PUBLISHED ON : பிப் 19, 2016

பத்தமடை என்னும் கிராமத்தில் மாயாண்டி என்பவன் இருந்தான். அவனிடம் நிறைய ஆடுகள் இருந்தன. அவன் தினமும் பக்கத்திலுள்ள காட்டுக்கு தன் ஆடுகளை மேய்ப்பதற்கு ஒட்டிச் செல்வான். அன்றும் வழக்கம் போல ஆடுகளை மேய விட்டு, ஒரு மரத்தடி நிழலில்
ஓய்வெடுத்தான்.
வேட்டைக்கு வந்த ஒரு அரசர் தாகத்தினால் தவித்து தண்ணீர் தேடி அலைந்து அங்கே வந்தார். மரத்தடியிலிருந்த மாயாண்டியை கண்டார்.
''உங்களிடம் தண்ணீர் இருக்கிறதா?'' என்றான் அரசர்.
''என்னிடமும் தண்ணீர் இல்லை!'' என்றான் மாயாண்டி.
தண்ணீர் இல்லாதால் அரசர் தவித்தார்.
அரசனின் தவிப்பு மாயாண்டிக்கு தெரிந்தது. எனவே, உதவ முன்வந்தான் மாயாண்டி.
''அரசே சற்று பொறுங்கள்!'' என்று கூறிவிட்டு ஒரு பூவரசு இலையைப் பறித்து கூம்பு போல் சுருட்டி அடிப்பகுதியை இலேசாக மடித்து விட்டான். குட்டிப் போட்ட ஓர் ஆட்டின் காம்புகளில் இருந்து பால் கறந்து கொடுத்தான்.
அரசனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை. பாலைக் குடித்தார்; அரசரின் தாகம் தீர்ந்தது.
பின்பு அரசர், அதே பூவரசு இலையில் கீழே கிடந்த ஒரு முள்ளால் இரண்டு கிராமங்களை தருவதாக மெல்ல, மெல்ல அதில்
எழுதினார் அரசர்.
''நாளைக்கு அரண்மனையில் கொண்டு வந்து கொடு... பத்திரம் எழுதி தருவார்கள்,'' என்று அந்த இலையை விவசாயிடம் கொடுத்தார் அரசர்.
அரசரை ஆச்சரியத்துடன் வணங்கினான் மாயாண்டி. பின்பு அரசர் குதிரை மீதேறி சென்று விட்டார்.
மாயாண்டியோ தன் மனசெல்லாம் மகிழ்ச்சியுடன் கனவு காண ஆரம்பித்து விட்டான். இலையைக் கையில் பிடித்த படியே ஒரு மர நிழலில் அப்படியே உறங்கிப் போனான். அப்போது ஒரு ஆடு வந்து அவன் கையிலிருந்த இலையை பிடுங்கி தின்று விட்டது.
கண்விழித்த மாயாண்டி அதிர்ச்சி அடைந்தான். 'எனது கவனக்குறைவால் நான் இரண்டு கிராமங்களை இழந்து விட்டேனே...' என்று அழுதான்.
குட்டீஸ் நீங்களும் இவரைப் போல இருக்காதீங்க. கிடைக்கும் சந்தர்ப்பத்தை வைத்து முன்னேற முயற்சி செய்யுங்க!
