
இந்தியாவின் தேசிய பறவை மயில். இதை இந்திய மயில், நீல மயில் என்றும் அழைப்பர். ஆசியாவை தாயகமாகக் கொண்டது. விலங்கினத்தில், 'பசியானிடே' குடும்பத்தைச் சேர்ந்த, 'பேவோ' பேரினத்தில் அடங்கும். உலகின் பல பாகங்களிலும் பரவி காணப்படுகிறது.
உருவத்தில் பெரியது ஆண் மயில். இதன் கழுத்து, மார்பு, வயிற்று பகுதிகள் பளபளக்கும் கருநீல நிறத்தில் காணப்படும். இறக்கையில் வெள்ளை, பழுப்பு நிற பட்டைகள் இருக்கும். நீண்ட தோகை பச்சை நிறத்தில், பளபளக்கும் கருநீல வட்டங்களைக் கொண்டிருக்கும். தோகையில் சில சிறகுகளின் முனை, பிறை வடிவில் காணப்படும். தலையில் அழகிய கொண்டை கண்ணைக் கவரும்.
மயில் தோகையில், 200 இறகுகள் வரை உண்டு. இதில், வால் பகுதியில் சிறகுகளின் எண்ணிக்கை, 20. இவை ஆறு மாதத்தில், ஐந்து அடி நீளம் வளரும்.
ஆண் மயிலின் இறகுகள் ஆண்டு தோறும் உதிர்ந்து புதிதாக முளைக்கும். உதிர்ந்த இறகில் உருவாக்கப்படும் அலங்கார பொருட்களுக்கு, உலகம் முழுதும் நல்ல வரவேற்பு உள்ளது.
பல சிறப்புகள் பெற்ற மயில் இனத்தை காப்போம்.
- பா.பரத்

