PUBLISHED ON : ஜூலை 15, 2011
காட்டில் தாய்மான் ஒன்றும், குட்டி மான் ஒன்றும் வாழ்ந்து வந்தன.
''அம்மா! எனக்கு ஒரு சந்தேகம்!'' என்றது குட்டி மான்.
''எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேள்!'' என்றது தாய் மான்.
''அம்மா! நாய்களைவிட நீங்கள் அளவில் பெரியதாக இருக்கிறீர்கள். வலிமையான கொம்புகளும் உள்ளன; வேகமாகவும் ஓடுகிறீர்கள். இது உங்களுக்கும் தெரியும். இருந்தும் நாயைப் பார்த்ததும் ஏன் அஞ்சி ஓடுகிறீர்கள்? அவற்றை எதிர்த்து சண்டை செய்தால் அவை ஓட்டம் பிடிக்காதா?'' என்று கேட்டது.
''மகனே! நீ சொல்வது அனைத்தும் உண்மைதான். அவை எனக்கும் புரிகிறது. நாயின் குரைப்பொலி கேட்டதும், வலிமையும் வீரமும் என்னைவிட்டு நீங்கி விடுகிறது. அச்சத்துடன் ஓடத் தொடங்குகிறேன்!'' என்றது அது.
வலிமை இருப்பதால் யாருக்கும் வீரம் வருவது இல்லை. வீரம் உள்ளத்தில் இருந்து வர வேண்டும் என்பது குட்டி மானுக்குப் புரிந்தது. அது சிங்கராஜா இனத்திற்கே உரியது என எண்ணி ஆச்சரியப்பட்டது.
***
