தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மாய விழிகள்! (12)

மாய விழிகள்! (12)

மாய விழிகள்! (12)


PUBLISHED ON : செப் 28, 2023

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 28, 2023


Follow on Google
அ நிறம் | அளவு

முன்கதை: தோப்பு கிணற்றில் தண்ணீர் குடித்த சிறுமியர் தியா, அனு வினோத சக்தி பெற்றிருந்தனர். கிராமத்துக்கு சென்ற வழியில் பார்த்த மர்ம வேன் பற்றி துப்பு துலக்க முயன்றனர். இதை கவனித்தவர்களிடம் இருந்து தப்ப வழி தேடினர். இனி -



தப்பும் வழிமுறையை விளக்கிக் கொண்டிருந்தாள் அனு.

வியப்புடன், ''சூப்பர்... அதை எப்படி செய்வது...'' என்றாள் தியா.

''இங்கிருந்து எதையாவது துாக்கி எறிய வேண்டியது தான்...''

''கல்லை துாக்கிப் போடலாமா...''

''கல் விழும் சத்தம் சரியாக கேட்காது. ஓடும் போது வரும் உணர்வை ஏற்படுத்த கூடிய சத்தத்தை தான் உருவாக்க வேண்டும். மரத்துண்டுகள் தான் அதற்கு உதவும்...''

அங்கே கிடந்த நான்கு மர துண்டுகளை எடுத்தாள் அனு. புதரில் படர்ந்து இருந்த ஒரு நீளமான கொடியை பிடுங்கி, அதன் இலைகளை உதிர்த்தாள். அது கயிறு போல தென்பட்டது. நான்கு மரத்துண்டுகளையும் ஒன்றாக வைத்து, அந்த கொடியை சுற்றினாள்.

''அக்கா... இப்போது இதை துாக்கி வீசலாம். இது விழும் திசையை நோக்கி அவர்கள் வருவர். நாம் அதற்கு எதிர் திசையில் சென்று விட வேண்டும். ஆனால், ஓடும் போது சத்தம் ஏற்பட்டு விட கூடாது சரியா...''

''புரிகிறது... ஆனால், இதை கட்ட வேண்டாமா... வெறுமனே சுற்றி வைத்திருக்கிறாயே...''

''இல்லை அக்கா... கட்டினால் மொத்தமாக போய் விடும். மேலும், 'பொத்' என்று ஒரு சத்தம் தான் கேட்கும். கட்டாமல் கொடியில் சுற்றி கவண் கல் போல, துாக்கி வீசினால், இந்த மரத்துண்டுகள் அடுத்தடுத்து விழும். அது ஓடுவது போல சத்தத்தை ஏற்படுத்தும்...''

திட்டத்தை சொன்ன அனுவை ஆச்சரியமாக பார்த்த தியா அதை செய்ய முயன்றாள்.

அந்த கொடியின் ஒரு முனையை உறுதியாக பிடித்து, மரத்துண்டுகளுடன் கூடிய முனையை சுற்றி சுழற்றி லாவகமாக வீசி எறிந்தாள் தியா.

கொடி அவள் கையிலேயே இருந்து விட, மரத்துண்டுகள் மட்டும் தொலைவில் வரிசையாக விழுந்தன. அனு சொன்னது போலவே, 'தட...தட...' என ஓடுவது போன்ற சத்தம் ஏற்பட்டது.

அடுத்த வினாடி எதிர் திசையில் இருவரும் விரைந்தனர்.

அந்த திட்டம் எதிர்பார்த்த பலனை கொடுத்தது.

மரத்துண்டுகள் விழுந்த திசையை நோக்கி, செல்வாவும், வீராவும் ஓடினர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பாதுகாப்பான துாரத்திற்கு, அனுவும், தியாவும் வந்து விட்டனர்.

''இதற்கு மேல் காட்டுக்குள் நாம் இருக்கும் இந்த இடத்தை கண்டுபிடித்து வர அவர்களால் முடியாது...''

புன்னகைத்தாள் அனு.

''வேன் நிற்கும் இடத்தை விட்டு தள்ளி வந்து விட்டோமா அனு...''

''இல்லை அக்கா... இங்கே உள்ள பாதைகள் எல்லாம் சுற்றி சுற்றி இந்த காட்டுக்குள்ளேயே தான் வந்து கொண்டிருக்கும். எப்படி பார்த்தாலும், நாம் இருக்கும் இடத்தில் இருந்து அரை கி.மீ., சுற்றளவில் தான் வேன் இருக்கும்...''

''ஓ... கால் வலிக்கிறது. கொஞ்சம் உட்காரலாமா அனு...''

அங்கிருந்த பெரிய கல் மீது உட்கார்ந்தனர்.

''அடுத்து என்ன செய்வது அக்கா...''

''நம் தோழியரை மீட்பது தான் முதல் வேலை...''

''இந்த குண்டர்களிடம் இருந்து அவர்களை காப்பாற்ற வேண்டுமே...''

''வெளி உலக தொடர்பு நமக்கு தேவை... இங்கே இப்படி ஒரு குற்றம் நடக்கிறது என்ற விஷயம் போலீசுக்கு தெரிய வேண்டும். அவர்கள் உதவி நமக்கு முக்கியம்...''

''எப்படியாவது ஊருக்குள் போய் பூசாரி ஐயாவிடம் விஷயத்தை சொல்ல வேண்டும். அவர் ஊர் மக்கள் துணையுடன், இதற்கு முடிவு கட்டுவார்...''

''சரி... ஊருக்குள் எப்படி போவது...''

''இங்கிருந்து நாலைந்து ஒற்றையடி வழித்தடங்கள் இருக்கின்றன. அவர்கள் கண்ணில் படாதவாறு விலகி, ஒரு பாதை வழியாக போய் விடலாம்...''

''எவ்வளவு நேரம் ஆகும்...''

''அரை மணிநேரம் கூட ஆகாது. பக்கத்தில் தான் இருக்கிறோம்...''

''சரி வா போகலாம்...'' என்று எழுந்தாள் தியா.

இருவரும் ஊருக்கு செல்லும் ஒத்தையடி பாதை வழியாக நடக்க ஆரம்பித்தனர்.

அதேசமயம், செல்வாவும், வீராவும் இருவரையும் தேடிக் கொண்டிருந்தனர்.

''செல்வா அண்ணே... அந்த பொண்ணுங்க தப்பிச்சு போய்ட்டாங்கன்னு தோணுது...''

''ஆமா வீரா... அதுங்க கிராமத்து பொண்ணுங்க. காட்டு வழியெல்லாம் நல்லா தெரிஞ்சதுனால சுலபமா தப்பிச்சு ஓடிட்டாங்க...''

''எவ்வளவு நேரம் தான் தேடுவது...''

''ஆமாம்... நேரம் ஆகியபடியே இருக்கு... முதலில் வேன் இருக்கும் இடத்திற்கு சென்று விடலாம்...''

அவர்கள் திரும்ப எத்தனித்த போது தான், எங்கே இருக்கிறோம் என்பதே தெரியவில்லை என உணர்ந்தனர்.

''வேனை விட்டு ரொம்ப துாரம் வந்துட்டோமோ...''

''அப்படித்தான் நினைக்கிறேன் செல்வா அண்ணே... வந்த வழியே திரும்பிடலாம்...''

அவர்கள் வந்த வழியே திரும்பிய போது, திசையோ, வழியோ தெரியாமல் தவித்தனர்.

''ஒரே மரம், செடி, கொடியுமா இருக்கு. எந்த பக்கம் இருந்து வந்தோம்னே புரியலையே...''

''என்ன செய்வது...''

''டிரைவருக்கு போன் செய்யலாம்...''

மொபைலை எடுத்து, டயல் செய்தான் செல்வா.

''சிக்னல் ரொம்ப வீக்கா இருக்கு... 'ரிங்' போற சத்தமே விட்டு விட்டு தான் கேட்கிறது...''

சில நொடிகளில் டிரைவர் லைனுக்கு வந்தான்.

''வேன் எங்கே இருக்கு...''

''அதே இடத்தில் தான்...''

''நீ எங்கே இருக்கிறாய்...''

''வேன் பக்கத்துல தான்... சரி அந்த பிள்ளைங்க கிடைச்சாங்களா...''

''இல்லை... காட்டுக்குள்ள தேடுவது கஷ்டம்...''

''இப்போ என்ன செய்யறது...''

''வேனில் இருக்கிற குழந்தைகளை அழைத்து போயிடலாம். அப்புறமா இந்த ரெண்டு பேரையும் தேடலாம்...''

''நீங்க எங்கே இருக்கிறீங்க...''

''எங்கே இருக்கிறோம் என்றே புரியல்ல. வேனுக்கு வர வழி சரியா தெரியல...''

''நான் லொகேஷன் மேப் அனுப்புறேன்; பார்த்து சீக்கிரம் வந்துருங்க...''

அடுத்த சில நொடிகளில் மேப் வந்தது.

செல்வா பார்த்தான்.

''என்ன வீரா இது... மூணு மணி நேரம் காட்டுது. அவ்வளவு துாரம் வந்திருக்க மாட்டோமே...''

''ஆமா அண்ணா...'' என்ற வீரா அந்த மேப்பை எட்டி பார்த்தான்.

''இங்கே மேப்பில் இருக்கிற வழி சுத்துப் பாதையா இருக்கு. குறுக்கு வழி எதையும் இது காட்டல. ஆனா, வேன் இருக்கிற இடம் தெரியுது இல்ல... அதை பார்த்து இங்கே இருக்கிற ஒத்தையடி பாதை, எதையாவது பிடிச்சு போயிட வேண்டியது தான்...''

அவன் சொல்வது சரி எனப்பட்டது. இருவரும் வேனை நோக்கி நடந்தனர்.

ஆனால், தியாவின் திட்டம் வேறாக இருந்தது.



- தொடரும்...- ஜே.டி.ஆர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us