தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய மோதிரம் (9) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (9) - இருகூர் இளவரசன்

மாய மோதிரம் (9) - இருகூர் இளவரசன்


PUBLISHED ON : அக் 28, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 28, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: சிங், மணிகண்டன், கணேசன் மற்றும் முகுந்தனை கடத்தி வந்தான். இனி-

முகுந்தனும், மணிகண்டனும், கணேசனும் வியப் போடு பார்த்துக் கொண்டு நிற்பதை கிழவி பார்த்த வாறு கேட்டாள்.

''என்ன அப்படிப் பார்க்கறீங்க? இவங்கெல்லாம் உங்களைப் போல இங்க வந்தவங்கதான். இது ஒரு மாவு தயாரிக்கும் தொழிற்சாலை. இங்க தயாராகும் மாவைப் பார்சல் பண்ணி எடை போட்டு மூட்டைகளாக்கி லாரியில் ஏத்தணும். அதுதான் இங்க நடக்கற வேலை... இந்த வேலைகள் பூராவையும் சிறுவர்கள்தான் செய்யறாங்க. நீங்களும் இனிமே அவர்களோடு இந்த வேலையை செய்யணும். மணி அடிப்பாங்க, அந்த சமயத்துல கேண்டின்ல சாப்பிடக் குடுப்பாங்க. ராத்திரி ரெண்டு மணிவரைக்கும் வேலை செய்யணும். துக்கம் வருதுன்னு தூங்கினா சவுக்கால அடிப்பாங்க,'' என்று கிழவி அங்கு நடக்கும் சம்பவத்தைச் சுருக்கமா விளக்கினார்.

''நாங்க எதுக்காக இங்க வேலை செய்யணும்... நாங்க படிக்க வந்தங்க, எங்களை பெத்தவங்க வேலைக்கு அனுப்ப மாட்டாங்க. இந்த மாதிரி வேலை செய்யறதுல எங்களுக்கு விருப்பமும் இல்ல பாட்டி... தயவு செய்து எங்களை அனுப்பி வையுங்க,'' என்றான் முகுந்தன்.

''கொழந்தைங்களா? சொன்னால் புரிஞ்சுக்குங்க... இங்க இருக்கற கொழந்தைங்க எல்லாருமே படிக்கறதுக்காகப் பள்ளிக்கூடம் வந்த பிள்ளைங்க தான். உங்களை எப்படி அழைச்சிட்டு வந்தமோ, அதே மாதிரித்தான் இவங்களையும் அழைச்சிட்டு வந்தோம். இவங்க வந்து ரொம்ப நாள் ஆச்சு. இப்ப இவங்க இங்கிருந்து போகவே முடியாது. போகணும்னு ரொம்ப அடம்பிடிச்சா முதுகுல சூடு போட்டு டுவாங்க... சூடுபோட்டுக்கிட்ட ஒரு பிள்ளையைக் காட்டறேன் பார்,'' எனக் கூறி அருகில் நின்றிருந்த நபரிடம் இந்தியில் ஏதோ சொன்னாள். அவன் மாவு மூட்டை ஒன்றைத் தலையில் தூக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்த ஒரு சிறுவனின் கையைப் பிடித்து இழுத்து வந்தான்.

''இந்தப் பையன் முதுகைப் பார்,'' என பையனைத் திருப்பி காட்டினாள்.

நீளமான பெருக்கல் குறியீட்டில் சூட்டுக்காயம் தெரிந்தது. அந்தப் பையன் முகத்தைப் பார்க்க முகுந்தனுக்கு பயமாக இருந்தது. அவன் கண்களில் கண்ணீர் நிரம்பியிருந்தது.

''பாத்துட்டீங்களா... இதுக்கும் மேலே உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லைன்னு நெனைக்கறேன்,'' எனக்கூறி அருகில் நின்றிருந்த ஆசாமி கப்பர் சிங்கை பார்த்து, ''இவங்க மூணுபேரையும் ஒரே இடத்துல வெச்சுக்காதே! மாவு பிரிச்சி எடுக்கற இடத்துல ஒருத்தணும், அதை அளந்து பார்சல் பண்ற கூடத்துல ஒருத்தனையும் லாரியில் சரக்கு ஏத்துற இடத்துல ஒருத்தனையும் அனுப்பிடு. இதுல சரக்கு ஏத்துறதுக்கு இதோ... இந்தப் பையனை அனுப்பு,'' என்று முகுந்தனின் தோளைத் தட்டினாள் கிழவி.

ஏற்கனவே, குஷ்வந்த்சிங் வீட்டிற்குத் தூக்க முடியாத கனமுள்ள பார்சலைத் தூக்கி வந்தவன் முகுந்தன் என்பதால், பார்சலைத் தூக்கி லாரியில் ஏற்றும் பணிக்கு முகந்தனை சிங் செலக்ட் பண்ணிருந்தார்.

''வேண்டாம்... எங்களைப் பிரிக்காதீங்க, நாங்க ஒண்ணாவே இருக்கிறோம்,'' என்றான் மணிகண்டன்.

''இங்க உங்க இஷ்டப்படி எதுவும் நடக்காது. நாங்க சொல்றதைத்தான் நீங்க கேக்கணும் போங்க,'' எனக் கூறிவிட்டு கிழவி அங்கிருந்து நகர்ந்தாள்.

அடியாள் கப்பர்சிங், கிழவி சொன்னது போலவே அவர் மூவரையும் தனித்தனி குடோன்களுக்கு அழைத்துச் சென்றனர்.

காலையில் பள்ளிக்கூடம் போய்வருவதாக சென்ற முகுந்தன் இரவு ஆகியும் வீடு வந்து சேர வில்லையே... என்று முகுந்தனின் அப்பா கந்தசாமியும் சித்தி வள்ளியம்மாளும் பதட்டத்துடன் இருந்தனர்.

வள்ளியம்மாள் அடிக்கடி முகுந்தனுக்குச் செய்யும் கொடுமையால், ஊரை விட்டு எங்காவது ஓடிப்போய் விட்டானோ... என்று முகுந்தனின் தந்தை மனைவியைத் திட்டித் தீர்த்தான்.

''இதப்பாருங்க, உன் பையன் மூத்த தாரத்துப் பையன் என்பதால் நான் பாசத்தைக் கொட்டாதது உண்மை தான். ஏதோ எனக்குத் தேவையான வீட்டு வேலைகளையெல்லாம் செய்ய சொன்னேன். ஆனா இப்ப அந்த மாதிரியில்ல, முகுந்தனை அடிக்க ஓங்கிய போது என் கை வராமப் போயி நான் வைத்தியம் பார்த்து நல்லாகலே... ஆனா முகுந்தன் மனம் விட்டு என்னை மன்னிச்சி சாமிகிட்ட வேண்டிக் கிட்டதும் என் கை பழையபடி சரியாயிடிச்சி. அந்த நிமிஷத்துல இருந்து முகுந்தனை என் சொந்தப் பையனா தான் நெனைக்கறேன். இப்ப முகுந்தன் காணாமல் போனதுக்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல! இது சாமி மேல சத்தியம். நான் சொல்றதை நம்புங்க,'' என்று வள்ளியம்மாள் தன் கணவன் காந்தசாமியிடம் அழுது புலம்பினாள்.

அந்தக் காம்பவுண்டுக்குள் உள்ள பெரிய பெரிய வீட்டு ஆட்கள் பலரும் கந்தசாமியிடம் விசாரிக்க ஆரம்பித்தனர்.

''பையன் விபரமான பையன்தான். எங்க போனாலும் வீடு வந்து சேர்ந்திடுவான். எதுக்கும் போலீஸ் ஸ்டேஷன்ல பையனைக் காணோம்னு ஒரு கம்ப்ளைண்டு குடுத்துடு,'' என்று பலரும் கந்தசாமியிடம் சொன்னனர்.

இப்போது இருக்கும் காலகட்டத்தில் காணாமல் போன முகுந்தன் பற்றிக் புகார் கொடுக்காமல் இருப்பதும் தவறுதான் என்று எண்ணிய கந்தசாமி, தன் மனைவி வள்ளியம்மாளையும் அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றார்.

காவல் நிலையத்தில் ஏற்கனவே மணிகண்டனின் தாயாரும், கணேசனின் தாயாரும், தகப்பனாரும் இருந்தனர். முகுந்தனின் பெற்றோர் கொடுத்த கம்ப்ளைண்டை வாங்கிக் கொண்ட இன்ஸ்பெக்டர் வேலாயுதம் யோசிக்க ஆரம்பித்தார்.

'ஒரே பள்ளிக்கூடத்து பையன்கள், அதுவும் ஒரே வகுப்பில் படிக்கும் பையன்கள் மூன்று பேரும் ஒரே நாளில் ஒரே நேரத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்றால் மூவருமே சேர்ந்துதான் சென்றனர். பெற்றோரின் பிரச்னையா அல்லது பள்ளிக்கூட ஆசிரியரின் பிரச்னையா? என்பதை நாளை காலை பள்ளிக்கூடம் தொடங்கியதும் வகுப்பு ஆசிரியரை விசாரித்து விட்டுதான் மேற்கொண்ட நடவடிக்கையை எடுக்க முடியும், என்பதை, தீர்மானித்தார் இன்ஸ் பெக்டர்.

''நாளைக்கு ஸ்கூல்ல விசாரிச்சிட்டு, உங்களுக்கு சரியான தகவலைச் சொல்றேன். யாரும் கவலைப்பட வேண்டாம். தைரியமாக இருங்க,'' என்று சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தார்.

முகுந்தன் பார்சல்களைத் தூக்கி லாரிகளில் ஏற்றும் வேலைக்கு நியமிக்கப்பட்டிருந்தான். அவனுடன் இருபதுக்கும் மேற்பட்ட பையன்கள் இருந்தனர். அவர்களைப் பார்க்க முகுந்தனுக்குப் பாவமாக இருந்தது. தன் கையில் உள்ள மாய மோதிரத்தின் சக்தியால் தன்னால் தப்பிச் செல்ல இயலும் என்கிற நம்பிக்கை முகுந்தனுக்கு இருந்தது என்றாலும், மோதிரத்தின் மகத்தான சக்தியைக் கொண்டு, தான் மட்டும் தப்பிக்கும் சுயநலமான எண்ணத்தை முகுந்தன் தனக்குள் புகுத்திக் கொள்ளவில்லை.

இப்படிப்பட்ட கொடுமையான இடத்தில் மாட்டிக் கொண்டு விட்டோமே என்கிற கவலை இருந்தாலும், என்னைப் போல கடத்தப்பட்டு வந்த இந்தச் சின்னச்சிறு பிள்ளைகளையெல்லாம் இங்கிருந்து எப்படியும் காப்பாற்றியாக வேண்டும் என, நினைத்தான்.

பெரிய பெரிய பார்சல்களை நான்கு நான்கு சிறுவர்களாகத் தூக்கி வந்து லாரியின் அருகில் வைப்பதும், அப்படித் தூக்க முடியாத சிறுவர்களை அடியாள், அடிப்பதும் காண்பதற்கே சங்கடமாக இருந்தது.

அடியாளின் அருகில் வந்தான் முகுந்தன்.

''ஐயா... யாரையும் அடிக்காதீங்க... இந்தப் பார்சல்களை நீங்க சொல்ற நேரத்துக்குள்ள லாரியில ஏத்திக்கறோம்,'' என்றான் முகந்தன்.

''புதுசா வந்தவன், இவங்களால இந்தப் பார்சல்களைத் தூக்கி லாரியில் அடுக்கி வைக்க விடியற்காலை ஆறுமணி ஆயிடும். தெரியுமா உனக்கு?'' என்றான் அடியாள்,

''நீங்க போங்க, நான் பாத்துக்கறேன்.''

''என்ன பாத்துக்குவே, விடியறதுக்குள்ள லாரியில் ஏத்திடுவியா?''

''ஏத்திட்டா மீதி நேரத்துல இவங்களைத் தூங்கச் சொல்லிக்கலாமா?''

''இதை ஏத்தின பிறகுதான் தூங்கணும்னு இந்தக் கம்பெனி உத்தரவு. எத்திட்டா தூங்கிக்கலாம்,'' என்றான்.

''சரி நீங்க போங்க, ஏத்திக்கறோம்.''

''ஏத்தலைன்னா?''

''நீங்க கொடுக்கற தண்டனையை நான் ஏத்துக்கறேன்.''

''உண்மையாவா?''

''உண்மையாகத்தான்?''

''இதோ பார்... அப்படிச் செய்யாம விட்டா உனக்கு மட்டுமில்ல, இங்க நிக்கற இருபது பேருக்கும் ஆறு ஆறு சவுக்கடி விழும். அதோட ஒரு நாள் குடிக்கத் தண்ணி கூடக் குடுக்காமப் பட்டினி போட்டிடுவோம் தெரியுமா உனக்கு!''

''நான் சொன்னா செய்து காட்டுவேன். ஆனா, நீங்க இங்கிருந்து போயிடணும்... சரியா காலையில் ஆறு மணிக்கு வந்து பாருங்க.''

அடியாளுக்கு முகுந்தனின் வாக்கில் சற்று நம்பிக்கை வந்தது. விடிய விடியக் கண்விழித்து காவல் காக்க வேண்டியதில்லை. தானும் கொஞ்ச நேரம் உறங்கி எழலாம் என, நினைத்த அடியாள் அங்கிருந்து சென்றான்.

இருபது சிறுவர்களின் ஒருவன் முகுந்தனின் முன் வந்து நின்றான்.

''யார் நீ? உன் பேர் என்ன?'' எனக் கேட்டான்.

''நான் முகுந்தன். நீ யார்? எந்த ஊர்? எனக் கேட்டான்.

''என் பேர் குமார். என் ஊர் கிருஷ்ணகிரி. ஸ்கூலுக்குப் போகாம ஒரு மரத்தடியில் உட்கார்ந் துட்டு இருந்தேன். ஒரு சிகப்புல் கலர் ஜீப் வந்துச்சு! பிஸ்கட்டும் குடிக்க கூல்ட்ரிங்கும் தந்தான் ஒரு ஆள். வாங்கி சாப்பிட்டேன். அதுக்கப்புறம் என்ன நடந்துச்சுன்னு தெரியலை, தூக்கமா வந்துச்சு, தூங்கிகிட்டேன். கண்விழிச்சப்ப இங்க இருக்கேன். எப்போதும் வேலை செய்துக் கொண்டே இருக்க சொல்வாங்க. அடிப்பாங்க, சாப்பிட தர மாட்டாங்க, ராத்தரி தூங்க விட மாட்டாங்க! வந்து ஆறுமாசம் ஆச்சு.'' எனக்கூறி அழுதான்.

''கவலைப்படாதே! உங்களை நான் காப் பாத்தறேன்,'' என்றான் முகுந்தன்.

''எப்படிக் காப்பாத்துவே! தப்பிக்க நெனைச்சா சூடு போட்டிடுவாங்க, இங்க பார் என் காலை,'' என்று தன் காலை கட்டினான்.

காலில் சூட்டுக்காயம் தெரிந்தது.

''எல்லாரும் இப்படி ஓரமா உட்காருங்க. இந்தப் பார்சல் பூராவையும் நான் ஒருத்தனே லாரியில ஏத்தறேன்,'' என்றான் முகுந்தன்.

''நாலுபேர் சேர்ந்தாலே ஒரு பார்சலைத் தூக்க முடியாது. அதுவும் உன் ஒருத்தனால லாரியில் ஏத்த முடியுமா?''

''என்னால முடியும்... நீங்க இப்படி உட்காருங்க,'' என்றான்.

இருபது சிறுவர்களும் என்னதான் செய்கிறான் பார்க்கலாம் என, நினைத்து ஒரு இடத்தில் உட் கார்ந்தனர்.

'மாய மோதிரமே, இத்தனை பார்சலைகளையும் கொஞ்ச நேரத்திற்குள் நான் லாரியில் ஏற்றி அடுக்கும் சக்தியை எனக்குக் கொடுக்க வேண்டும்' என வேண்டிக் கொண்டான்.

அதன்பிறகு பார்சல்களை சர்வ சாதாரணமாகத் தூக்கித் தூக்கி லாரியில் வீசினான். ஏதோ, சாதாரண பந்தைத் தூக்கி வீசுவது போல் வீசினான். ஒவ்வொரு பார்சலும் அடுக்கி வைப்பது போல் லாரியினுள் விழுந்து நிமிர்ந்தது.

நினைத்தே பார்க்காத நேரத்திற்குள் முகுந்தன் பார்சல்களை விரைவாகத் தூக்கிப் போட்டு லாரியில் ஏற்றினான். பெரிய தார்பாயைப் போட்டு கயிற்றால் இழுத்துக் கட்டினான்.

இங்கு என்ன வினோதம் நடக்கிறது? காண்பது நிஜமாக, கனவா எனப் புரியாமல் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள், எதுவும் பேச முடியாமல் வாய்பிளந்து முகுந்தனைப் பார்த்தனர்.

-9 தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us