PUBLISHED ON : நவ 14, 2014

சென்றவாரம்: கப்பலில் இருந்து வெளியே வந்த மாறப்பன் குதிரை மீது ஏறி தப்பினான். தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்களை பழிவாங்க விஜயநகரம் சென்றான். மாறுவேடப் போட்டிக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்த பெர்னாண்ட்ஸ் முன் நின்றான் மாறப்பன். இனி-
மாறப்பனிடம் அச்சம் ஏற்படவில்லை. நயவஞ்சகத்தனத்துக்குப் பெயர் பெற்ற பெர்னாண்டஸ், இப்படி ஏதாவது செய்வான் என்பதை எதிர்பார்த்தான். முறுக்கேறிக் கொண்டிருந்த தன் முஷ்டியை இறுகிக் கொண்டு மின்னல் போலச் செயல்பட்டான் மாறப்பன்.
''அயோக்கிய நாயே!'' என்ற வார்த்தைகள் அவன் வாயிலிருந்து வெளிப்படும் முன், பெர்னாண்டஸ் ஒரு மூலையிலும், விசை அழுத்தப்பட்ட துப்பாக்கி அவன் கையிலிருந்து விடுபட்டு மற்றொரு மூலையிலும் போய் விழுந்தது. மாறப்பனின் ஒரே குத்தில் பெர்னாண்டஸ் நினைவிழந்து துணியாகச் சுருண்டு போனான். அது சாதாரணக் குத்தல்லவே! நெஞ்சத்தில் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்டு வஞ்சம் தீர்க்க வந்திருந்த தமிழனின் குத்தாயிற்றே!
கீழே விழுந்து கிடக்கும் பறங்கியனைப் புரட்டினான்.
'இந்த நிலையில் இவனைத் தீர்த்துக் கட்டுவது சுலபம். ஆனால், இந்த அற்பனைப் போல நடந்து கொள்ள எனக்கு விருப்பமில்லை. கொலைக்காரனாக என் மனம் இடம் தரவில்லை... என்ன செய்யலாம்' என்று சிறிது நேரம் யோசித்தான் மாறப்பன். ஒரு முடிவுக்கு வந்தவனாக சரசரவென்று அவன் உடைகளைக் கழற்றித்தான் அணிந்து கொண்டான்.
'மன்னருக்கு அளிக்கப்படும் விருந்துக்குப் போகவே கிளம்பிக் கொண்டிருக்கிறான் இந்தக் கயவன். நான் இவனாக அந்த விருந்தில் கலந்து கொள்ளுகிறேன். அடையாளம் தெரியாதபடி அனைவரும் முகமூடி அணிந்து வருவார்கள். ஆதலால் என்னை யாரும் இனம் காண முடியாது' என்ற முடிவோடு உள்ளாடையை மட்டும் விட்டுவிட்டு, அவனை இழுத்துப் போய் ஒரு அறைக்குள் போட்டு அங்கிருந்த துணியினால் அவன் கை, கால்களையும் கட்டிப் போட்டான். தன்னைப் பெரிய நிலைக் கண்ணாடியில் பார்த்துக் கொண்டான். பெர்னாண்டஸின் உடை தனக்கு எப்படி இருக்கிறது என்று.
'உடை பொருத்தமாகத்தான் இருக்கிறது. மேனியை இவன் உடை மறைக்க, முகத்தைப் பட்டு துணி முகமூடி மறைக்கும். ஆனால், சில சங்கடங்கள் ஏற்படலாம். சமாளித்தாக வேண்டும்... வாயே திறக்காமல் மவுனம் சாதித்து...' என்று நினைத்தபடியே குல்லாயைத் தன் தலையில் சரிசெய்து கொண்டு, விருந்து மண்டபத்தை நோக்கி நடந்தான் மாறப்பன்.
விருந்து மண்டப வாயிலில் நின்றிருந்த பறங்கிய அதிகாரி மாறப்பனுக்கு உற்சாகமான வரவேற்புக் கொடுத்தார். விருந்துக்கு வரும் யாரையுமே இனங்காண முடியாது. அப்படி விதவிதமான வேஷங்களில் விருந்தாளிகள் வந்து கொண்டிருந்தனர். எல்லாரையும் ஒரே மரியாதையுடன் வரவேற்றுக் கொண்டிருந்தார் அந்தப் பறங்கிய அதிகாரி.
''விஜய நகர வேந்தர்-ராயரின் வருகைக்காகவே காத்திருக்கிறோம். கேளிக்கைகளுக்கு எல்லாரும் ஆயத்தமாக இருக்கின்றனர். நீங்கள் உள்ளே போங்கள்,'' என்றார் மாறப்பனிடம்.
நடன மண்டபத்தில் நுழைந்தான் மாறப்பனான பெர்னாண்டஸ். அதன் கோலாகலத்தையும், வெள்ளையர்களின் விதவிதமான அலங்காரங்களையும், வேஷங்களையும் கண்டு பிரமித்துப் போனான். பெர்னாண்டஸ் என்று எண்ணிச் சில சீமாட்டிகள் அவனை அணுகி கிசுகிசுத்துச் சிரித்தனர். அவர்கள் உடையிலும், நடத்தையிலும் சங்கடப்பட்டுப் போனவன், நாசுக்காகப் புன்னகைத்து ஒதுங்கிக் கொண்டான். இவ்வேளையில் மேல் நாட்டு பாண்டு வாத்தியம் முழங்கிற்று. மன்னர் மகாராயர் வந்து விட்டதை அறிவிக்க.
மன்னர் கிருஷ்ண தேவராயரைப் போர்த்துக்கீசிய உயர் அதிகாரிகள் கை கொடுத்து, விருந்து மண்டபத்துக்குள் அழைத்து வந்தனர். மன்னருக்காகவே அமைக்கப் பட்டிருந்த விசேஷ மேடையில் உள்ள ஆசனத்தில் அவரை அமரச் செய்தனர். முகமன்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
''எங்கள் நடனம், உணவு முறை எல்லாம் மன்னர் அவர்களுக்குப் புதுமையாக இருக்கும்,'' என்றார் ஒரு பறங்கிய அதிகாரி.
''அவற்றைக் கண்டு களிக்கவே, நான் இங்கு வந்திருக்கிறேன். விருந்தில் விளையாட்டுகளுக்கு இடமில்லையோ?'' என்று கேட்டார் கிருஷ்ணதேவராயர்.
''மன்னர் அவர்கள் மல்யுத்தத்தில் வல்லவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வீர விளையாட்டைக் காணும் வாய்ப்பை இங்கு ஏற்படுத்தி விட்டால் போகிறது,'' என்றார் ஒரு போர்த்துக்கீசிய உயர் அதிகாரி.
''எங்கள் மற்போரை விட உங்கள் குத்துச் சண்டையைக் கண்டு ரசிக்கவே விரும்புகிறேன்,'' என்றார் மகாராயர்.
¬ஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் விருந்து மண்டபத்தில் வந்தமர்ந்ததும் அவையில் நிசப்தம் நிலவியது. கூடி இருந்த அனைவரின் கவனமும் ராயரின் கம்பீரமான தோற்றத்திலே லயித்திருந்தது. அப்போது போர்த்துக்கீசிய உயர் அதிகாரி கூடி இருந்தவர்களிடம் உரக்கக் கூறினார்.
''பெருமக்களே! உங்களுக்கெல்லாம் விருந்தை விட இனிப்பானதோர் செய்தி. பேரரசர் மகாகிருஷ்ண தேவராயரை மகிழ்விக்க, இப்போது ஓர் விளையாட்டுப் போட்டியொன்று நிகழப் போகிறது. என்ன விளையாட்டு? என்ற ஆவல் எழுகிறதல்லவா? மன்னர் நமது நாட்டுக் குத்துச் சண்டையைக் கண்டு மகிழ விரும்புகிறார். மல்யுத்தத்தில் வல்லவரான அவர், நம் நாட்டுக் குத்துச் சண்டை யில் ஆர்வம் காட்டுவது நம் பாக்கியமே. ஆகவே, விருந்துக்கும் நடனத்துக்கும் முன், வீர விளையாட்டு நடைபெறும். குத்துச் சண்டையில் வெற்றி பெறும் வீரருக்கு மன்னர் ஆயிரம் பொற்காசுகள் பரிசளிப்பதாகக் கூறியுள்ளார். வல்லவர்கள் யாரானாலும் போட்டியில் பங்கு கொள்ள முன் வரலாம்!''
அறிவிப்பைக் கேட்டதும் அவையில் சலசலப்பு எழுந்தது. கூட்டத்தினர் தங்களுக்குள் மெதுவான குரலில் விவாதித்தாலும், அது பெரும் சத்தமாக உருவாகிக் கொண்டிருந்தது. கூட்டத்தில் ஒரு ஓரமாக நின்றபடி மன்னரின் வீரத்திரு உருவைக் கண்டு களித்து மகிழ்ந்து கொண்டிருந்த மாறப்பனின் மனதிலே பறங்கியரின் அறிவிப்பு ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது.
'குத்துச் சண்டை! மன்னரின் பாராட்டும், பரிசும். இதில் நான் பங்கு கொள்ளுவேன். வெற்றி பெறுவது எனக்கு பெரிய காரியமல்ல. மகாராயரின் பாராட்டையும், கவனத்தையும் கவருவதற்கான ஒரு வாய்ப்பு இது. இதை நான் நழுவவிடக் கூடாது!'
மாறப்பனின் எண்ண ஓட்டத்தைத் தடை செய்வது போல அதை போர்த்துக்கீசிய அதிகாரி மீண்டும் பேசினார். கூட்டத்தினரைப் பார்த்துக் கை உயர்த்தி அமைதிப்படுத்தி, ''குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெறும் வீரருக்கு எங்கள் நாட்டு மன்னரின் சார்பாக, ராயரைக் கவுரவிக்கும் வகையில் நாங்களும் ஆயிரம் பொற்காசுகளைப் பரிசாக வழங்குகிறோம். இந்த வாய்ப்பை வல்லவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்!'' என்று கூறி முடித்ததும் கூட்டத்தினர் கரவொலி எழுப்பித் தங்கள் களிப்பை வெளிப்படுத்தினர்.
குத்துச் சண்டையில் வல்லவர்கள் போட்டியிடத் தயாராயினர். அரங்கிலுள்ளவர்கள் ஓரங்கட்டி நின்று நடுவில் சண்டையிடுவதற்கான இடத்தை உருவாக்கி வளையம் கட்டி நிற்கலாயினர். மாறப்பனும் தயாரானான். அவனைப் போலவே சில சுதேசிகளான இந்தியர்களும் போட்டியிட முன் வந்தனர். பறங்கியரில் பலர் கோதாவில் இறங்கினர். பெர்னாண்டஸின் அலங்கார உடைகளை அகற்றி ஒரு மூலையில் வைத்தான் மாறப்பன்.
முக மூடியை மட்டும் அகற்றவில்லை. பறங்கியப் போட்டியாளர்களும் முக மூடியுடனேயே அரங்கிற்கு வந்தது மாறப்பனுக்கு வசதியாக இருந்தது.
பெர்னாண்டஸையும், திருமலையையும் வஞ்சம் தீர்க்க வேண்டிய நான் இப்படி இவர்களிடையே பகிரங்கமாகச் சண்டையிடலாமா? இது முட்டாள்தனமான முடிவாகிவிட்டால் என்ன செய்வது...?' என்ற தயக்கம் தலை தூக்கியது மாறப்பனிடம்.
அந்த எண்ணத்தோடு அவன் போராடிக் கொண்டிருக்கும்போதே குத்துச் சண்டை அரங்கில் போட்டி ஆரம்பமாகிப் பலரைத் தன் குத்துக்களால் வீழ்த்தி குதித்துக் கொண்டிருந்தான் ஒரு பறங்கியன். கையை உயர்த்தி அவன் துள்ளுவதைக் கூட்டத்தினர் பாராட்டிக் கொண்டிருந்தனர்.
மாறப்பனின் முறை வரவே, நடுவர் அவனை அரங்கிற்கு அழைத்தார். கூட்டத்தில் திருமலையும் இருந்தான். ராயரின் பரிவாரங் களோடு அவனும் வந்திருந்தான். அதுமட்டுமல்ல, பெர்னாண்டஸின் தோழனான பிலிப் என்பவன்தான் இத்தனை நேரமும் அரங்கில் பலரை வீழ்த்தி வெற்றி வீரனாகக் கொக்கரித்துக் கொண்டிருந்தான்.
திருமலை அவன் அருகில் போய் அவனை ஊக்குவிப்பதை கண்டான் மாறப்பன். அவன் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த எரிமலை வெடிக்கலாயிற்று.
- தொடரும்.
