தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய மோதிரம் (16) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (16) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (16) - இருகூர் இளவரசன்


PUBLISHED ON : டிச 16, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 16, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: முகுந்தனிடம் உள்ள சக்தி என்ன என்பதை அறிய முயன்றான் லாரி ராஜமாணிக்கம். இனி-

காரினுள் இருந்த முகுந்தனுக்கு லாரி ராஜமாணிக்கம் கேட்கும் கேள்வி எரிச்சலை உண்டு பண்ணியது.

''உன்னிடம் இருப்பது என்ன சக்தி?'' என்று ராஜமாணிக்கம் மீண்டும் கேட்டான்.

''சார்... இஷ்டம் இருந்தா என்னைக் கொண்டு போய் ட்ராப் பண்ணுங்க. இல்லைன்னா இங்கேயே என்னை விட்டுடுங்க... என்னால் வீட்டுக்குப் போக முடியும்,'' என்றான் முகுந்தன்.

''சரி உனக்கு விருப்பம் இல்லைன்னா விட்டிடு. நான் எதுக்காக சொன்னன்னா... உன்கிட்ட அளவுக்கு மீறின சக்தி இருக்கு! அது பலருக்கும் பயன்படக்கூடியதா இருந்தா நல்லதுன்னு நெனைச்சுத்தான் சொன்னேன். அப்புறம் இன்னொரு விஷயம் போற வழியில ஒரு சுவாமிஜி இருக்காரு! அவரைப் பார்த்து ஆசீர்வாதம் வாங்கிப் போகலாம்னுதான் வந்தேன். பார்த்துட்டு போயிடலாமா?''

''எனக்கு நேரம் ஆச்சு சார்... ஏற்கனவே லேட், ரொம்ப இருட்டி இருக்கு! இதுக்கு மேலயும் நான் லேட்டா போனா, எங்கப்பா, அம்மா திட்டு வாங்க!''

''வந்தது வந்துட்டோம்... நீ கார்லயே இருந்துக்க, உள்ளே வரவேண்டாம், நான் மட்டும் போயிப் பார்த்துட்டு வந்துடறேன்!''

முகுந்தனுக்கு ஏன்தான் காரில் ஏறினோம் என்றிருந்தது. என்றாலும் 'ஆனது ஆயிற்று, காரிலேயே உட்கார்ந்து கொள்ளலாம், இந்த மனுஷன் வேண்டுமானால் சுவாமிஜியைப் பார்த்து வரட்டும்' என மனதில் நினைத்துக் கொண்டு, ''சரி சார், சீக்கிரம் வந்திடுங்க,'' என்றான்.

ராஜமாணிக்கம் ஓட்டிய கார் தார்ரோட்டிலிருந்து வலப்பக்கமாகத் திரும்பியது. குண்டும் குழியுமாக இருந்த ரோட்டில் கார் தடுமாறிச் சென்று கொண்டிருந்தது. இருட்டில்தான் எங்கு போகிறோம் என்றே முகுந்தனுக்குத் தெரியவில்லை. என்றாலும் தன் மோதிரம் மீதுள்ள நம்பிக்கையில் எத்தகைய பிரச்னை வந்தாலும் அதை எதிர்கொண்டு விடலாம் என, எண்ணினான்.

ஆசிரமம் போன்ற இடம். மின்விளக்குகளின் அணிவகுப்பில் பளிச்சென்று தெரிந்தது. ராஜமாணிக்கம் காரை நிறுத்தினான்.

''இங்கேயே இரு... சீக்கிரம் வந்துடறேன்.''

காரை விட்டு இறங்கி ஆசிரமத்திற்குள் சென்றான். காவல்காத்து நின்ற ஒருவர் ராஜமாணிக்கத்தைக் கண்டதும் வணக்கம் சொன்னான்.

''என்ன சார்... நீங்களும் காவி உடைக்கு மாறிட்டீங்களா?'' என்றான்.

''மாறித்தானே ஆகணும்... சுவாமிஜி இருக்காரா?''

''இருக்கார்!''

''நான் வந்திருக்கிறதாச் சொல்,'' என்றான்.

காவலாளி டெலி போனில் பேசினான்.

''உங்களை உள்ளே வரச்சொன்னாங்க சார்.''

ராஜமாணிக்கம் காம்பவுண்டுக்குள் நுழைந்தான்.

பத்து ஏக்கர் நிலப்பரப்பில் பூந்தோட்டமும், காய்கறித் தோட்டமும், பழத்தோட்டமுமான இடத்தில் அதன் நடுவே ஓலைகளால் வேயப்பட்ட ஆசிரமம் அது! ராஜமாணிக்கம் அடிக்கடி இந்த ஆசிரமத்திற்கு வருவதால் அங்கு பணிபுரிவோர் நல்ல பழக்கம்.

ஆசிரமத்திற்குள் நுழைந்தான்.

சுவாமிஜி ஒரு இருக்கையில் அமர்ந்திருந்தார்.

''வா ராஜமாணிக்கம் கொஞ்ச நாளாவே உன்னைக் காணோம்?'' சுவாமிஜி கேட்டார்.

''தொழில்தான் காரணம்!''

''இப்ப உன்னை எதுக்காக அவசரமாக வரச் சொன்னேன் தெரியுமா? வெளிநாட்டுல இருந்து போதை பொருள் வருது. அதை எப்படியாவது இங்க கொண்டு வந்து சேர்க்கணும். விமான நிலையத்துல போலீஸ் கெடுபிடி ஜாஸ்தி இருக்கு! மாட்டிக்கிட்டாலும் என் பேரோ ஆசிரமத்தோட பேரோ வந்திடக்கூடாது என்ன சொல்றே?''

''இத்தனை நாளும் அந்த வேலையை நான்தான் உங்களுக்கு செய்துட்டு வர்றேன். இந்த மாதிரி வேலைகள்ல மாட்டிக்கிட்டாலும் தப்பச்சுப் போறதுக்கு ஏதாவது ஒரு சக்தி வேண்டாமா?''

''போலீசை கைகுள்ள போட்டுக்கணும், அதுக்கு மேல என்ன செய்ய முடியும்?''

''போலீஸ் முன்ன மாதிரி இல்ல! சில சமையங்கள்ல திட்டம்போட்டு பிடிச்சிடறாங்க.''

''இப்படி பயந்தா இந்தத் தொழில் செய்ய முடியுமா? என்னைத் தேடி வர்ற வாடிக்கையாளர்களுக்கு நான் என்ன பதில் சொல்றது? விபூதிங்கற பேர்ல பொட்டலம் பொட்டலமா இந்த பிசினஸ்தான் செய்துக்கிட்டு இருக்கேன், முடிவா என்ன சொல்ற?''

''சுவாமிஜி... இதுக்கெல்லாம் ஒரு வழி கண்டுபிடிச்சுதான் இங்க வந்திருக்கேன். ஓசூருக்கும், கிருஷ்ணகிரி ரோட்டுக்கும் நடுவே குழந்தைகளோட வந்த லாரி ஒண்ணு பெட்ரோல் டேங் லாரி மீது மோதிச்சு தெரியுமா?''

''ஆமாம்... ஒரு சின்னப் பையன் குழந்தைகளைப் பூராவும் காப்பாத்தினான்னு பேப்பர்லயும், 'டிவி'யிலும் செய்தி படிச்சேன்.''

''சுவாமிஜி... அந்தப் பையன் சாதாரணப் பையன் இல்ல, அவன்கிட்ட மிகப்பெரிய சக்தி இருக்கு! லாரியில உட்கார்ந்து பிரேக்ல மிதிக்கக் கூட அவனுக்குக் கால் எட்டாது, அவன் சைக்கிள் கூட ஓட்டத் தெரியாதவன். அவனால எப்படி லாரியை ஓட்ட முடியும்னு அவனை நான் கண்காணிச்சேன்,'' என்றான்.

''அந்த லாரி ஆக்ஸிடண்ட் எப்படி நடந்துச்சு?''

''நான்தான் ஆக்ஸிடண்ட் பண்ணினேன். மொத்தக் குழந்தைங்களையும் ஒழிக்கணும்னு நினைச்சு முடியாமப் போயிடிச்சு, நான்தான் அந்த விபத்தை உண்டாக்கியதுன்னு யாருக்கும் தெரியாது.''

''சாமர்த்தியமான ஆள் நீ...! அதனாலதானே உன்னை நம்பி இந்த பிசினஸை செய்துட்டு இருக்கேன்.''

இந்த பிசினஸை எனக்கும் நிறையப் பணம் தந்துட்டு இருக்கீங்களே! அதனாலதானே இந்த பிசினஸை விடவும் எனக்கு மனசு வரலை? அந்த சக்தி வாய்ந்த பையன் பேரு முகுந்தன். அவன் இன்னிக்கு ஒரு நம்ப முடியாத சாதனையை செய்திருக்கான் என்றும் முகுந்தன் விபத்துக்குள்ளான பெண் குழந்தையைத் தூக்கி கொண்டு வேகமாக ஓடியதும், ஸ்கேட்டிங்கில் சென்று, ஓடிக்கொண்டிருந்த காரைப் பிடித்து நிறுத்தியது பற்றியும் தெளிவாக சுவாஜியிடம் சொன்னான் ராஜமாணிக்கம்.

சுவாமிஜி ஆச்சரியத்தில் மூழ்கினார். இதெல்லாம் உண்மையா? என்னால் நம்பவே முடியலியே... மனுஷனுக்கு இதுமாதிரி சக்தி இருக்கறது சாத்தியம் இல்லை.

''சாத்தியம் இல்லைதான். அதனாலதான் அவனை நான் என்னோட அழைச்சிட்டு வந்திருக்கேன்.''

''இங்கேயே?''

''ஆமாம். உள்ளே வர மறுக்கிறான். அதான் கார்லேயே உட்கார வெச்சிட்டு வந்திருக்கேன். அவன் வாயால ஏதோ மந்திரம் மாதிரி சொல்றான். அது என்ன மந்திரம்னு தெரியலை. உங்களால கண்டு பிடிக்க முடியுமான்னு பாருங்க சுவாமிஜி''

''கண்டிப்பா பாக்கறேன். அவனை எப்படியாவது இங்க அழைச்சிட்டு வர முடியுமா?''

''மாட்டேன்னு சொல்றான். அவனை வீட்டுல ட்ராப் பண்றதா சொல்லி அழைச்சிட்டு வந்தேன். அவன் வீடு போக இன்னும் எட்டு கிலோ மீட்டர் தூரம் இருக்குது. அவன் நம்மை சந்தேகப்பட்டுட்டா அவன் நம்மகிட்ட இருந்து தப்பிச்சுப் போயிடுவான்... அதனால இந்த காவி உடையை மாத்தி சாதாரண பேண்ட், சர்ட் போட்டுட்டு என் கூட வாங்க. அவன் பக்கத்துல உட்கார்ந்து அப்சர்வ் பண்ணுங்க. அவன்கிட்ட ஏதாவது தாயத்து மாதிரியோ இல்லே தகடு மாதிரியோ மந்திர சக்தி உள்ளது இருக்குதான்னு பாருங்க. இருந்தா அதை அவன்கிட்ட இருந்து எப்படியாவது தட்டிப் பறிச்சிடலாம்,'' என்றான் ராஜ மாணிக்கம்.

ராஜ மாணிக்கம் சொன்னதைப் பார்க்கும்போது, முகுந்தனை தனக்கும் பார்க்க வேண்டும் என்கிற ஆவல் சுவாமிஜிக்கு ஏற்பட்டது.

''இதோ... இப்போதே வருகிறேன் என்று தனது காவி உடையை மாற்றி, கோட்டு ஸூட்டு என்று வெளிநாட்டு அறிஞரைப் போல தன்னை மாற்றிக் கொண்டார். தலையில், 'விக்'கை மாற்றிக் கொண்டார். ஒட்டியிருந்த தாடியையும் எடுத்து வைத்துக் கொண்டார். பார்க்க அழகாகவும் தெரிந்தார் சுவாமிஜி.

சுவாமிஜியும், ராஜமாணிக்கமும் வேகமாக கார் அருகே வந்தனர். காரின் முன் சீட்டில் அமர்ந்திருந்தான் முகுந்தன்.

''சார் ரொம்ப நேரம் ஆயிடிச்சு சார், எங்கப்பா அம்மா வீட்டுல தேடுவாங்க சார்,'' என்றான் முகுந்தன்.

''அதான் வந்துட்டேனேப்பா... இவர் என் நண்பர் உன்னை வீட்டில் விட்டிட்டு அப்புறமா இவரைக் கொண்டு போயி விடணும். நீ இவர் கூட பின்னாடி சீட்டுல உட்கார்ந்துக்க,''

''பரவாயில்ல சார்... முன்னாடியே உட்கார்ந்துக்கறேன்,'' என்றான்.

''வா தம்பி... பேச்சுத் துணை ஆச்சு இல்லை?'' என்றார் சுவாமிஜி.

முகுந்தன் எரிச்சலோடு முன் சீட்டிலிருந்து பின் சீட்டுக்கு வந்தான். பக்கத்தில் சுவாமிஜி உட்கார்ந்தார்.

வழக்கம்போல் ராஜமாணிக்கம் காரை ஓட்டினான்.

''சார்... தம்பி நல்ல தம்பி... இரக்கமுள்ள குணம். எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு சார்,'' என்று ராஜமாணிக்கம் பேச்சை ஆரம்பித்தான்.

முகுந்தனின் தோளில் கையைப் போட்டார் சுவாமிஜி.

''பரவாயில்லையே, இந்த வயசுலயே இவ்வளவு பெரிய குணம் யாருக்கும் வராது. என்னப்பா படிக்கறே!''

''ஆறாவது சார்!''

''நல்ல படிப்பியா?'' என்று தோளை மீண்டும் தட்ட முகுந்தனின் தோள் வலிமையோடும், உறுதியோடும் இருந்தது.

''பரவாயில்லையே! ஸ்ட்ராங் பாடிதான் தினமும் எக்ஸஸைஸ் பண்றியா?''

''அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார்!''

''பிறகு எப்படி இவ்வளவு வலிமையான உடலா இருக்கும்?'' என்று தோளை அழுத்தினார்.

முகுந்தனுக்கு தோள்பாகம் அழுத்தியதில் வலி தெரிந்தது. அதனால் அவன் அணிருந்திருக்கும் மாய மோதிர சக்தியால் சுவாமிஜி தோளில் போட்ட கையை விலக்கி விட்டான்.

சுவாமிஜிக்கு ஏதோ 'ஷாக்' அடித்தது போலவும் இருந்தது.

''என்னப்பா செய்தே?''

''நீங்க என் தோளை அழுத்தினீங்க, நான் உங்க கையை விலக்கி விட்டேன்,'' என்றான்.

''ஏதோ ,'ஷாக் 'அடிச்ச மாதிரி இருந்ததே உன் கையில ஏதாவது வெச்சிருக்கியா?''

''இல்ல சார்... ஒண்ணும் இல்லை.'' என்று இரண்டு கைகளையும் விரித்துக் காட்டினான். முகுந்தனின் மோதிர விரலில் ஏதோ ஒருவித ஒளி பிரகாசித்தது போல சுவாமிஜிக்குத் தெரிந்தது.

''உன் கையைக்குடு பாக்கலாம்,'' என்றார் சுவாமிஜி.

''கையிலதான் ஒண்ணுமில்லைன்னு சொன்னேனே.''

''முகுந்தா... இவர் ஜோசியம் சொல்றதுல வல்லவர். அவர் கேட்ட மாதிரிக் கையைக் காட்டு,'' என்றான் ராஜமாணிக்கம்.

மோதிரம் இடக்கையில் இருந்ததால் வலக்கையை நீட்டினான் முகுந்தன்.

''நல்லா பாத்து சொல்லுங்க!'' என்றான்.

அந்தக் கையைப் பிடித்துப் பார்த்தார் சுவாமிஜி. ஏதோ ஒரு இரும்புத் துண்டைத் தூக்கிப் பிடித்தது போன்று இருந்தது. அக்கணமே கையை விட்டுவிட்டார்.

''தம்பி... நீ சாதாரண மனிதன் இல்ல... ஏதோ சக்திவாய்ந்த சிறுவன், உண்மையைக் சொல், உன்னிடம் என்ன சக்தி இருக்கிறது,''

ராஜமாணிக்கம் காரை நிறுத்தினான்.

''அதான் சொன்னேனே... ஒண்ணுமில்லை என்று,'' கார் கதவைத் திறந்துக் கொண்டு இறங்கி வேகமாக நடந்தான் முகுந்தன்

இவனை விடக்கூடாது என்று தீர்மானித்தார் சுவாமிஜி.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us