரில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டான்.
கார் சென்று கொண்டிருந்தது.
''தம்பி! உன்னைப் போல எல்லாப் பிள்ளைங்களும் இருந்துவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும். உனக்கு இளகிய மனம் மட்டும் இல்லை! உன்னிடம் ஒரு வேகமும் இருக்கிறது. ஒரு சாதாரண மனிதர்களுக்கும், உனக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்,'' என்றான் ராஜ மாணிக்கம்.
''அப்படி ஒன்றும் இல்லை,'' என ஒரே பேச்சில் சமாளித்தான் முகுந்தன்.
''உன்னை நான் தொடர்ந்து வந்தேன். அடிபட்ட சிறுமியைத் தூக்கிக் கொண்டு பெரிய வாலிபர்களாலே முடியாது. அப்படி இருக்க, நீ சிறுமியை சர்வ சாதாரணமாய்த் தூக்கிக் கொண்டு ஓடினாய். அது மட்டமல்ல, ஓடிக்கொண்டிருந்த காரைப் பிடித்து நிறுத்தினாய்... இதெல்லாம் எப்படி?'' எப்படியாவது முகுந்தனிடமிருந்து உண்மையைத் தெரிந்துக் கொள்ள ராஜமாணிக்கம் அன்பொழுகக் கேட்டான்.
மாயமோதிரத்தின் ரகசியத்தைப் பிறர் அறியக் கூடாது, அப்படி அறிந்தால் அதன் தன்மை போய்விடும் என்பது முகுந்தனுக்குத் தெரியும். அதுமட்டுமல்ல... மாயமோதிரத்தின் மூலம் தீய காரியங்கள் ஏதேனும் செய்தாலும் அது மாயமாய் போய்விடும் என்பது முகுந்தனுக்குத் தெரியும்! அதனால் ராஜ மாணிக்கத்தின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியமால், விழித்தான் முகுந்தன்.
''சொல்லுப்பா... என் கேள்விக்கு பதில் சொல்லவில்லையே! உனக்குள் ஏதோ ஒரு அதிபயங்ரமான சக்தி இருப்பதாக நான் நினைக்கிறேன். சரிதானே,'' என்றான் லாரி ராஜமாணிக்கம்.
''உண்மைதான்,'' என்றான் முகுந்தன்.
''என்ன சக்தி அது?''
ராஜமாணிக்கத்தின் முகத்தைப் பார்த்தான் முகுந்தன்.
-தொடரும்
