தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/அதிசயப் படகு!

அதிசயப் படகு!

அதிசயப் படகு!


PUBLISHED ON : ஜன 29, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 29, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மணிகண்டன் மிகவும் நேர்மையானவன். தந்தையை இழந்த அவனுக்கு ஒரே துணை அவனுடைய அம்மாதான். உடல் நலம் குறைவானவள். அம்மாவை நல்லபடியாக, மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளவேண்டும் என எண்ணினான் மணிகண்டன். அவள் உடல் நலம் தேற நல்ல சத்தான உணவு, பழவகைகள் அனைத்தும் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் மிகவும் கடுமையாக உழைத்தான்.

பல நாட்களில் அவனின் உழைப்பிற்கு தகுந்த கூலி கிடைத்தது. ஆயினும் வாய் திறந்து, 'எனக்குக் கூடுதலாகக் கூலி வேண்டும்' என்று கேட்க மாட்டான்.

கிடைத்த கூலியில் கிடைத்த தானியங்களை வாங்கி வந்து அம்மாவிற்கு கஞ்சி வைத்துக் கொடுப்பான்.

''மணிகண்டா! நீயும் என்னோடு உட்கார்ந்து கஞ்சியை குடிடா!'' என்று அம்மா கெஞ்சும் போதெல்லாம், ''போம்மா! இப்பதான் வயிறு முட்ட, முட்ட கஞ்சியைக் குடித்து விட்டு உனக்குக் கொண்டு வந்திருக்கிறேன். தகராறு பண்ணாம சாப்பிடும்மா,'' என்று ஒரு பெரிய பொய்யைச் சொல்லி அம்மாவைச் சாப்பிடச் சொல்வான்.

அம்மாவின் கண்கள் கலங்கி விடும்.

''உனக்கு ஒரு வாய் சோறு ஆக்கிப் போடாம... இப்படிப் படுத்துக்கெடக்கிறேன். நீ உழைச்சு சம்பாதிச்சு எனக்கு சோறாக்கிப் போடறே,'' என்று வாய் ஓயாமல் புலம்பு வாள்.

அம்மாவிற்குத் தெரியாமல் வயிறு முட்ட, முட்ட தண்ணீரைக் குடித்து தன் பசியை ஆற்றிக் கொள்வான் மணிகண்டன்.

அன்று மாலை -

அவன் வேலைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் அவன் ஒரு பாலத்தைக் கடக்க வேண்டி இருந்தது. தூரத்தில் ஒரு வயதான கிழவர் நடக்க முடியாமல் தள்ளாடியபடியே வருவது தெரிந்தது.

பாவம் அந்தக் கிழவர், ஓடிப்போய் அவரது கைகளைப் பிடித்து அழைத்து வர வேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோதே, கால்கள் தடுமாறி பாலத்திற்குக் கீழே மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த ஆற்று நீரில் அவர் விழுந்து விட்டார். பதறிப்போன மணிகண்டன் சட்டென, ஆற்றினுள் குதித்து மிகுந்த பிரயாசையுடன் அக்கிழவனைக் கரைக்குக் கொண்டு வந்து குளிரால் விறைத்துப் போயிருக்கும் அவரது உடலைத் தான் அணிந்திருந்த சட்டையை அவிழ்த்துத் துடைத்து விட்டான்.

அவர் கண் விழித்ததும் கைத்தாங்கலாக அவரது இருப்பிடத்திற்கு அழைத்துச் சென்றான்.

''உன்னைப் போன்ற இத்தனை ஒழுக்கமான பையனை இதுவரை நான் பார்த்ததே இல்லை. உன் உயிரைத் துச்சமாக நினைத்து என்னைக் காப்பாற்றினாய். அதற்கு ஈடாக நானும் உனக்கு ஏதேனும் செய்ய வேண்டுமல்லவா?'' என்று சொல்லி தலையணைக் கடியிலிருந்து சில பொற்காசுகளை அள்ளிக் கொடுத்தார்.

''வேண்டாம் தாத்தா... வேண்டாம் தாத்தா...'' என்று மிகப் பிடிவாதமாக மறுத்தான் மணிகண்டன்.

சிறிது நேர சச்சரவிற்குப் பிறகு அரை மனதோடு மணிகண்டன் அதனை பெற்றுக் கொண்டான்.

பிறகு புறப்படும் முன், ''நீ எனக்கு உயிர்ப் பிச்சை கொடுத்த குழந்தை. அதற்கு ஈடாக நானும் ஒரு பரிசு கொடுக்க வேண்டும்'' என்று சொல்லி அருகிலிருந்த அலமாரியைத் திறந்து ஒரு சிறிய மரப்பெட்டியை எடுத்து வந்தார்.

அதிலிருந்து ஒரு சிறிய காகிதப் படகை எடுத்தார். அது மிக அழகிய காகிதப் படகு. அதற்குள் படுத்துக்கொள்வதற்கு ஏதுவாக ஒரு சிறிய கட்டில் மற்றும் அழகிய இரண்டு துடுப்புகள் மற்றும் அனைத்து வசதிகளும் நிரம்பி இருந்தன.

''மணிகண்டா! இது குழந்தைகள் விளையாடும் பொம்மைப் படகல்ல. இது அதீத மந்திர சக்தி வாய்ந்த படகு. நீ என்னைக் காப்பாற்றினாய். அதைப் போல் இப்படகு உன்னைக் காப்பாற்றும்.

''இன்னும் சிறிது நாட்களில் இவ்வூரைப் பெரிய வெள்ளம் சூழ்ந்து கொள்ளும். அப்போது இந்தப் படகை நீ தண்ணீரில் வைத்தால் உடனே இது மிகப்பெரிய, எல்லா வசதிகளையும் கொண்ட, மிக உறுதியான மரப்படகாக மாறிவிடும்.

''இதில் ஏறி, நீ பத்திரமான இடத்துக்குச் செல்லலாம். ஆனால், ஒன்று இந்தப் படகை நீ வெள்ளத்தில் செலுத்திப் போகும்போது வெள்ளத்தில் தத்தளிக்கும் மிருகங்கள், பறவைகள் அனைத்தையும் ஏற்றிக் கொள். ஆனால், தப்பித் தவறிகூட எந்த ஒரு மனிதனையும் ஏற்றி விடாதே. அப்படி ஏற்றிக் கொண்டால் அவனால் உனக்குத் துன்பங்கள் ஏற்படும்,'' என்று திரும்பத் திரும்பச் சொல்லி வழி அனுப்பி வைத்தார்.

போகும் வழியில் அம்மாவிற்கு நிறையவே உணவுகளையும், பழங்களையும் வாங்கி போனான்.

''ஏன்டா ராசா இத்தனை வாங்கி வந்திருக்கே,'' என்றாள் அம்மா.

''இவை உங்களுக்காகதான் வாங்கி வந்தேன் அம்மா. நன்றாக சாப்பிடுங்கள்,'' என்றான்.

அன்றிரவு-

மழை பெய்ய ஆரம்பித்து, பிறகு பெரு வெள்ளமாக மாறி இவனது குடிசையைச் சுற்றி நின்றது. வெள்ளத்தில் குடிசையே அடித்துப் போய்விடும் அபாயம்.

''என்னடா ராசா செய்வது?'' என்று அம்மா கவலைப்பட்டாள்.

சட்டென்று அப்போதுதான் அந்தக் கிழவர் கொடுத்த காதிதப் படகு நினைவுக்கு வந்தது.

''பயப்படாதே அம்மா!'' என்று சொல்லி அந்தக் காகிதப் படகை எடுத்துத் தண்ணீரில் விட கண் இமைக்கும் நேரத்தில் அது விரிந்து மிக அழகிய, உறுதியான, மிகப்பெரிய மரப் படகானது!

இருவரும் ஏறி அதில் உட்கார... படகைச் சுற்றி மிருகங்கள்... பறவைகள்... பாம்புகள்... எறும்புகள் என்று ஒரே கூட்டம். எந்த பயமுமின்றி அவை அனைத்தையும் தன் படகில் ஏற்றிக் கொண்டான்.

வெள்ளம் நாலாபுறமும் சுழித்துக்கொண்டு ஓட, மிக லாவகமாக வெள்ளத்தை கிழித்துக் கொண்டு ஓடியது அந்த சக்தி வாய்ந்த மரப் படகு.

அப்போது, ''மணிகண்டா! மணிகண்டா! என்னைக் காப்பாத்துடா,'' என்று குரல் கேட்டது.

திடுக்கிட்டுப் பார்த்தவனுக்கு ஒரே அதிர்ச்சி.

கூப்பிட்டவன் அவ்வூர் பணக்காரரின் ஒரே வாரிசு.

மணிகண்டன் ஏழை என்பதால் அவனிடம் முகம் கொடுத்துப் பேசமாட்டான். இப்போது நீச்சல் தெரியாத அவன் மூழ்கிவிடும் அபாயம்.

'என்ன ஆனாலும் சரி, இந்த மந்திர சக்தி வாய்ந்த படகில் மனிதனை மட்டும் ஏற்றிக் கொள்ளாதே' என்று அந்தக் கிழவர் படித்துப் படித்துச் சொல்லியும், 'பாவம் ஆபத்தில் இருக்கிறான். இவனைக் காப்பாற்றுவது என் கடமையல்லவா?' என்ற நல்லெண்ணத்தில் துடும்பை வேகமாகச் செலுத்தி படகை அவன் அருகில் எடுத்துச் சென்று அவனையும் படகில் ஏற்றிக் கொண்டான்!

படகு கரையை அடைந்தது. வெள்ளமும் வடிந்துவிட்டது. உடனே படகை இழுத்து கரையில் போட்டான். அந்த மந்திர சக்தி வாய்ந்த படகு, உடனே சுருங்கி சின்னக் காதிதப் படகாக மாறி விட்டது.

இதனை கவனித்த அவன் நண்பன் கோபாலுக்கு ஒரே ஆச்சரியம்.

''ஏண்டா மணிகண்டா! இத்தனை சக்தி வாய்ந்த படகை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய்? வா, இதனை அரசரிடம் எடுத்துச் சென்றால் அப்படியே உன்னை மிகப்பெரிய பணக்காரனாக்கி விடுவார்,'' என்றான்.

''வேண்டாம் நண்பா! என் அம்மாவைத் தனியே விட்டுப் போகமுடியாது,'' என்றான்.

''அப்படியானால் நான் இந்த அதிசயப் படகை அரசரிடம் எடுத்துச் செல்கிறேன். மிக அதிசய சக்தி வாய்ந்த படகிற்கு நிறைய பணம் கொடுப்பார். அப்படியே அந்தப் பணத்தை கொண்டுவந்து உன்னிடம் கொடுத்து விடுகிறேன். நீ உன் பணப்பிரச்சனையை தீர்த்துக் கொள்.

''நீயும், உன் அம்மாவும் மிக வசதியாக வாழ ஒரு பெரிய பங்களாவை வாங்கிக் கொள், கூப்பிட்ட குரலுக்கு வேலைக்காரர்களை நியமித்துக் கொள்ளலாம்,'' என்று சொல்லி அந்த சக்தி வாய்ந்த காகிதப் படகை சிறிய மரப்பெட்டியில் வைத்து எடுத்துச் செல்ல அனுமதி கேட்டான்.

மணிகண்டனும் ஒப்புக்கொண்டான்.

''அரசரைச் சந்தித்த கோபால், மன்னா! உங்களுக்காக ஒரு மிக அபூர்வமான ஒரு படகைக்கொண்டு வந்திருக்கிறேன். இதனைப் பார்ப்பவர்கள், இது குழந்தைகள் விளையாடும் சிறிய காகிதக் கப்பல் என்று எண்ணி ஏமாந்து விடுவர்.

''ஆனால், தண்ணீரில் விட்டால் இது நிஜ மரப்படகாக மாறும் அதிசயத்தை நீங்கள் காண வேண்டும்,'' என்று சொல்லி அரசரை ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்று காகிதப் படகை ஆற்றில் விட்டதும் அது மெதுவாக விரிந்து, பரந்து, ஒரு மிகப்பெரிய மரப்படகாக மாறியது.

இதைப் பார்த்து வியந்து போனார் மன்னர்.

''மன்னருக்கு இது என் அன்பான காணிக்கை,'' என்றதும் மன்னர் மகிழ்ந்து உடனே கோபாலுக்கு மந்திரி பதவி கொடுத்து ஒரு மிகப்பெரிய பங்களாவையும் கொடுத்தார்.

அங்கே மணிகண்டன் பாவம், தன் நண்பன் கோபாலின் வரவிற்காகக் காத்திருந்தான். அவன் காத்திருந்தது தான் மிச்சம். கோபால் போனவன் போனவன்தான்.

'பாவம் கோபாலுக்கு என்ன ஆயிற்றோ?' என்ற உண்மையான அக்கறையுடன் அவனைத் தேடி தலைநகருக்குச் சென்றான்.

அப்போது முன்னும், பின்னும் சீருடை அணிந்த வீரர்கள் கையில் கத்தி, கம்புகள் ஏந்தி வீர நடை போட்டு வர, அவர்களின் நடுவே மிக விலை உயர்ந்த பல்லக்கில் கோபால் ஜரிகை உடையில் ஆபரணங்கள் அணிந்து, நகர்வலம் வந்து கொண்டிருந்தான். இப்போது அவன் அரசரின் அன்பிற்குப் பாத்திரமான உயர் அதிகாரி ஆயிற்றே? மற்றைய சாதாரணக் குடிமகன்களைப் போல தன்னந்தனியாக நடந்து செல்ல முடியுமா?

எது எப்படியோ... தன் நண்பனைக் கண்டு விட்ட மகிழ்ச்சியில், மணிகண்டன், ''கோபால்... கோபால்...'' என்று கூவிக் கொண்டே அவனருகில் செல்ல முயன்றான்.

இவனைக் கண்டு விட்ட கோபால் அப்படியே அதிர்ந்து போனான்.

தொடரும்...

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us