PUBLISHED ON : மார் 20, 2021

முன்கதை: மாணவ பருவத்தில், வீட்டை விட்டு ஓடிய மகன் சூரியராஜா, நீண்ட நாட்களுக்கு பின் திரும்பி வருவதாக அறிந்தார் லட்சுமி. வழிமேல் விழி வைத்து காத்திருந்தார். சிறு தாமதத்துக்கு பின் வந்து சேர்ந்தான் மகன். இனி -
தாயைக் கண்டதும், ''ஏம்மா அழுவுற...'' என்றான் சூரியராஜா.
அழுகையினுாடே திரும்பி, ''அவங்க எல்லாம் எங்க...'' என்றார் லட்சுமி.
''யாரு...''
''உன் மனைவி, மக்கள்...''
''யாரும் வரல...''
''அவங்களும் உடன் வருவதாகத்தானே சொல்லியிருந்த...''
''கடைசி நேரத்துல மறுத்துட்டா...''
''அப்படியா... ரொம்ப ஆசையா காத்திருந்தேன்...''
பதில் சொல்லாமல் சிலையாக நின்றான்.
''சரி... முதல்ல சாப்பிடு...''
கை, கால், முகம் கழுவி, சாப்பிட அமர்ந்தான் சூரியராஜா.
''ஏன்டா கண்ணு... ஈவு இரக்கம் இல்லாம இப்படி செய்துட்டியே... நாங்க துடிச்ச துடிப்பு அந்த தெய்வத்துக்குதான்டா தெரியும்...''
சாப்பிடுவதை நிறுத்தி, ''எதுக்கு பழசை எல்லாம் பேசிக்கிட்டு... பாயாசத்தை இன்னும் கொஞ்சம் ஊத்து...'' என்றான்.
''சாப்பிடு... நான் எதையும் கேட்கல... ரயிலு லேட்டா...''
''லேட்டு தான்... நாளை சீக்கிரமா கிளம்பணும்... எல்லாத்தையும் எடுத்து வெச்சுட்டியா...''
''விடிஞ்சதும் எடுத்து வெச்சுடலாம்...''
சாப்பிட்டு முடித்தான் சூரியராஜா.
அக்கம் பக்கத்தினர் அவனை பார்க்க வந்தனர்.
பலவற்றை பேசினர்; சிலர் கோபத்துடன் பேச முற்பட்டபோது, ஜாடையால் தடுத்தார் லட்சுமி. சிறிது நேரத்தில் எல்லாரும் கலைந்து சென்றனர்.
''அந்த பாயை போட்டு படுத்து துாங்கு! பாத்திரத்தை எல்லாம் கழுவி வெச்சுட்டு வரேன்...''
பாயில் புரண்டு கொண்டிருந்த சூரியராஜா, தாயார் உள்ளே வந்ததும், கண்களை மூடிக் கொண்டான்.
''துாங்கிட்டியாடா...''
''ஏம்மா...''
''நீ கொண்டாந்த பையை தலைமாட்டிலேயே வெச்சு இருக்கியே... இங்க எலி நடமாட்டம் இருக்கு... எடுத்து பெட்டியில வெச்சுடலாமா...''
''வேணாம்... எலி தின்கிற பொருள் எதுவும் இல்லை...''
''சரி... காலையிலே டீ குடிப்பியா... காபி வேணுமா...''
''அதெல்லாம் காலையில பாத்துக்கலாம்; இந்த பெட்டியிலேயே தானே அந்த பணம் எல்லாத்தையும் பத்திரமாக வெச்சுருக்க...''
''எந்த பணம்...''
''விபத்துல அப்பா செத்ததால் கிடைத்த பணம்... இன்சூரன்ஸ் கம்பெனிக்காரங்க கொடுத்திருப்பாங்களே...''
லட்சுமியின் புலன்கள் சட்டென கூர்மை அடைந்தன.
'வந்து சேர்ந்த, இந்த இரண்டு மணி நேரத்தில், ஒட்டுதலாக எதுவும் பேசவில்லை. தந்தை அகால மரணம் அடைந்தது பற்றி அன்பாக விசாரிக்கவில்லை. நிலைகுலைந்து நிற்கும் என்னிடம் ஆறுதலாக ஒரு வார்த்தை பேசவில்லை. தெரிந்து கொள்ள வேண்டியவை அநேகம் இருக்க, உதாசீனம் செய்து, பணம் பற்றி அவசரமாக கேட்கிறானே' என லட்சுமியின் மனம் சுருங்கியது.
''எத்தனை லட்சம் கிடைச்சது...'' மீண்டும் கேட்டான்.
''வந்த பணம் எல்லாத்தையும், அப்பவே அங்க கொடுத்தாச்சே...''
விசுக் என எழுந்து, ''எவ்வளவு வந்துச்சு... எங்க கொடுத்தாச்சு...'' என்றான்.
''அஞ்சு லட்சம் கிடைச்சது... அதை அப்பவே ஏழைப்பிள்ளைங்க படிப்புக்காக, டவுன்ல இருக்குற அறக்கட்டளைக்கு கொடுத்தாச்சே...''
''ஏன் அப்படி கொடுத்து தொலைச்ச...''
''நாலு புள்ளைங்க நல்லா படிச்சு, நல்ல நிலைமைக்கு வரட்டுமேன்னு தான் கொடுத்தேன்...''
''யாரு கொடுக்க சொன்னது...''
''யார் சொல்லியும் கொடுக்கல... நானே தான் கொடுத்தேன்! படிப்பு தான் உயிரு; படிப்பு தான் பெருசுன்னு எப்ப பார்த்தாலும் பேசிகிட்டு இருந்த உன் அப்பாவோட ஆன்மா அமைதி அடையட்டுமேன்னு தான் கொடுத்தேன்...''
''ச்சே... கொஞ்சமும் அறிவே கிடையாதா உனக்கு...''
''என்னப்பா இப்படி பேசற...''
''அவ்வளோ பெரிய பணத்தை இப்படி கொடுத்தா கோபம் தான் வரும்! இந்த உலகத்துலேயே பணம் தான் முக்கியம்ன்னு தெரியாதா...''
இந்த வாத பிரதிவாதங்கள், 10 நிமிடங்களுக்கு மேல் நீடித்தது!
''சும்மா உளராதே... இந்த உலகம் எந்த போக்குல போயிகிட்டிருக்கு... காசு தான் இங்க எல்லாமே... அதுக்கு தான் ஓடிக்கிட்டிருக்கானுங்க! பணந்தான் வாழ்க்கை! அதுக்கு தான் எல்லாரும் பறந்துகிட்டிருக்கானுங்க! சொந்தமும், பந்தமும் கூட பணம் காசு இருந்தால் தான் கூடவே நிற்கும்...''
''சரி... இப்ப என்னதாம்பா சொல்ற...''
''சொல்றத்துக்கு என்ன இருக்கு... வாயை மூடிக்கிட்டு சீக்கிரம் துாங்கு... காலையில சீக்கிரமே எழுந்தா தான், அந்த ரயிலை பிடிக்க முடியும்...''
சொல்லியபடி வெளியில் சென்றவன், கால் மணி நேரத்திற்குப் பின் திரும்பி வந்தான்; படுத்து, விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்; சற்று நேரத்தில் குறட்டையுடன் உறங்கி விட்டான்.
சட்டென அதிகரித்த மனபாரத்தால் அவதிப்பட்டார் லட்சுமி. வெகு நேரத்திற்குப் பின், அசதியால் ஆழ்ந்து உறங்கினார்.
அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!
- தொடரும்...
நெய்வேலி ராமன்ஜி

