தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/குரங்கின் பந்தாட்டம் (2)

குரங்கின் பந்தாட்டம் (2)

குரங்கின் பந்தாட்டம் (2)


PUBLISHED ON : செப் 06, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 06, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்றவாரம்: குரங்கு குட்டி கணியனும், கன்றுக்குட்டி ஆனந்தியும், முயல்குட்டிகளும் நட்புடன் ஒரே வீட்டில் வசித்தன. அங்கு, மர்ம கதவை கண்ட குரங்குக்குட்டி, அதன் வழியாக வெளியேறி, கால்பந்தாட்ட மைதானத்துக்கு சென்றது. இனி -

குரங்கு குட்டி கணியன், ரொம்ப குஷியாக, கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தது. கடும் போட்டியிலும், முயன்று விளையாடி, எட்டு கோல் போட்டது. அந்த அணியினருக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை.

'நாளைக்கும் நீ வந்து ஆடு... அப்போ தான் போட்டி நல்லா இருக்கும்...' என்று உற்சாகப்படுத்தியது அணி தலைமை.

கணியனுக்கு வீட்டு ஞாபகம் வந்தது; ஆனந்தியின் கோப முகம், மனக்கண்ணில் வந்ததும், உடல் நடுங்க, 'ஐயோ... என்ன செய்வேன்...' என்று வாய்விட்டு கதறியது.

கால்பந்தாட்ட மைதானத்தில் இருந்த கஜமுகனார் என்ற யானை, கணியனை தேற்றி, பரிவுடன் விசாரித்தது. யோசனை சொல்வதில், கில்லாடி என, புகழ் பெற்ற கஜமுகனார், 'பூ... இதுதானா பிரமாதம். இளநீர் வாங்கி கொடுத்தா நல்ல யோசனை சொல்றேன்...' என்றது.

'இளநீர் வாங்கித் தர காசில்லை; கடைக்காரனிடம் உனக்கு கொடுக்கும் அளவு இளநீரும் இருக்காது...' என்று உதட்டை பிதுக்கியது கணியன்.

இதைக்கண்டு சிரித்த கஜமுகனார், 'வந்த சுரங்கப்பாதை வழியாகவே மறுபடியும் உன் வீட்டுக்கு போ; போனதும் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொள். சுரங்க வழியைக் கண்டுபிடிக்கப் போய், ரொம்ப அவஸ்தைப்பட்டதாகச் சொல். அப்புறம் பாரேன்... உனக்கு நடக்கும் உபசாரத்தை...' என்று கண்ணைச் சிமிட்டியது.

அந்த யோசனைப்படி, சுரங்க வழியாக சென்ற கணியனுக்கு துாக்கி வாரிப் போட்டது. கதவைத் திறக்க முடியவில்லை. கதவில் காதை வைத்து, வீட்டுக்குள் நடப்பதை கேட்க முயன்றது.

அங்கு, 'பாவம்... கணியனை இன்னும் காணோமே; கோபித்து, பசியோடு எங்கே அலைகிறதோ...' என, ஆனந்தி வருந்துவதை கேட்ட கணியன், கதவைத் தட்டியது. திடீரென்று, அறை சுவரில் தட்டும் சத்தம் வரவே திடுக்கிட்டன.

சத்தம் வரும் இடத்தைக் கண்டுபிடிக்க முயன்றன. பயத்தில் நடுநடுங்கிய நீலம், 'உடனே, போலீஸ் புலியை அழைப்போம்; ஒருவேளை பிசாசாக இருக்கலாம்...' என்றது.

'புலியால், பிசாசைக் கைது செய்ய முடியாது...' என்று, சுவர் பக்கமாக காதை வைத்து சோதித்த ஆனந்தி, சுவர் அதிர்வை கணித்து, ஒட்டியிருந்த காகிதத்தை கிழித்தது தான் தாமதம்... கதவை முட்டித் தள்ளியபடி, கணியன் குதித்தது.

உடல் முழுவதும், அழுக்கும், ஒட்டடையுமாக, அலங்கோலமாக இருந்தது கணியன். பெருமூச்சு வாங்கியபடி, மர்மக் கதவையும், அதன் வழியாக போய் பட்ட கஷ்டத்தையும் கதை கதையாகச் சொன்னது.

அதை கேட்ட ஆனந்தி, 'ஐயோ... பாவம்... ஒன்றும் சாப்படவில்லையா... இதோ உணவு கொண்டு வருகிறேன்...' என்று, ஒரு சீப்பு மலைவாழைப் பழத்தைக் எடுத்து வந்தது. பின், சமைக்க ஆரம்பித்தது.

ஐந்தே நிமிடத்தில், இட்லியுடன் வந்த ஆனந்தியை, நேருக்கு நேர் பார்க்க தயங்கியது கணியன். தான் சொன்ன பொய்யை நம்பி நடக்கும் உபசாரத்தை ஏற்க முடியாமல். மனசாட்சி குத்தியது.

முகத்தில் அசடு வழிய, 'ஆனந்தி... எனக்கு இட்லி வேண்டாம்; உங்களை ஏமாற்றி விட்டேன்; இன்று முழுவதும் ஆனந்தமாக, பந்து விளையாடினேன்...' என்று சொன்ன போதே, கணியன் கண்களில் நீர் நிறைந்து விட்டது.

'எங்களுக்கு அது தெரியுமே... அதனால் என்ன, முதலில் இட்லியை சாப்பிடு...' என்ற நீலம் முயல் குறும்பாக சிரித்தது.

'என்ன... உங்களுக்குத் தெரியுமா...' என்று குதித்தது கணியன்.

'ஆமா... ஆமா... அறையிலிருந்து எப்படி வெளியில் போனாய் என்பது தான், தெரியாதே தவிர, பந்தாட்டத்தில், நீ எட்டு கோல் போட்டதைப் பற்றித் தான், ஊர் முழுக்க பேச்சாக இருக்கிறதே... இது, ஆனந்தி காதில் விழுந்தால், உன்னை இழுத்துக் கொண்டு வந்து விடுமோ என்ற அச்சத்தில் தான் சொல்லவில்லை...' என்றது மணி.

ஆனந்திக்கு, சிரிப்பதா, கோபிப்பதா என்று தெரியவில்லை.

நிலமையை சமாளிக்கும் விதமாக நீலம், 'ஆனந்தி... ஆனந்தி... அவனை கோபிக்காதே; அவனைத்தான் ஊரே நம்பிக்கொண்டிருக்கு; வெற்றி பெற்றால், பரிசும், பாராட்டும் கிடைக்கும்...' என்று, சமாதானப்படுத்தி, உற்சாகமூட்டியது.

மறுநாள், பந்தாட்டத்தில் வெற்றி பெற்ற கணியன், மகிழ்ச்சியில் துள்ளி குதித்தது.

முற்றும்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us