
மதுரை, ஆரப்பாளையம், முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளியில், 1964ல், 8ம் வகுப்பு படித்தேன்.
வகுப்பு ஆசிரியை சாரதா அம்மையார் மிகவும் கண்டிப்பானவர். அன்பையும், பாசத்தையும் காட்டுவதில், அவருக்கு இணை யாருமே இல்லை.
ஒருமுறை வகுப்பு நேரத்தில், ஊர் சுற்ற கிளம்பி விட்டேன். மறுநாள், 'காய்ச்சல்' என்று பொய் சொன்னேன்.
என் பொய்யை புரிந்த ஆசிரியை, அருகிலிருந்தவனிடம், 'அவன் அம்மா கிட்ட கேட்டுவா...' என்று அனுப்பி, வெளியே நிற்க வைத்து விட்டார். விசாரித்து உண்மையை சொல்லி விட்டான்.
கோபமடைந்த ஆசிரியை பிரம்பால் கால் முட்டியின் கீழ் விளாசி, வெயிலில் நிற்க வைத்து தண்டனை தந்தார். பரிதாபமாக நின்ற என்னை மதிய உணவு நேரத்தில் அழைத்து, 'கை, கால் முகத்தை கழுவி வா...' என்றபடி, டிபன் பாக்சை திறந்து பாதி உணவை தந்தார்.
அத்துடன், 'உன் அப்பா, மூட்டை துாக்கி படிக்க வைக்கிறார்; நன்கு படித்து பெரிய ஆளாக வர வேண்டாமா... இனிமேல் பள்ளிக்கு மட்டம் போடக் கூடாது...' என அன்புடன் அறிவுரை கூறினார். கண்ணீரை துடைத்தார்.
தற்போது, என் வயது, 69; நெல்லை செல்வம் என்ற புனைப்பெயரில், 22 புத்தகங்கள் எழுதி வெளியிட்டுள்ளேன். என் தமிழ் தொண்டை பாராட்டி, தமிழக அரசு அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருதை வழங்கி சிறப்பித்தது.
இவற்றுக்கு அடித்தளமாக என்னை உருவாக்கிய, அந்த ஆசிரியையை நன்றியுடன் மனதில் கொண்டுள்ளேன்.
- சு.லட்சுமணன், சென்னை.
தொடர்புக்கு: 98405 06628

