தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மல்லன் மாறப்பன்! (7)

மல்லன் மாறப்பன்! (7)

மல்லன் மாறப்பன்! (7)


PUBLISHED ON : செப் 26, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 26, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: மாறப்பனும், திம்மராயனும் மன்னரின் பிரதிநிதி சாளுவ நரசிம்மரை சந்தித்தனர். விஜயதசமி விழாப் போட்டியில் பங்கு பெறும் வீரனை தேர்ந்தெடுக்கும் குத்து சண்டை போட்டியில் பங்கேற்ற மாறப்பனை திருமலையும், பெர்னாண்டஸும் காவல் அதிகாரியுடன் வந்து கைது செய்தனர். இனி-

அவன் மார்பகத்து சட்டையைக் கொத்தாகப் பற்றி, ''ஏய், திருமலை உனக்கு மாறப்பனைத் தெரியாதா? அவனா கொலைகாரன்? நீயும், நானும் தானேடா இந்த நாணயமிக்க வாலிபனைச் சந்தித்தோம் மறந்துவிட்டாயா?''

''மறக்கவில்லை... பாத்ஷாகானை கோதாவிலே வீழ்த்தி வெற்றி கொண்டதையும் மறக்கவில்லை. பிறகு, அதே பாத்ஷாகானை அவன் குடிபோதையில் இருக்கும் போது மூர்க்கமாகத் தாக்கிக் கொன்றதையும் மறக்க வில்லை. மறக்க முடியாது!'' என்றான் திருமலை.

திம்மராயனின் ரத்தம் கொதித்தது.

''அற்பனே! உன் சின்னப் புத்தியைக் காட்டிவிட்டாய். நான் உனக்காகப் போட்டிப் பந்தயங்களில் கலந்து கொண்டு பணம் பண்ணிக் கொடுக்கவில்லை என்பதற்காக... தூ!'' என்று காரியுமிழ்ந்தான் திருமலையைப் பார்த்து.

''இழிந்தவனே! இதற்கு நீ அனுபவிக்கப் போகிறாய்!'' என்று கோபத்துடன் கத்தினான் திம்மராயன்.

திருமலை சிரித்தான்.

சாளுவ நரசிம்மர் காவல் அதிகாரிகளிடம் விசாரித்தார்.

''இவன் கொலைகாரன் என்பதற்கு ஆறு சாட்சிகள் உள்ளன,'' என்றார் அதிகாரி.

''இவனைத் தூக்கு மேடைக்கு அனுப்ப இவை போதும்!'' என்றான் எகத்தாளமாகப் பறங்கியன் பெர்னாண்டஸ்.

மாறப்பனை விசாரித்தபோது நடந்ததைக் கூறினான்.

''இதையெல்லாம் நீதிமன்றத்தில் வந்து கூறு. எனக்கு உத்தரவு உன்னைக் கைது செய்து கொண்டுவரும்படி...'' என்று கூறி மாறப்பனின் கைகளைப் பின்பக்கத்தில் சங்கிலியினால் பிணைத்துக் குதிரையிலேற்றிக் கொண்டு போயினர்.

பாத்ஷாகான் மரணமடைந்த பறங்கியரின் குடியிருப்புப் பகுதியிலுள்ள சிறையில் கொண்டு போய் மாறப்பனை அடைத்தனர். கொல்லப்பட்டவன் அந்நிய நாட்டான். ஆதலால், அவர்கள் பகுதியில் வழக்கை விசாரிக்க வேண்டும். பறங்கியரின் பிரதி நிதிகளும் விசாரணைக்குழுவில் இடம் பெற்றிருப்பர்.

காற்றும், வெளிச்சமும் இல்லாத ஒரு இருட்டறையில் மாறப்பன் தள்ளப்பட்டான். தரை யெல்லாம் ஈரக்கசிவு, ஒரு மூலையில் இன்னொரு ஜீவனும் அந்தப் பொந்தில், முடங்கிக்கிடப்பதை மங்கிய வெளிச்சத்தில் உணர்ந்தான் மாறப்பன். அந்த இருட்டுக்குப் பார்வை நிலைப்பட்ட போது.

''இந்தச் சின்ன வயசிலே, பறங்கியரின் இந்தக் கொடிய சிறைக்கு எப்படியப்பா வந்தாய்?'' என்று ஈனசுரத்தில் கேட்டது அந்த உருவம். அந்தக் குரலில் வயோதிகத்தின் நடுக்கம் தெரிந்தது.

''உன்னை அதிக நாள் இங்கே வைத்திருக்க மாட்டார்களே பாவிகள்!''

மாறப்பன் பதில் ஏதும் கூறவில்லை.

'தமிழகத்திலிருந்து எவ்வளவு ஆசைக் கனவுகளோடு, நம்பிக்கையோடு விஜய நகரத்துக்கு வந்தேன்... என் மீது கொலைக் குற்றம் சாட்டி சிறையிலடைத்து விட்டார் களே... இந்த முடிவு என்னவாக இருக்கும்?' என்று மவுனமாகக் கண் கலங்கினான் மாறப்பன்.

திம்மராயன் நண்பனைச் சந்திக்க வந்தான். சிறைக்காவலாளிக்குத் திம்மனைத் தெரியும்.

''திம்மராயரே! அந்தத் தமிழ் இளைஞனை நீங்கள் சந்திக்கலாம். ஆனால், அவனை விடுவிக்கச் செய்வது சாத்தியமல்ல. இந்த வழக்கின் பின்னால் பெரும்புள்ளிகள் வேலை செய்கின்றன. திருமலையின் பணபலமும், செல்வாக்கும் வேறே...'' என்று நிலைமையை விளக்கினான்.

இருட்டறையில் மாறப்பனைக் கண்ட திம்மராயன் துக்கம் தாங்காமல் குமுறிக், குமுறி அழலானான்.

''மாறப்பா, நண்பனே! உன்னுடைய இந்த நிலைக்கு நான் காரணமாகி விட்டேனே... உன்னை அன்று, அந்தக் குத்துச் சண்டையில் ஈடுபடுத்தாதிருந்தால், உன் வாழ்க்கைப் பாதையே மாறி இருக்கும். பாவிகளின் சூழ்ச்சிக்கு ஆளாகி இருக்க மாட்டாய்...''

''தோழனே! இதென்ன அசட்டுத்தனம். நீ என்னை வீரனாக்கவே ஆசைப்பட்டாய். அது குற்றமா? என்னை நீ கொலைகாரன் என்று நினைக்கிறாயா?'' என்று கேட்டான் மாறப்பன்.

''உன்னுடன் நட்புக் கொண்டு சில மாதங் களே ஆனாலும், உன்னை உன் இதயத்தை நான் அறிவேன் மாறா. நீ கள்ளங்கபட மற்றவன்... நிரபராதி,'' குரல் தழுதழுத்தது திம்மராயனுக்கு.

''எனக்கு அது போதும் நண்பா...! அவர்கள் தீர்ப்பு எதுவானாலும் எனக்குக் கவலை இல்லை. உங்கள் ராஜ்ஜியத்திலே எனக்கு நியாயம் கிடைக்காதா திம்மராயா?''

''படுபாவிகள்... வழக்கை விசாரணைக்கே கொண்டு போகமாட்டார்கள் போலிருக்கிறதே! பெர்னாண்டஸும், திருமலையும் செல்வாக்கு உடையவர்கள். இறந்ததோ பறங்கியரின் ஆள். நீயோ யாருமறியாதவன்; அப்பாவி; நாடோடி; தமிழ்நாட்டுக்காரன். உன்னைத் தங்களிடம் ஒப்படைக்கும்படி பறங்கியர் கேட்டிருக்கிறார்களாம்... பணம் பத்தும் செய்யும்!'' என்றான் திம்மராயன்.

திம்மராயனின் பேச்சுக்கு மாறப்பன் பதிலேதும் கூறவில்லை. பதில் கூற அவனிடம் என்ன இருக்கிறது. திம்மனே இப்படி கூறிவிட்ட பிறகு...

''வெட்கப்படுகிறேன். வேதனைப் படுகிறேன் மாறப்பா,'' என்று தொடர்ந் தான் திம்மன்.

''உன்னையும் உன்னைப் போலப் பொய் குற்றம் சாட்டிய சிலரையும் அடிமை களாக்கிக் கப்பலில் பணியாற்ற போர்த்துக் கீசியர்கள் கொண்டு போகப் போவதாக அறிகிறேன்...''

''என்னைப் போர்த்துக் கீசியரிடம் ஒப்படைக்க உன் அரசு ஒப்புக் கொண்டு விட்டதா திம்மா?''

திம்மராயன் மவுனமாக தலை குனிந்தான்.

போர்த்துக்கீசியருக்கும், இந்தியருக்குமிடையே தரகு காரியம் செய்யும் திருமலை, அந்நியரின் சொகுசுப் பொருள்களை அதிகாரிகளுக்கு அன்பளிப்பாக வழங்கி, அதிகாரிகளைத் தன் கைப்பாவை யாக்கிக் கொண்டிருப்பதை மாறப்பனிடம் விளக்க அவனுக்கு மனமில்லை.

''இந்த உலகில் எனக்குத் துணையாக இருப்பவை இந்த என் உறுதியான கரங்களும், நேர்மையான நெஞ்சமும்தான் திம்மா. நீ என் நிலைக்காக வருத்தப்படாதே...!'' என்று நண்பனைத் தேற்றினான் மாறப்பன்.

''அவை இரண்டும் உன்னைக் காப்பாற்றும்; கைவிடாது நண்பா! இந்தக் கயவர்களின் சூழ்ச்சி வலையிலிருந்து நீ எப்படியாவது தப்பியாக வேண்டும். தப்புவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அவசரமோ ஆத்திரமோ படாமல் செயல்படு...''

''என்னைக் குற்றவாளியாக்கிய அந்தக் குள்ள நரிகளைப் பழிவாங்கியே தீருவேன் திம்மா. இது சத்தியம்...!'' என்று சூளுரைத்தான் மாறப்பன்.

திம்மராயன் கலங்கிய நெஞ்சோடும், கண் களோடும் விடைபெற்றான்.

திம்மராயன் கூறியது போலவே, வழக்கு விசாரணைக்கே வரவில்லை. குற்றவாளியைப் பறங்கியரிடம் ஒப்படைத்து விட்டனர். மாறப்பனைப் போலவே இருட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேறுபல கைதிகளும் சங்கிலியால் பிணைக்கப்பட்ட கைகளோடு, கடற்கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மாறப்பனோடு சிறையில் இருந்த முதியவரும் அதில் இருந்தார்.

போர்த்துக்கீசியக் கப்பலில் அடிமைகளாகப் பணிபுரிய அவர்களைத் துறைமுகத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.

அவர்களுக்குக் காவலாக நின்றிருந்த பறங்கிய வீரர்களில் ஒருவன் கூறினான்.

''இப்படி கப்பலில் ஏற்றப்பட்ட அடிமைக் கைதி மறுபடி உயிரோடு தரை இறங்க மாட்டான். அவன் வாழ்வு கப்பலிலேயே முடிந்து போகும்!''

''ஹ... ஹ...ஹா!'' என்று அட்டகாசமாகச் சிரித்தான் மற்றொரு பறங்கியக் காவலாளி.

''கயவர்களே! நீதி நின்று கொல்லும். உங்களை நான் பழிவாங்கியே தீருவேன்,'' என்று மனதில் கறுவிக் கொண்டான் மாறப்பன்.

''இந்த நாய்களைப் படகில் ஏற்றிக் கப்பலுக்குக் கொண்டு செல்லுங்கள். ம்... விரைவாகச் செயல்படுங்கள். தப்பியோட முயன்றால் சுட்டுத் தள்ளுங்கள் கடலில்!'' என்று ஆணையிட்டான் போர்த்துகீசியப் படைத்தலைவன்.

படகுகள் கடல் அலைகளில் ஆடி அசைவது 'கைதிகளை விடுவியுங்கள்!' என்று சொல்வது போலிருந்தது.

தொலைவில் நிற்கும் கப்பலைப் பார்த்தான் மாறப்பன்.

-தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us