PUBLISHED ON : மே 18, 2018

ஜப்பான் நாட்டு காட்டில், சிவப்பு இந்தியச் சிறுவன் ஒருவன், பாட்டியுடன் வசித்து வந்தான். அவன் வேட்டையாடுவதில் கெட்டிக்காரன்; அதற்காக, காடு முழுவதும் சுற்றுவான்.
''நீ எந்த திசைக்கு வேண்டுமானாலும் போ... ஆனால், மேற்கு திசையில் மட்டும் போய் விடாதே...'' என்று, புத்திமதி கூறினாள் பாட்டி. 'பாட்டி எதற்காக, இப்படி சொல்கிறாள்...' என்று, சிறுவனுக்கு புரியவில்லை.
ஒரு நாள் -
''ஏன் பாட்டி... மேற்கு திசையில் போக கூடாது என்கிறாய்...'' எனக் கேட்டான் சிறுவன்.
''நமக்கு வேண்டாத பூதம் ஒன்று அங்கு இருக்கிறது; அது உன்ன கொன்று விடும்; உன்ன பிரிஞ்சி என்னால் வாழ முடியுமா... அதனால் தான் மேற்கு திசையில் போக வேண்டாம் என்றேன்...'' என்று விளக்கினாள்.
சிறுவன் மிகவும் நல்லவன். எல்லாரும், அவன் மீது அன்பு செலுத்துவர்; பாட்டி சொல்லை தட்ட மாட்டான். அதேசமயம், 'எதை கண்டும் பயப்படாதே... தைரியமா இரு' என்று பாட்டி சொல்லியிருந்த அறிவுரையும், அவன் மனதில் இருந்தது.
அந்த அறிவுரை தந்த ஊக்கத்தால், மேற்கு திசை நோக்கி, செல்ல முடிவு செய்தான். 'என்ன தான் ஆகிறது என்று பார்த்து விடலாம்; பேயாவது... பூதமாவது' என்று எண்ணியவன், மறுநாள் அதிகாலையே எழுந்தான். நிம்மதியாக துாங்கி கொண்டிருந்தாள் பாட்டி. வில்லையும், அம்பையும் ஏந்தி, மேற்கு திசை நோக்கி சென்றான்.
சில மணி நேர பயணத்துக்குப் பின், ஒரு குளத்தை கண்டான். அதை சுற்றி, நிறைய மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. அவனுக்கு, தாகம் ஏற்பட்டது. தண்ணீர் குடிக்கலாம் என்று எண்ணி குளத்தில் இறங்கினான். அப்போது, உரக்க கத்தும் குரல் ஒன்று கேட்டது.
'யாரடா நீ... எப்படிடா இத்தனை தைரியமாக இங்கு வருவாய்...' என்ற குரல் வந்த திசையில் பார்த்தான்; யாரும் இல்லை.
சிறுவன் தைரியமாக நின்றான். மீண்டும் குரல் கேட்டது.
'உடனே இவ்விடத்தை விட்டு ஓடி விடு; இல்லை என்றால், புயலை கிளப்பி, உன் பாட்டியின் குடிசையை துாள் துாளாக்கி விடுவேன்...' என்றது.
சிறுவன் கொஞ்சமும் பயப்படாமல், ''அப்படியே செய்... அதுவும் நல்லது தான்... பழைய குடிசை சிதைந்து கிடக்கிறது... விறகுக்கு பயன்படுத்திக் கொள்வேன்...'' என்று கூறி, வீட்டை நோக்கி நடந்தான்.
அவன், வீட்டை அடைந்த நேரம் தான், புயல் வீச ஆரம்பித்தது. சிறுவன் ஓடி போய், பாட்டியை, குடிசையிலிருந்து வெளியே துாக்கி வந்தான்; புயலால் குடிசை துாள் துாளானது. அதுப்பற்றி கவலைப்படாமல் நல்லதொரு குடிசை கட்டினான்.
பின், கீழ்த்திசையில் வசித்த மந்திரவாதியிடம் சென்றான்; மந்திரவாதி ஒரு கூழாங்கல்லை எடுத்து, மந்திரம் சொல்லி, சிறுவனிடம் கொடுத்தார். அவன் நேராக, மேற்கு திசையில் அந்த ஏரி அருகே சென்றான்.
மீண்டும் அந்த குரல், ''என்னடா... மீண்டும் இங்கே வருகிறாய்... இன்னும் சோதனைகளை அனுபவிக்க போகிறாயா...'' என்று கேட்டது.
தயக்கமோ, பயமோ இன்றி, ''நீ யாராக இருந்தாலும் சரி, ஏன் ஒளிந்து கொண்டு கூப்பாடு போடுகிறாய்... உன் முகத்தை காட்டு, நேரே வந்து சண்டை போடு, பார்க்கலாம்...'' என்று கூறி கையில் வைத்திருந்த மந்திரக் கூழாங்கல்லை ஏரிக்குள் வீசினான். உடனே, ஏரித்தண்ணீர் சூடாகி கொதிக்க ஆரம்பித்தது.
அப்போது, ஒரு பெரிய தவளை வெளிப்பட்டது; சிறுவன், அதன் மீது அம்பு எய்தான். அது, 'ஐயோ...' என்று கத்தியபடியே உயிரை விட்டது.
அதன் பின் எந்த குரலும் கேட்கவில்லை. பாட்டியும், பேரனும் சுகமாக வாழ்ந்தனர். தொல்லையும், துன்பமும் அண்டவில்லை; சிறுவன், தான் இஷ்டப்பட்ட திசையெல்லாம் சென்று உணவுப்போருட்களை சேகரித்து வந்தான்.
குட்டீஸ்... எப்பவும் தைரியமா இருக்கணும்; எதற்கும் பயப்பட கூடாது சரியா...
