தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/மினி தொடர் (1) - பேரழகி லடோனா!

மினி தொடர் (1) - பேரழகி லடோனா!

மினி தொடர் (1) - பேரழகி லடோனா!


PUBLISHED ON : அக் 14, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 14, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்னோரு காலத்தில் கிரேக்க தேசத்தில் மிகப் பெரிய அழகி ஒருத்தி வாழ்ந்து வந்தாள்; அவள் பெயர் லடோனா. அவளுடைய அழகு, இளமை, துடிப்பு, எல்லாரையும் கவர்ந்து இழுத்தது. அவளை நேசிக்காதவர்கள் இவ்வுலகில் இல்லை. காண்பவர் பொறாமைப்படக்கூடிய பேரழகியாக இருந்தாள்.

அக்காலத்தில் விண்ணுலகத்தை பேரரசி ஜீனோ என்பவள் ஆண்டு வந்தாள். பூவுலகில் லடோனா என்றால், விண்ணுலகில், 'ஜீனோ' என்று கூறும் விதத்தில் வியக்கத்தக்க அழகு பொருந்தியவளாக விளங்கினாள். ஆனாலும் லடோனாவிடம் இயற்கையாகவே அமைந்திருந்த அன்பு, அறம், கட்டுப்பாடு, தோழமையுடன் பழகும் சுபாவம் ஆகிய எதுவும் ஜீனோவிடம் இல்லை. மாறாக, பிறர் நலத்தை விரும்பாமை, பிறர் வாழப் பொறுக்காமை, அன்பற்ற தன்மை, கொடுமை, தன்னலம் பேணும் சுபாவம் ஆகிய அனைத்தும் நிரம்பி இருந்தன.

காரணமற்ற பகை, துவேஷம், குரோதம் ஆகிய அத்தனையும் உடையவள் ஜீனோ. எனவே, லடோனாவைப் பார்ப்பதான் பொருட்டு, விண்ணுலகில் இருந்து மண்ணுலகுக்கு இறங்கி வந்தாள்.

லடோனாவின் வியக்க வைக்கும் பேரழகும், அவளின் உயரிய பண்பாடுகளும் ஜீனோவைப் பேச்சிழக்க வைத்தது.

அமைதியின் வடிவான லடோனாமேல், ஆத்திரத்தின் வடிவமான ஜீனோ பெரும் பகை கொண்டாள்.

லடோனா தனியாக இருக்கக் கூடிய சந்தர்ப்பத்தில் அவள் முன் பேரோளியாகத் தோன்றினாள். தன் கண் முன் விண்ணுலகப் பேரரசியும் ஜீனோ தோன்றியதைக் கண்டவுடன், லடோனோ எழுந்து அவளுக்குத் தன்னுடைய பணிவான வணக்கங்களை சமர்ப்பித்தாள்.

ஆனால், லடோனாவின் இவ்வணக்கமும், பணிவும் தன்னைக் கேலி செய்வதைப் போல ஜீனோவுக்குத் தோன்றியதே தவிர, உண்மையான பணிவாக அதனைக் கருதவே இல்லை.

''லடோனா நான் உன் மேல் கோபமாக இருக்கிறேன். நீ இந்த உலகில் வாழத் தகுதியற்றவள். ஆயினும் உனக்கு உயிர்ப்பிச்சை தருகிறேன். நீ மனிதர் எவருடைய கண்ணிலும் படாமல் எங்காவது ஓடிப்போ... உன்னைப் பற்றி எவரும் இனிப் புகழ்வதை நான் கேள்விப்படக் கூடாது, உன்னுடைய வியக்க வைக்கும் அழகு இனிப் போற்றிப் புகழ்படக் கூடாது. இந்த வீட்டிலோ, இந்தத் தெருவிலோ, இந்த வீதியிலோ இந்த ஊரிலோ இந்த நாட்டிலோ இனி ஒரு நிமிடமும் தங்கக் கூடாது. எங்காவது மனித சஞ்சாரமற்றுக் காணப்படும் காட்டிற்கு ஓடிச் சென்று வாழ். இதை நீ மீறினால் விளைவு விபரீதமாகும்,'' என்று ஆத்திரத்துடன் எச்சரித்து விட்டு, அவ்விடத்தை விட்டு மறைந்து போனாள்.

லடோனா ஜீனோவின் வார்த்தைகளைக் கேட்டுப் பெரிதும் அதிர்ச்சியடைந்தாள். மக்களுக்குக் கோபம் ஏற்பட்டால், மன்னனிடம் சொல்லலாம். மன்னனும் கோபப்பட்டால், இறைவனிடம் முறையிடலாம். இந்த இறைவனே கோபப்பட்டால் லடோனாவின் நிலைமை மிகப் பெரும் தர்மசங்கடத்தில் ஆழ்த்தப்பட்டு விட்டது.

அவளுக்குத் தன்னுடைய வீட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் தெரியாது. அவளுக்கென்று தோழியர் கிடையாது. ஆனாலும், அவளுடன் பழகுபவர்களிடம் கண்ணியமான முறையில் அவள் நடந்து கொண்டிருந்தாள். இனி... தாமதமின்றி அவள் வீடு, வாசல், சொத்து, உடைமைகள் ஆகிய அனைத்தையும் துறக்க வேண்டியதொரு நிலைமை. லடோனா ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.

வீட்டை விட்டுத் தன்னந்தனியாய் எவரிடமும் சொல்லாமல் கிளம்பிச் சென்றாள். மிக நீண்ட தூரம் நடந்து, நடந்து இறுதியில் சலசலத்து ஓடும் ஆற்றங்கரை ஒன்றிற்கு வந்து சேர்ந்தாள். அந்த ஆற்றைக் கடந்து அக்கரை செல்ல அவள் எண்ணினாள். ஆனாலும், அக்கரை செல்வதற்குரிய வாய்ப்பும், வசதியும் கண்ணுக் கெட்டிய வரை அவளுக்கு கிடைக்கவில்லை.

எனவே, சுற்றும் முற்றும் தன் பார்வையை ஓடவிட்டாள். அந்த ஆற்றங்கரையின் ஓர் ஓரத்தில் பழைய படகு ஒன்று காணப்பட்டது. அந்தப் படகிலே துடுப்புகள் எதுவும் இல்லை. அனாதையாக எவ்வித ஆதரவுமின்றி அவளைப் போலவே இருந்தது. அந்த படகின் அடிப்புறத்தை ஆற்றின் தெள்ளிய நீரலைகள் முட்டி முட்டி மோதி அதை ஆற்றங்கரையிலிருந்தே அப்புறப்படுத்திவிட வேண்டும் என்பதைப் போல செயல்பட்டுக் கொண்டிருந்தன.

அதற்குமேல் லடோனா எதையும் யோசிக்கவில்லை. ஒருவகையில் பார்த்தால் இந்தப் படகின் நிலைதான் தான் இப்போது அனுபவிக்கும் நிலை என்று எண்ணிக் கொண்டாள். மிகச் சிறந்த அழகியான லடோனா, தன் வாழ்க்கையின் விதியை நொந்தவாறே அந்தப் படகைத் தன் பலம் கொண்ட மட்டும் ஆற்றின் நீர்ப்பரப்பில் உந்தித் தள்ளினாள். பின்னர் அப்படகின் மேல் ஏறி அமர்ந்து கொண்டாள்.

தன்னுடைய விதி நல்ல விதியாக அமைந்திருந்தது என்றால் எல்லாம் நல்லபடியாக நடக்கட்டும். துர்விதியாக இருந்தால், நடப்பது நடக்கட்டும் என்று அவள் தீர்மானித்தாள்.

அந்தப் படகு, தண்ணீரில் மிதக்கக்கூடிய சுகத்தை அனுபவிப்பதுபோல அங்கிருந்து நகர்ந்து செல்லத் துவங்கியது. படகினுள் துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் நீர் நிறைய அழுதுகொண்டே அமர்ந்திருந்தாள் லடோனா. அவளுக்குஆறுதல் கூற அங்கே எவரும் இல்லை.

படகு மெல்ல, மெல்ல நகர்ந்து, ஆற்றின் போக்குக்கு ஏற்றபடி வேகமாகவும் நிதானமாகவும் தண்ணீரில் தன் போக்கில் நகர்ந்தது.

பகல் பொழுது அஸ்தமனமாயிற்று மெல்ல மெல்ல இருட்ட ஆரம்பித்தது. ஆயினும் படகு நிற்கவே இல்லை. அது தண்ணீரில் மிதந்து கொண்டே சென்றது.

அழுது அழுது களைத்துப்போன லடோனா இரவு தந்த அச்சத்தில் கண்களை மூடியதும், தன்னை மறந்து உறங்கிப் போனாள்.

(-1 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us