தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மல்லன் மாறப்பன்! (10)

மல்லன் மாறப்பன்! (10)

மல்லன் மாறப்பன்! (10)


PUBLISHED ON : அக் 24, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 24, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: போர்த்துக்கீசிய கப்பலின் மாலுமிகளிடம் சண்டையிட்டு தப்ப முயன்ற மாறப்பனுக்கு கப்பல் தலைவன் இருநூறு கசையடிகளை தண்டனையாக அறிவித்தான். தண்டனைகளை நிறைவேற்றி மாலுமிகள், மாறப்பனை இருள்சிறையில் கொண்டு போய் போட்டனர். இனி-

கூரையின் பலகணிச் சட்டத்தின் இடுக்கு வழியே லேசான வெளிச்சம் அந்தச் சிறை இருட்டை மெழுகி இருந்தது. நினைவற்றுக் கிடக்கும் மாறப்பனின் உடலை உற்றுப் பார்த்தார். ஒரே ரத்த வெள்ளம். முதுகிலும், கை கால்களிலும் தோல் பிய்ந்து ரணமாகி இருந்தது. தன் ஆடையின் ஒரு பகுதியைக் கிழித்து அவன் காயங்களைத் துடைத்தார். குடிநீரைக் கொண்டு சுத்தப்படுத்தினார். காயங்களுக்கு மருந்துக்கு எங்கே போவது? அவர்கள் மாறனின் மூர்ச்சையைத் தெளிவிக்க ஊற்றிய உப்பு நீரே மருந்தாக, ரத்த ஒழுக்கை நிறுத்தி இருந்தது.

மாறப்பனின் இளமையும், வலுவான உடலும், முதியவரின் கவனிப்பும் அவன் காயங்களை விரைவில் குணமாக்கின. ஆனால், முதியவரின் உடலில் சவுக்கடியால் ஏற்பட்ட காயங்கள் காயவில்லை. வயோதிகமும், பலநாள் சிறையில் அடைபட்டு உடலும், மனமும் பலவீனப்பட்டுப் போயிருந்ததாலும் காயங்களுக்கு மருந்து ஏதும் போடாததனாலும் அவை ஆறாமல் அல்லல்படுத்தியது.

<உடல் தேறிய மாறப்பனால், முதியவருக்குத் தேறுதல்தான் கூறமுடிந்தது. அவர் உடல் காயங்களை குணப்படுத்த முடிய வில்லை.

மாறப்பன் பறங்கியரிடம் சிக்கிய காரணத்தை கேட்டார் முதியவர்.

தான் தமிழகத்திலிருந்து விஜயநகரத்துக்கு வந்த காரணத்தையும், வழியில் குத்துச் சண்டைப் போட்டியில் கலந்து கொள்ள நேர்ந்ததையும், அதனால் விளைந்த விவகாரங்களையும், பறங்கியரின் சதிக்குப் பலியாகி கைதியாகிக் கப்பலுக்குக் கடத்தப் பட்டதையும் கூறினான் மாறப்பன்.

பிறகு, ''அது போகட்டும் உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்,'' என்று அந்த முதியவரிடம் கேட்டான் மாறப்பன்.

''உங்களைப் பார்த்தால் உயர்குடியில் பிறந்தவராகத் தெரிகிறது. போர்த்துக்கீசியர்களிடம் எப்படிச் சிக்கினீர்கள்?''

''மாறப்பா, நான் ஒரு சிற்றரசன். அரண்மனையில் வாழ்ந்தவன். மனைவியை இழந்தாலும், அருமை மகள் ஒருத்தி இருக்கிறாள். இயற்கை வளம் மிகுந்தது என்னுடைய நாடு. அன்பும், விசுவாசமும் மிக்க குடிமக்கள். மகிழ்ச்சியான வாழ்க்கை. உதயகிரி மன்னரின் அன்புக்குப் பாத்திரமாக விளங்கினேன். அவர் ஆட்சியின் கீழ் செயல்பட்டேன். விதி இந்த வேளையில் விளையாடியது. மாமன்னர் கிருஷ்ண தேவராயர் உதயகிரி மீது படையெடுத்தார். உதயகிரி மன்னரின் அதிகாரத்தில் ஒரு சிற்றரசனாக இருந்த நான் உதயகிரி மன்னருக்கு உதவியாக என் படைகளுடன் போர்க்களம் போக வேண்டியதாயிற்று.

''விஜயநகர வேந்தரை எதிர்த்து போரிடப் போனதை இப்போது நினைத்தாலும் எனக்கு சிரிப்பாக இருக்கிறது. கிருஷ்ண தேவராயரிடம் பக்தியும், மதிப்பும் கொண்டவன் நான். அப்படி இருக்க, அவரை எதிர்த்து விரோதியாகப் பாவித்துப் போர் புரியப் போனது விதியின் செயல்தான். உதயகிரி மன்னருக்கு உதவ வேண்டிய கடமைப்பட்டவன் நான். ஆகவே, மகாராயருக்கு எதிராகப் போரிட வேண்டிய சூழ்நிலை...'' பழைய நினைவுகளில் மூழ்கிய கிழவர் மவுனமானார்.

மாறப்பனுக்கு, மகாராயரைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல். கிழவர் ஆசுவாசப்பட்டதும் கிருஷ்ணதேவராயரைப் பற்றிக் கூறும்படி கேட்டுக் கொண்டான். மாவீரரான மகாராயரைப் பற்றி கிழவர் அச்சுதரும் ஆர்வமுடன் பேசலானார்.

''கிருஷ்ணதேவராயரின் குணாதிசயங்களைப் பற்றி எவ்வளவோ சொல்லலாம். கண்ணியம் மிக்கவர்; பண்பாளர். அவர் வீரத்தினாலும், மதிநுட்பத்தினாலும் விஜய நகரை, சாம்ராஜ்யமாகப் பெருக்கினார். சிற்பி செதுக்கிய கற்சிலையைப் போன்ற கட்டு மஸ்தான உடல், கம்பீரமான தோற்றம்; முறுக்கிவிடப்பட்ட மீசையுடன் முகத்திலே கருணை. அவர் அழகைப் பார்த்தவர்கள், பார்த்துக் கொண்டே இருப்பர். பார்வையை அகற்ற மனம் வராது.

''அதிகாலையில் சூரியோதயத்துக்கு முன்பே துயில் கலைந்து எழுந்துவிடுவார். அரைச் சேர் நல்லெண்ணெயைக் குடிப்பார். உடலில் மேலும் எண்ணெயைத் தடவித் தேய்த்து விடுவர் மல்லர்கள். பிறகு உடற் பயிற்சிகள், வாள் போர், மல்யுத்தம், குதிரையேற்றம் செய்வார். அவர் குடித்த எண்ணெய் அத்தனையும் மயிர்க் கால்கள் வழியே வேர்வையோடு வெளியேறிவிடும். அந்த அளவுக்கு வாள்போர்ப் பயிற்சியும், மல்யுத்தமும் இருக்கும்.

''பிறகு உயர்ந்த ஜாதி அரபுக் குதிரை மீது சவாரி செய்வார். குதிரை வாயில் நுரை தள்ளக் களைத்துப் போகும். ஆனால், ராயரோ களைப் படையமாட்டார். அதன் பின் ஸ்நானம், பூஜை. பிறகு அரசியல் அலுவல்களைக் கவனிக்க தர்பார் மண்டபத்துக்குச் செல்வார். இதுதான் கிருஷ்ணதேவராயரின் தினசரி நடவடிக்கை. அரசவையில் ஆயிரம் மல்லர்கள் இருந்தனர். மல்லர்களுக்கெல்லாம் மல்லராக மகா மல்லர் என்று புகழப்பெற்றார் மகாராயர்.

''தகுதியுடையவர்கள் யாரானாலும் அவர்களைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டிக் கவுரவிக்கத் தயங்க மாட்டார் மன்னர் கிருஷ்ணதேவராயர். கலைகளையும், கலைஞர்களையும் வளர்த்தார். கற்றவர்களைக் கவுரவித்தார். அறிவாளிகள் நிறைந்த அவையாக இருந்தது மகாராயரின் அரசவை. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரைப் பற்றிக் கூறும்போது கிழவர் அச்சுதரின் கண்கள் குளமாயின.

''மகாராயரிடம் இவ்வளவு மதிப்பும், மரியாதையும் கொண்ட நீங்கள் எப்படி உதயகிரி மன்னரின் கீழ் பணியாற்றினீர்கள்?'' என்று கேட்டான் மாறப்பன்.

''அதுவும் கூட விதியின் விளையாட்டு தான்!'' என்று பெருமூச்சு விட்டார் கிழவர் அச்சுதர்.

''எனக்கு ஒரு மைத்துனன். என் மனைவியின் சகோதரன். வெங்கண்ணா என்று பெயர். என் மனைவியின் கடைசி விருப்பத்தின் படி அவனை வளர்க்கும் பொறுப்பை ஏற்றேன். அவனை என் சொந்த மகனைப் போல வளர்த்தேன். நல்ல பாம்பு என்று தெரியாமல் சேனாதிபதி ஆக்கினேன்.

''நல்ல பாம்புக்கு நாம் பால் கொடுத்து வளர்த்தாலும் அது விஷயத்தையே தரும் என்பதற்கு உதாரணமாக வெங்கண்ணா விளங்கினான். என் ஒரே மகள் அன்பு மகள் லஷ்மியைத் தன் மனைவியாக்கிக் கொண்டு, ஆட்சியையும் அடையத் திட்டமிட்டான். அதற்குத் தன் தோழன் திருமலையின் உதவியை நாடினான்,'' என்றான் அச்சுதர்.

''திருமலையா? எந்தத் திருமலை, போர்த்துக்கீசியர்களிடம் துபரஷியாக இருக்கிறானே, அந்தத் திருமலையா?'' வியப்போடு கேட்டான் மாறப்பன்.

''அந்தப்பாவியேதான். அவனுக்கு விஜய நகர அரசாங்கத்தில் செல்வாக்குண்டு. பறங்கியருக்கும், ராயருக்குமிடையே பாலமாக விளங்கியதால் கிருஷ்ணதேவராயரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவனாகவும் இருந்தான். அதன் மூலம் வெங்கண்ணா சதித் திட்டம் தீட்டினான். ராயரிடம் என்னைப் பற்றி தவறான செய்திகளைக் கூறி, அவர் மனதில் நஞ்சூட்டச் செய்தான். நான் மகாராயருக்கு எதிராகச் செயல்படுவதாக அவரை நம்ப வைத்தான் வெங்கண்ணா திருமலையின் உதவியோடு.

''உண்மை அறியாத ராயர் என்னை விரோதியாகப் பாவித்தார். என் விசுவாசத்தை அவரிடம் விளக்க எனக்கு வாய்ப்பில்லை. வெங்கண்ணாவின் சதியினால், கிருஷ்ண தேவராயரின் நட்பைப் பெறமுடியாத நான், உதயகிரி மன்னரின் கீழ் ஆட்சிபுரியும்படியாயிற்று. அதனால், அந்த நன்றிக்கடனாக அவர் பக்கமிருந்து ராயருக்கு எதிராகவும் போர்க்களம் செல்ல நேரிட்டது.

''போரின் முடிவு தெரிந்த விஷயம்தானே. கிருஷ்ணதேவராயரை எதிர்த்தவர்கள் யாரும் வெற்றி பெற்றதில்லை. உதயகிரி மன்னரின் படைகள் ஓட்டமெடுத்தன. உதவிக்குப் போன நான் உயிர் தப்பினேன். ஆனால், ஊர் திரும்பவில்லை,'' என்றார் அச்சுதர்.

''அதெப்படி?'' என்று கேட்டான் மாறப்பன் புரியாமல்.

''போர்க்களத்திலே படுகாயமுற்று நினைவிழந்தேன் போலிருக்கிறது. நினைவு திரும்பிக் கண்விழித்த போது பறங்கியரின் பண்டக சாலைப் பாதாளச் சிறையிலிருப்பதை உணர்ந்தேன்,'' என்றார் கிழவர் அச்சுதர் ஆயாசமுடன்.

கிழவரின் வாழ்க்கைக் கதையைக் கேட்கக், கேட்க மாறப்பனுக்கு வியப்பாக இருந்தது.

''போர்க்களத்தில் படுகாயமுற்ற நீங்கள், பறங்கியரின் பண்டக சாலைக்கு எப்படிப் போனீர்கள்? யாருடைய காரியம் அது?'' என்று கேட்டான் மாறப்பன்.

''வெங்கண்ணாவின் வேலைத்தனம்தான் அது,'' என்றார் விரக்தியுடன் அச்சுதர்.

''வெங்கண்ணாவுக்கும், பறங்கியருக்கும் எப்படித் தொடர்பு, உறவு...'' என்று புரியாமல், குழப்பத்துடன் கேட்டான் மாறப்பன்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us