தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய விழிகள்! (10)

மாய விழிகள்! (10)

மாய விழிகள்! (10)


PUBLISHED ON : செப் 16, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 16, 2023


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: தோப்பு கிணற்றில் தண்ணீர் குடித்த சிறுமியர் தியாவும், அனுவும் பார்வையில் வெவ்வேறு சக்திகள் பெற்றிருந்தனர். அனுவின் ஊருக்கு சென்றபோது வழியில் மர்ம வேனை துப்பறிய முயன்றனர். அங்கிருந்தவர்கள் கண்ணில் பட்டதால் பதற்றம் அடைந்தனர். இனி -

வேனில் இருந்த டிரைவர் பதற்றத்துடன், ''என்ன சொல்ற... இங்கிருந்து யாரும் வெளில போகலை...'' என்றான்.

''அப்படியா... வேனில் குழந்தைகள் எண்ணிக்கை சரியா இருக்கா... அப்போ இது வேற பிள்ளைங்களா... அவங்கள விட்டா பிரச்னையாயிடுமே... சரி... சரி... வேனை நல்லா பூட்டிட்டு அந்த ரெண்டு பேரையும் தேடி பாரு... நாங்களும் இங்க தேடுறோம். எக்காரணத்திற்காகவும் அவங்கள விட்டுடக் கூடாது...'' என்றபடி, மொபைல் போனை அணைத்து பாக்கெட்டுக்குள் போட்டான்.

''டிரைவர் என்ன சொல்றான் செல்வா அண்ணா...''

''வேன்ல பிள்ளைங்க சரியா இருக்காங்களாம்; இந்த ரெண்டு பேரும் வேறு சிறுமியர்...''

''இவங்க எங்க இருந்து வந்ததுங்க...''

''தெரியலையே... வா தேடுவோம்...''

மரம், புதர்களுக்கு இடையே எட்டி பார்த்தபடி, தேடலை தொடர்ந்தனர்.

''செல்வா அண்ணா... நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து தேடுவதை விட, தனித்தனியா தேடலாமா...'' என்றான் கூட வந்தவன்.

''அதுவும் நல்ல யோசனை தான் வீரா. நீ வலது பக்கமா இந்த ஒத்தையடிப் பாதை வழியா சென்று பார்க்கிறியா...''

அவர்களில் வீரா என்பவன் பிரிந்து சென்றான்.

அடர்ந்த மரக்கிளையினுள் மறைவாக நின்றிருந்த தியாவும், அனுவும் சற்று பதற்றத்துடனேயே இந்த நிகழ்வுகளை கவனித்தபடி இருந்தனர்.

''நாம இருக்கிற இடம் ரொம்ப பாதுகாப்பானது அக்கா. எப்படி பார்த்தாலும், நம்மை கண்டுபிடிக்க முடியாது...''

''இப்போ என்ன செய்றது...''

''அவங்க இங்கேயே சுத்தி சுத்தி வராங்க... எவ்வளவு நேரம் தேடுகின்றனர் என்று பார்க்கலாம்... எப்படியும் ஒரு கட்டத்தில் சோர்வடைந்து விடுவர் தானே...''

இருவரும் காத்திருந்தனர்.

''அனு எனக்கு ஒரு யோசனை...''

''சொல்லுக்கா...''

''உனக்கு பொருட்களை அசையாமல் இருக்க வைக்கும் சக்தி இருக்கிறது அல்லவா... அதை பயன்படுத்தி, ஒருவனை அப்படியே நிற்க வைக்க முடியுதா என்று பார்...''

''இவனை அசையாமல் நிற்க வைத்து நாம் ஓடி விடலாமா...''

''ஓடலாம்... ஆனால், இன்னொருவன் சுற்றிக் கொண்டிக்கிறானே... தவிர ஓட்டுனர் வேறு நம்மை தேடி வந்து கொண்டிருக்கிறான்...''

''அப்போ என்ன செய்வது...''

''முதலில், உன் சக்தியை பயன்படுத்தி, அவனை அசையாமல் நிற்க வைக்க முடிகிறதா என்று பார்...''

அவனை உற்று பார்த்தாள் அனு.

அவள் கண் முன் புகை மூட்டம் தோன்றியது. அவன் தோற்றம் மங்கலாகியது.

நடந்து கொண்டிருந்த அவன், அடுத்த வினாடியே, அசையாமல் சிலை போல நின்றான்.

''அருமை...''

உற்சாகமாய் கிசுகிசுத்தாள் தியா.

''கண்ணை சிமிட்டி விடாதே...''

அவனை உற்று பார்த்தபடியே கேட்டாள் அனு.

''என்ன செய்யலாம்...''

''இரு... நான் சென்று அவன் வைத்திருக்கும் மொபைல் போனை எடுத்து வருகிறேன்...''

''மொபைலை எடுக்க போகிறாயா...''

''ஆமாம்... இதனால், நமக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். முதலில், அவன் ஓட்டுனருடன் தொடர்பு கொள்வது தடுக்கப்படும். இரண்டாவது நாம் வெளியில், மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள, நமக்கும் ஒரு போன் கிடைக்கும்...''

''வாவ்... சூப்பர் அக்கா...''

''நீ கண்ணை மட்டும் சிமிட்டிடாதே அனு...''

''மாட்டேன்... அப்படியே பார்த்துக் கொண்டிருக்கிறேன். நீ சென்று மொபைலை எடுத்து வா...''

கவனத்துடன் மெதுவாக இறங்கி, சுற்றும் முற்றும் பார்த்து, அவனை நோக்கி சென்றாள் தியா. அவன் பையில் இருந்த மொபைலை தியா எடுக்க முயன்ற போது, அதிர்ச்சி அடையும் வகையில், ஒரு சம்பவம் நிகழ்ந்தது.

அசைவின்றி சிலை போல் நின்று கொண்டிருந்தவன் அணிந்திருந்த உடைகளும், இறுகி அசைவின்றி இருந்தன.

பேன்ட் பாக்கெட்டினுள் தியாவால் கையை நுழைக்க முடியவில்லை.

உற்று பார்த்த அனுவின் பார்வையால், அவன் சிலையாகி போனபோது, அவன் அணிந்திருந்த உடைகளும், அப்படியே ஆகி இருந்ததை உணர முடிந்தது.

அவன் பாக்கெட்டில் இருக்கும் மொபைலை எடுக்க முடியாது என்பதை புரிந்த தியா, சட்டென அங்கிருந்து விலகி, அவசரமாக மறைந்திருந்த மரத்துக்கு வந்தாள்.

அவள் பாதுகாப்பாக வந்து மறைந்து கொள்ளும் வரை கண் சிமிட்டாமல் கவனித்துக் கொண்டிருந்தாள் அனு. அதன்பின், கண்களை சிமிட்டினாள்.

சட்டென உடலை உதறிய அவன், என்ன நடந்தது என்று புரியாமல் சுற்றும் முற்றும் பார்த்தான். கை, கால்களை அசைத்து உதறினான்.

சில வினாடிகள் என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ள முடியாத அவன், தன் மொபைலை எடுத்து டயல் செய்து பேசினான்.

''வீரா... உடனே வா...'' என்றான் பதற்றத்துடன்.

எதிர்முனையில், 'எங்கே இருக்கிறாய்...' என்று வீரா கேட்டிருக்க வேண்டும்.

''அதே இடத்தில் தான் இருக்கிறேன். வா சீக்கிரம்...'' என்றான் பதற்றம் குறையாமல்.

சுற்றி சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்து சில நிமிடங்களில் அவனை அணுகினான் வீரா.

''என்ன அண்ணா பதற்றமா இருக்க...''

''என்ன ஆச்சுன்னு தெரியல வீரா... திடீரென்று நான் அப்படியே சிலை மாதிரி நின்னுட்டேன். கை, கால்களை அசைக்க முடியவில்லை. ஒரு மாதிரி இயக்க நிலையில் இருந்தேன். இப்போ தான் சரியாச்சு...''

''இப்போ ஒன்றும் பிரச்னை இல்லையே...''

''பிரச்னை இல்லை. ஆனால், என்ன நடந்தது என்று தான் புரியவில்லை...''

''மயக்கம் வந்து விட்டதா...''

''இல்லை வீரா... எனக்கு நினைவு அப்படியே தான் இருந்தது. நடப்பதை எல்லாம் என்னால் உணர முடிந்தது.

ஆனால், கை, காலை மட்டும் அசைக்க முடியவில்லை. கையை துாக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், முடியவில்லை...''

''இப்போ பரவாயில்லையா...''

''ஆமாம்...''

''தனியாக போவதும் ஆபத்து என்று தோன்றுகிறது...''

- தொடரும்...

- ஜே.டி.ஆர்.,

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us