PUBLISHED ON : ஜூலை 09, 2010
ஒருதடவை நகுலன் என்பவன் ஆற்றங்கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, ஆற்றில் தவறி விழ இருந்தார். அப்போது அவருக்குப் பக்கத்தில் நின்றிருந்த அவருடைய நண்பர் ஒருவர் நகுலன் ஆற்றில் விழாதபடி அவரைக் காப்பாற்றினார்.
இதற்குப் பிறகு அவர் நகுலனைப் பார்க்கும் போதெல்லாம், ""அன்று ஆற்றில் தவறி விழ இருந்தீர்களே... நான் உங்களை காப்பாற்றினேனே நினைவிருக்கிறதா?'' என்று எல்லாருக்கு கேட்கும்படியாகக் கூறி வந்தார்.
அந்த நண்பர் அவ்வாறு கூறுவது நகுலனுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், அந்த நண்பரோ, பார்க்கும்போதெல்லாம், ""நீங்கள் ஆற்றில் விழாமல் காப்பாற்றினேனே, ஞாபகம் இருக்கிறதா?'' என்று அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். இதனால் எரிச்சல் அடைந்த நகுலன், ஒருநாள் அந்த நண்பர் இவ்வாறு கேட்டபோது அவர் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குச் சென்றார். கூட இருந்தவர்களையும் அப்படியே வரச்சொன்னார்.
ஆற்றங்கரைக்குச் சென்றவர் சட்டென்று ஆற்றில் குதித்துவிட்டார். முன்பு அவரைக் காப்பாற்றிய நண்பர், தண்ணீரில் இறங்காமல் கரையில் இருந்தபடியே, ""நகுலா... நகுலா...'' என்று கத்தினார். தண்ணீரில் குதித்த நகுலன் மெல்லத் தண்ணீருக்குள் எழுந்து நின்றார். தண்ணீரின் ஆழம் அவரது கழுத்தளவு தான் இருந்தது. கழுத்தளவு தண்ணீரில் நின்று கொண்டு, ""நண்பரே! அன்று நீங்கள் என்னை ஆற்றில் விழும் போது தடுக்காமல் இருந்தால், இம்மாதிரி விழுந்து நனைந்திருப்பேன் அவ்வளவுதான். அன்று என்ன நேரிட வேண்டுமோ, அதை இன்று நான் அனுபவித்து விட்டேன். எனவே இனி நீங்கள் என்னைப் பார்க்கும் போதெல்லாம் ஆற்றில் நான் விழாமல் காப்பாற்றியதைப் பற்றிப் பெருமையுடன் சொல்லிக் கொள்ள வேண்டாம்!'' என்றார். பெருமையடித்த நண்பர் வெட்கி தலைகுணிந்தார்.
