தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மல்லன் மாறப்பன்! (08)

மல்லன் மாறப்பன்! (08)

மல்லன் மாறப்பன்! (08)


PUBLISHED ON : அக் 10, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 10, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மாறப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாறப்பனை காண வந்த திம்மராயன், உன்னை அடிமையாக்கிக் கப்பலில் பணியாற்ற கொண்டு போவதாக அறிகிறேன் என்று கூறினான். மற்ற கைதிகளோடு மாறப்பனையும் கப்பலில் ஏற்ற அழைத்து வந்தனர். இனி-



போர்த்துக்கீசியக் கப்பல் வங்கக் கடலில் நின்று கொண்டிருந்தது பயணத்துக்கு ஆயத்தமாக. விசாகைத் துறைமுகத்திலிருந்து இந்தியப் பொருள்களையும், அடிமைகளையும் ஏற்றிக்கொண்டு நங்கூரம் பாய்ச்சி, பாய்மரம் விரித்துப் பயணித்து, மேற்குக் கடற்கரையிலிலுள்ள சூரத் நகரத்துக்குச் சென்று, பிறகு அங்கிருந்து போர்த்துகலுக்குச் செல்ல வேண்டும்.

கட்டுமஸ்தான உடலும், வலிமையும் கொண்ட இந்திய இளைஞர்கள் மீது, குற்றவாளி முத்திரை குத்தி அடிமையாக்கிக் கப்பல்களில் பணியாற்ற, அவர்களைக் கடத்திக் கொண்டு போவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் பறங்கியர். அந்தச் சூழ்ச்சிக்கு மாறப்பனும் பலியானான்.

ஒருமுறை அவர்கள் கப்பலில் ஏறி விட்டால் மறுபடியும் உயிரோடு கரையில் இறக்கமாட்டார்கள். அவர்கள் வாழ்வு கப்பலிலேயே முடியும். இறந்தவர்களைக் கடலில் வீசிவிடுவர். ஆகவே, எந்தக் கைதியும் பறங்கியரின் கப்பலில் பணியாளராகப் போக விரும்ப மாட்டான்.

இதையெல்லாம் இருள்சிறையில் தன்னோடு இருந்த கிழவர் கூறக் கேட்ட மாறப்பன், கப்பலில் ஏற்றப்படுவதிலிருந்து எப்படியாவது தப்பி விட ஏதாவது மார்க்கமிருக்கிறதா என்று துறைமுகப் பகுதியை ஆராய்ந்தான். பழக்கமில்லாத இடத்தில் அவனுக்கு எதுவும் தெரியவில்லை. அப்போது-

''ஓய், எங்கே ஒதுங்குகிறாய்? போய்ப் படகில் ஏறு!'' என்று போர்த்துக்கீசிய காவல் துறை மாலுமி கையிலுள்ள சவுக்கைச் சொடுக்கியபடி கத்தினான்.

விலங்கிடப்பட்ட கைகள் ஆத்திரத்தினால் முறுக்கேற, பேசாமல் மற்ற கைதிகளுடன் மாறப்பனும், படகில் ஏறவேண்டியதாயிற்று. அடிமைக் கைதிகளை ஏற்றிச் சென்ற படகுகள், கடலில் பயணத்துக்குத் தயாராக நின்ற கப்பல் அருகே போய் நின்றதும், கப்பலிலிருந்து தொங்கிய நூலேணிகள் மூலம் கைதிகள் கப்பலுக்கு அனுப்பப் பட்டனர்.

அது அதிகாலை வேளை... மூடுபனி விலகாத நேரம். கொத்தடிமைகளைக் கப்பல் தலைவரிடம் ஒப்படைத்து விட்டுப் படகுகள் திரும்பின. கப்பல் தளத்தில் அடிமைகள் வரிசையாக நிறுத்தப்பட்டனர் கப்பலின் கேப்டன் பார்வையிடுவதற்காக. அவர்களை விறைப்பாக நிற்கும்படி அதட்டிக் கொண்டிருந்தான் ஒரு பறங்கிய மாலுமி.

கப்பலின் தலைவன் தனது அதிகார உடையில் கம்பீரமாக நடந்தபடி, அடிமைகளைப் பார்வையிட்டான். அவர்களுடைய வலுவான உடல் அவனிடம் திருப்தியை ஏற்படுத்திற்று. தாடி மீசை மண்டிய அந்தக் கிழவனைக் கண்டதும் முகம் சுளித்தவன், 'இந்த கிழவனை எதற்காக அனுப்பினர். இவனால் எந்த வேலையும் செய்ய முடியாதே... கப்பலுக்குப் பாரம், உணவுக்கும் சேதம்!' என்று முணுமுணுத்தான்.

'ஏதோ முக்கிய அரசியல் காரணமாக இருக்க வேண்டும். இவன் தரையிலிருப்பத னால் தொல்லை ஏற்படும் என்று கப்பலில் ஏற்றிவிட்டிருக்கலாம்' என்று சமாதானம் கூறிக் கொண்டவன் கைதிகளை நோக்கிக் கூறினான்.

''தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டிய உங்களை எங்கள் அரசாங்கம் கருணை காட்டி, கப்பலில் பணியாற்ற அடிமைகளாக அனுப்பி இருக்கிறது. கப்பலின் விதிமுறைகளை மீறினாலோ, கப்பல் ஊழியர்களைத் தாக்கிக் கலகம் விளைவிக்க முயற்சித்தாலோ, தப்பியோட யத்தனித்தாலோ அந்தக் கணமே தூக்கிலிடப்படுவீர்கள் என்பது நினைவிருக் கட்டும்!''

இவ்வாறு அகம்பாவமாகக் கப்பலின் கேப்டன் பேசியதைக் கேட்ட அந்த முதியவர் ஆவேசம் வந்தவரைப் போலக் கத்தினார்.

''நான் செத்தாலும் என் தாய் நாட்டின் மண்ணிலேதான் சாவேன். இந்த அந்நியக் கப்பலில், பறங்கியரிடையே அடிமையாகி அவதிப்பட்டுச் சாக மாட்டேன். எனக்கு வேண்டும் விடுதலை... விடுதலை!'' என்று வெறி பிடித்தவரைப் போல வரிசையிலிருந்து வெளிப்பட்டு ஓடலானார்.

ஸ்தம்பித்துப் போன கப்பல் தலைவன், சுதாரித்துக் கொண்டு, ''பிடியுங்கள் அவனை... அடித்து வீழ்த்தி அமுக்குங்கள்!'' என்று தன் மாலுமிகளுக்கு ஆணையிட்டான். அடுத்த வினாடி ஒரு பறங்கிய மாலுமி, முளைக் கட்டை ஒன்றை எடுத்து ஓடும் கிழவரை நோக்கி வீசினான். உறுதியான அந்தக் கட்டை, குறிதவறாமல் கிழவரைத் தாக்க, அவர் 'ஆ' என்று அலறியபடி கப்பல் தளத்தில் அடிபட்ட பறவையைப் போல விழுந்தார்.

''அந்த நாயைப் பாய்மரக் கம்பத்திலே கட்டி, ஐம்பது கசையடி கொடுங்கள்!'' என்று உத்தரவிட்டான் கப்பல் தலைவன். துவண்டு கிடந்த கிழவரை தூக்கி, அவரது மேல் சட்டையைக் கிழித்து வெற்றுடம்பாக்கி, பாய்மரக் கம்பத்திலே இரு கைகளையும் இணைத்துப் பிணைத்துக் கட்டினர். அரக் கனைப் போன்றிருந்த ஒரு போர்த்துக்கீசிய மாலுமி, தோல் நாக்குகளைக் கொண்ட நீண்ட சவுக்கை ஒருமுறை, 'பளீர்' என்ற காற்றிலே சொடுக்கி ஒலி எழுப்பி விட்டு, கிழவரின் உடலிலே சவுக்கைப் பதிக்கலானான்.

ஒவ்வோர் அடிக்கும் கிழவரின் உடல் துள்ளியது. வேதனைக் குரல் ஓலமிட்டது. அவர் முதுகில் ரத்தக் கோடுகள் வரிகட்டின. இந்த சித்திரவதை கொடுமையை மாறப்பன் கண்கள் சிவக்க, நெஞ்சம் துடிக்கப் பார்த்துக் கொண்டு நின்றான். சங்கிலி கொண்டு பிணைக்கப் பட்டிருந்தன அவன் கைகள், ஏதும் செய்ய முடியாதபடி.

''என் நாட்டில் பிழைக்க வந்த இவர்கள் எங்களை எப்படிக் கொடுமைப்படுத்துகின்றனர். இந்த அரக்கர்களிடமிருந்து தப்ப வழியே கிடையாதா?'' ஆத்திரப்பட்டான் மாறப்பன்.

ஐம்பது கசையடிகளைக் கொடுத்து நினைவிழந்து தொங்கிய கிழவர் மீது கடல் உப்பு நீரை வாளியினால் வாரி அடித்து, மற்ற கைதிகளிடம் அவரை ஒப்படைத்தனர். அனை வரும் கப்பலின் கீழ்த் தளத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மிருகங்களை அடைப்பது போல இருட்டான சிறிய இடத்தில் கைதிகள் அடைக்கப் பட்டனர். வேலை செய்யும் போதும், உணவு வேளையிலும் மட்டுமே அவர்களுடைய கைவிலங்குச் சங்கிலிப் பிணைப்பு அகற்றப்படும். இரவு வேளையில் கைகளில் நீண்ட சங்கிலிப் பிணைப்பை மாட்டிப் பூட்டி விடுவர். கைகளை தாராளமாக அசைக்கலாம். ஓரளவு செயல் படுத்தலாம்.

இந்தியக் கைதிகளைப் பறங்கியர் மிகக் கேவலமாக மதித்துக் கொடுமைப்படுத்தி வேலை வாங்கினர். உணவில் கூடத் தார தம்யம் காட்டப்பட்டது. பறங்கிய மாலுமிகளுக்குத் தரப்படும் உணவு, இந்தியக் கைதிகளுக்குத் தரப்படுவதில்லை. வெறும் கஞ்சி மட்டுமே. இந்தியர்களுக்கு அதுவும் குமட்டும். முகம் சுளித்து முணுமுணுக்கும் அடிமைகளை, ''விருந்துச் சாப்பாடு கிடைக்கும் என்று எதிர் பார்த்தியா?'' என்று ஏளனமாகச் சிரித்தனர்.

அப்பாவிகளான இந்தியக் கைதிகளை வீண்வம்புக்கிழுத்து சண்டையை உருவாக்கி அந்தச் சாக்கில் அவர்களை அடித்துக் காயப்படுத்தி மகிழ்ந்தனர். இதையெல்லாம் காணக் காண மாறப்பன் ரத்தம் கொதித்தது.

ஒருநாள்...

''என்னடா முழங்கையாலே தள்ளறே?'' என்று உணவுக் கூடத்தில் ஒரு பறங்கிய மாலுமி மாறப்பனை முறைத்தான். கையில் உணவுத் தட்டு. அதில் கொதிக்கும் கஞ்சி மாறப்பனின் உள்ளத்தைப் போல. அதை அப்படியே வீண் வம்புக்கிழுத்துக் குழப்பம் செய்ய நினைக்கும் அந்த மாலுமியின் முகத்தில் மொத்தினான்.

'ஐயோ!' என்று அலறிய போர்த்துக்கீசிய மாலுமியின் குரலுக்கு, பறங்கிய மாலுமிகள் வந்து மொய்த்துக் கொண்டனர் மாறப்பனை சுற்றி. உணவு வேளையாதலால் அவன் கைச் சங்கிலி விலங்கு அகற்றப்பட்டிருந்தது.

கப்பலில் கொண்டு வந்து அடிமையாக்கியதும், அடுத்தடுத்த தினம் நிகழும் கொடுமைகளினாலும் எரிமலையாகிக் குமுறிக் கொண்டிருந்த மாறப்பனின் உணர்ச்சிகள் வெடித்தன.

நரம்புகளில் முறுக்கேறியது.

''மனித மிருகங்கள்! வாங்கடா உங்கள் கை வரிசையைக் காட்டுங்கடா... மற்றவர்களை அடித்து ஆனந்தப்பட்டீர்களில்லையா? இன்று உங்களை அழ வைக்கிறேன்... வாங்கடா!'' என்று இருகைகளையும் முஷ்டியாக்கிக் கொண்டு குதித்தான்.

ஒரு இந்திய அடிமையிடமிருந்து இப்படியோர் எதிர்ப்பை, சவாலை எதிர்ப்பார்க்காத போர்த்துக்கீசிய மாலுமிகள் ஒரு கணம் திகைத்தனர். மறுகணம் அவர்களில் குண்டோதரனைப் போலிருந்த ஒரு முரட்டு மாலுமி மாறப்பனை நோக்கி முன்னேறினான்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us