தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மல்லன் மாறப்பன் (9)

மல்லன் மாறப்பன் (9)

மல்லன் மாறப்பன் (9)


PUBLISHED ON : அக் 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாறப்பனைச் சூழ்ந்து கொண்டு நின்றனர் போர்த்துக்கீசிய கப்பலின் மாலுமிகள். அவர் களுடைய முரட்டு முகங்களில் கொலை வெறி. அடிபட்ட மிருகமாக அவர்கள் உடலில் துடிப்பு. கொலைவெறியர்களான அத்தனை பறங்கியரின் பார்வையும் மாறப்பன் மீது பதிந்திருந்தன. எதற்கும் அஞ்சாமல் சிங்கம் போலக் கர்ஜித்தபடி நின்றான் மாறப்பன்.

ஒரு மாலுமி, மாமிசமலை நகருவது போல, அடிமேலடி வைத்து மாறப்பனை நெருங்கினான். ரொம்ப அலட்சியமும், ஏதோ கொசுவை அடிக்கப் போகும் அலட்சியமாக அகம் பாவமுமாக மாறப்பனை அணுகினான் அந்தப் போர்த்துகீசிய மாலுமி.

அருகே சென்றபின் மாறப்பனைத் தாக்கத் தன் கையை உயர்த்தும் முன், மாறப்பனின் வலது கால் குபீரென்று உயர்ந்து அந்த மாலுமியின் மர்ம ஸ்தானத்திலே தாக்க, இடதுகை முஷ்டி அவன் தாடையிலே இறங்க, பறங்கியன் அலறியபடி தன் இருகைகளாலும் தொடை இடுக்கை அழுத்திக் கொண்டு சுருள- மாறப்பனின் வலது கை முஷ்டியின் குத்து அவன் கழுத்தில் இறங்க, பறங்கியன் மரண ஓலத்துடன் தரையில் உருண்டு துடிக்கலானான்.

மாறப்பனின் இந்தத் தாக்குதல் மற்ற பறங்கிய மாலுமிகளிடம் திகைப்பையும், ஆத்திரத்தையும் உண்டாக்கியது. வேட்டை நாய்களைப் போல் அத்தனை பேரும் மாறப்பன் மீது பாய்ந்தனர். பாரதப் போர்க்களத்திலே, தன்னைச் சூழ்ந்து கொண்டு தாக்கிய கவுரவப்படை வீரர்களை, தேர்ச்சக்கரத்தைக் கொண்டு சுழன்று, சுழன்று சமாளித்த அர்ஜுனன் மைந்தன் அபிமன்யுவைப் போல் ஆர்ப்பரித்தான் மாறப்பன். அவனின் ஒவ்வொரு குத்துக்களும் பறங்கிய மாலுமிகளைப் பதற அடித்தது. இடது, வலது சாரியாகச் சுற்றிச் சுழன்றான். தாவிக் குதித்துத் தாக்கினான். கைகளாலும், கால்களாலும் பறங்கிய மாலுமிகள் அவனை நெருங்க முடியாமல், திக்குமுக்காடினர். குத்துப்பட்டு உதைபட்டு ஆத்திரப்பட்டனர்.

'இத்தனை பேரையும் எத்தனை நேரம் என்னால் சமாளிக்க முடியும்?' என்று யோசிக்கலானான் மாறப்பன்.

இந்தியக் கைதிகள் திகிலோடு எட்ட நின்று அவன் சாகஸத்தை வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர். அதே சமயம், அவனுக்கு என்ன நேருமோ என்ற கவலையோடு இருந்தனர்.

அடிபட்டு அவமானப்பட்ட ஒரு பறங்கிய மாலுமி, ஓடிப்போய் அதிகாரிகளிடம் செய்தியைக் கூறினான்.

''ஒரு இந்திய அடிமை நம் ஆட்களைப் பயங்கரமாகத் தாக்கி வீழ்த்துகிறான். எங்களால் அவனை நெருங்கவே முடியவில்லை. உதவிக்கு வாருங்கள்!'' என்று ஓலமிட்டான்.

உடனே கப்பல் தலைவனும், போர்த்துக் கீசிய மாலுமிகள் அனைவரும் கையில் ஆயுதங்களுடன் ஓடிவந்தனர்.

இனி தன்னால் இத்தனை பேரையும் சமாளிக்க முடியாது என்பதை உணர்ந்தான் மாறப்பன்.

ஒரு போர்த்துக்கீசியன் மாறப்பனைச் சுடத் தன் துப்பாக்கியை உயர்த்திய போது, கப்பல் தலைவன் ''சுடாதே!'' என்று அவனைத் தடுத்து விட்டான். போர் விதிகளை மீறாதவர்களாயிற்றே பறங்கியர்.

''அவனைப் பிடியுங்கள். பிடித்து அமுக்கிக் கட்டுங்கள். இத்தனை பேரையும் அவன் ஒருவனாக சமாளிக்கிறான். உங்களுக்கு வெட்கமாக இல்லை?'' என்று கடுகடுத்தான் கப்பல் தலைவன்.

அதே வேளையில், மாறப்பன் சரேலென்று பாய்மரக் கயிற்றைப் பற்றிக் கொண்டு சரசர வென்று மேலே ஏறலானான்.

''ஏய் கறுப்பா! இறங்கு... பணிந்து விடு. நீ தப்ப முடியாது!'' என்று கத்தினான் ஒரு பறங்கியன்.

''இறங்குவதா? பணிவதா...? பாரத மகன் ஒரு பறங்கியனிடம் பணிவதா? ஒரு நாளும் நடவாது!'' என்று முழங்கினான் மாறப்பன்.

பறங்கிய மாலுமிகளில் பலர் வெகு வேகமாக நாலா பக்கத்திலிருந்தும் அந்தக் கயிறு வலை ஏணியின் மீது ஏறிக் கொண்டிருந்தனர் மாறப்பனை அணுக.

''கிட்டே வராதே! தொலைத்துவிடுவேன்,'' என்று மாறப்பன் சூளுரைத்தாலும், இத்தனை நேரமும் வரை முறையின்றிப் பலபேரைத் தாக்கியதனால் அவன் முஷ்டிகளில் காயம் ஏற்பட்டு, ரத்தம் கசிந்து, 'விண்விண்' என்று வலியும், எரிச்சலும் ஏற்பட்டது. உடலிலும் கூடப் பல இடங்களில் காயம். எதையும் லட்சியம் செய்யாமல் பாய்மரக் கயிற்றில் ஏறிக் கொண்டிருந்தாலும், அதில் ஏறிப்பழக்க மில்லாததனால் பிடி தவறியது. தளர்ந்தது தள்ளாடச் செய்தது.

''அடிமைப்பயலே அடங்கிப்போ... ஆர்ப்பாட்டம் செய்து தப்பிவிடலாம் என்று நினைக்காதே!'' என்றான் மாறப்பனை நெருங்கிக் கொண்டிருந்த ஒரு பறங்கிய மாலுமி.

''பிழைக்க வந்த பரதேசிப்பயலே...! தென்னை மரத்தில் ஏறும் வலிமை பெற்ற கரங்களடா இவை.. கிட்ட நெருங்காதே... எட்டி உதைத்து வீழ்த்துவிடுவேன் உன்னை,'' என்றான் மாறப்பன்.

''ஏய், கறுப்பா! நீ தென்னை மரத்தில் ஏறியவனாக இருக்கலாம். இதுபாய் மரக்கயிறு. உன் பாச்சா இங்கு பலிக்காது,'' என்று கூறியபடி சற்றும் எதிர்பாராதபடி அந்தக் கயிற்று ஏணியை ஒரு உலுக்கு உலுக்கினான்.

அந்தக் குலுக்கலை எதிர்பாராத மாறப்பனின் பிடி நழுவ, பரிதாபமாக பாய்மரக் கயிற்றிலிருந்து நிலை தடுமாறிக் கீழே விழுந்தான்.

நல்லவேளை... அங்கு சுருட்டி வைக்கப் பட்டிருந்த அதிகப்படியான பாய்மரத்துணி மூட்டையில் போய் விழுந்தான்! விழுந்த அதிர்ச்சியில் மூர்ச்சையாகி நினைவிழுந்தான்.

''தென்னை மரத்திலிருந்து தேங்காய் விழுகிறது! ஹ...ஹ... ஹா!'' என்று அட்டகாசமாகச் சிரித்தான் போர்த்துக் கீசிய மாலுமி. பறங்கியர் அனைவரும் அவன் சிரிப்பில் பங்கு கொண்டனர்.

''கப்பலில் கலகம் விளைவித்து, மாலுமிகளைத் தாக்கி, அட்டகாசம் செய்த இந்த சுதேசி நாயை, இழுத்துக் கொண்டு போய் இரும்புச் சட்டத்தில் கட்டுங்கள். கலகம் செய்த இவன் கொழுப்பை அடக்க வேண்டும்,'' என்று கட்டளையிட்டான் கப்பல் தலைவன்!

நினைவிழந்து கிடந்த மாறப்பனை இரண்டு பறங்கிய மாலுமிகள் காலால் உதைத்துப் புரட்டிப் போட்டனர்.

''எத்தனை சாமர்த்தியமாகப் போரிட்டான் இந்தப் பயல்!'' என்ற வியப்பும், வெறுப்பும் அவர்கள் முகத்துக்குப் பூச்சிட்டிருந்தன.

''திமிர் பிடித்த இவனைப் பாய்மர உச்சியிலே கட்டி, கடற்பறவைகளுக்கு இவன் உடலை உணவாக்கி விடுவோம்,'' என்றான் ஒரு போர்த்துக்கீசியன் ஆத்திரத்துடன்.

''வேண்டாம்...'' என்றான் கப்பல் தலைவன்.

''வலுவான உடலுறுதிகொண்ட இந்த அடிமையின் உடலுழைப்பு நமக்குத் தேவை. வேலை வாங்கியே இவனின் கொட்டத்தை அடக்குவோம். நான் கூறியபடி செய்யுங்கள்!''

மாறப்பனை இரும்புச் சட்டத்தில் குப்புறப் படுக்க வைத்துக் கட்டினர். தண்டனை தொடங்குவதற்கு அறிகுறியாக டமாரங்களில் ஒலி எழுப்பினர். பறங்கிய மாலுமிகளும் அடிமைக் கைதிகளும் சூழ்ந்து நின்றனர்.

''இருநூறு கசையடிகள்!'' தண்டனையை அறிவித்தான் கப்பல் தலைவன்.

சாட்டை 'சொடீர்' என்று சொடுக்கிக் குரல் கொடுத்தது. இந்தியக் கைதிகளின் உடல்கள் சிலிர்த்தன. உள்ளம் அழுதது; கண்கள் குளமாயின. மாறப்பனின் மீது விழும் ஒவ்வொரு சவுக்கடியும், தங்கள் மீது விழுவதாக துடிதுடித்து போயினர்.

நினைவிழந்தவன் சவுக்கடிகளினால் நினைவு வரப்பெற்றான். ஒவ்வோர் அடிக்கும் மாறப்பனின் உடல் வெட்டுண்ட அரணை வாலாகத் துடித்தது; துள்ளியது.

மீண்டும் மூர்ச்சையானான். கடல் உப்பு நீரை அவன் மீது கொட்டி, அவன் மூர்ச்சையைத் தெளிவித்து, மீண்டும் கசையடியைத் தொடர்ந்தனர் கல்மனம் கொண்ட பறங்கியர்கள். இப்படியே அடுத்தடுத்து மாறப்பன் மூர்ச்சையாவதும், உப்பு நீர்க் குளிப்பாட்டலால் மூர்ச்சை தெளிவதும் மறுபடி கசையடியுமாக இருநூறு கசையடிகள் கொடுத்து தண்டனையை நிறைவேற்றினர். ரத்த விளாறாகி ரணமாகிவிட்ட மாறப்பனின் உடலை அவன் மூர்ச்சை தெளியாத நிலையிலேயே இழுத்து வந்து ஈரக் கசிவோடு கூடிய கப்பலின் அடித் தளத்தில் உள்ள சிறையில் போட்டனர். மாறப்பனுக்கு முன்பாக கசையடி வாங்கி அடைபட்டிருந்த அந்த முதியவர், அங்கு கண் மூடியபடி ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தார். கொஞ்சமே கசையடி (ஐம்பது)கள் பட்டிருந்த அவரின் உடல் காயங்கள் காய்ந்த நிலையில் சற்றுத் தெம்புடன் காணப்பட்டார்.

இருள் சிறையில் கொண்டுவந்து போடப்பட்ட மாறப்பனிடம் முதியவர் மெதுவாக நகர்ந்து வந்தார்.

- தொடரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us