தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/நேதாஜி...! (2)

நேதாஜி...! (2)

நேதாஜி...! (2)


PUBLISHED ON : ஏப் 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுபாஷின் உடல் மிகவும் மோசமானதை அறிந்த தலைவர்கள், அவரை விடுதலை செய்யுமாறு ஆர்ப்பாட்டம் செய்தனர். 'சுபாஷ் இந்தியாவில் இல்லாது வெளிநாட்டிற்குச் செல்வதாக இருந்தால், விடுதலை செய்வோம்' என்று அரசு நிபந்தன விதித்தது. அதற்கு சுபாஷ் உட்பட அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். அதனடிப்படையில், சுவிட்சர்லாந்துக்குக் கொண்டு சென்று சிகிச்சையளித்தனர்.உடல்நிலை தேறிய பின், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி என்று பல நாடுகளைச் சுற்ற வைத்தனர். அந்த நிலையிலும், விடுதலைப் போராட்டத்திற்காகப் பிரசாரத்தை மேற்கொண்டார். இந்நிலையில், சுபாஷின் தந்தை கவலைக்கிடமானார். அதனால், தலைவர்கள் சுபாஷை இந்தியா கொண்டுவர வேண்டும் என்று அரசை வேண்டினர்.அரசும் இந்தியாவிற்குச் செல்ல அனுமதியளித்தது. இருப்பினும், சுபாஷ் வருவதற்கு முன்பே தந்தையார் காலமாகி விட்டார். 1936ம் ஆண்டு லக்னோவில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் மாநாடு கூடியது. அதில் பொதுச் செயலராக சுபாஷைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தபோது, அரசு கைது செய்து சிறையிலடைத்தது.அச்சமயம், இந்தியாவுக்கு மாகாண சுயாட்சி வழங்க பிரிட்டன் முன்வந்தது. அதனடிப்படையில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஏழு மாகாணங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதனால், சுபாஷ் விடுதலை செய்யப்பட்டார். 1938ம் ஆண்டு சுபாஷைக் காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகத் தேர்ந்தெடுத்தனர். அப்போது, ''ஆங்கிலேயர் ஆட்சியை அடியோடு ஒழிக்க வேண்டும். அதற்கான சத்தியாகிரகத்தைத் தொடங்க வேண்டும். சட்டசபை உறுப்பினர் பதவிகளை காங்கிரசார் துறக்க வேண்டும்,'' என்று கூறினார்.சுபாஷ் சொன்னது மற்ற தலைவர்களுக்குப் பிடிக்கவில்லை. 1940ம் ஆண்டு மீண்டும் தலைவர் பதவிக்கு சுபாஷ் போட்டியிட்டார். காந்தியடிகள் ஆதரிக்கவில்லை என்றாலும் வெற்றி பெற்றார்.'இந்தியாவிற்கு இன்னும் ஆறு மாதத்திற்குள் பிரிட்டிஷ் அரசு சுதந்திரம் வழங்க வேண்டும்; இல்லையென்றால், அரசுக்கு எதிராகப் போராட மக்களைத் தயார்படுத்த வேண்டும்' என்றார். இதையும் பலர் ஆட்சேபித்தனர். கட்சிக்குள் பிணக்கம் ஏற்பட்டது. அதனால், தாமே தலைவர் பதவியை விட்டு விலகினார்.பின்பு, பார்வர்ட் பிளாக் கட்சியைத் தொடங்கினார். ஊர் ஊராகச் சென்று தமது கொள்கைகளைப் பிரசாரம் செய்தனர். 'அட்வான்ஸ்' என்ற ஓர் ஆங்கில நாளேட்டின் மூலம் கட்டுரைகளை வெளியிட்டார். மேலும், கொல்கத்தாவில், 'ஹால்டுவெல்' என்ற ஆங்கிலேயரின் சிலையை அகற்ற வேண்டும் என்று கிளர்ச்சி செய்தார். அதனால் அவர் மீண்டும் சிறையிலடைக்கப்பட்டார்.விடுதலையாகி வந்த சுபாஷ், 'காந்தியடிகளின் தனி நபர் சத்தியாகிரகம் கூட சுதந்திரம் பெற உதவாது. சுதந்திரம் பெற ஒரே வழி, ஆயுதம் தாங்கி ஆங்கிலேயர்களுடன் போரிட்டு விரட்ட வேண்டும்' என்ற எண்ணத்தை வெளியிட்டார். அதற்கும் காங்கிரஸ் தலைவர்கள் உடன்படவில்லை.1941ம் ஆண்டு ஜனவரி மாதம், மவுல்வியைப் போல மாறுவேடம் பூண்டு ஆப்கானிஸ்தானம் சென்றார். அதைத் தொடர்ந்து, மார்ச் மாதம் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினை அடைந்தார். அங்கு ஹிட்லரைச் சந்தித்துப் பேசினார்.தான் ஆங்கில அரசை எதிர்த்துப் போரிடுவதற்காக, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் போன்ற நாடுகளின் உதவியை நாடி, அதற்கான ஒப்பந்தங்களையும் செய்து கொண்டார். அதன்பிறகு, சிங்கப்பூர் சென்றார். அங்கு இந்தியர்களைத் திரட்டி, 'இந்திய தேசிய ராணுவம்' என்ற பெயரில் படை ஒன்றை நிறுவினார்.1943ம் ஆண்டு, 'சுதந்திர அரசாங்கத்தை' அமைத்தார். சுபாஷ், சுதந்திர இந்திய சர்க்காரின் பிரதம மந்திரியாகப் பொறுப்பேற்றார். மிகக் குறுகிய காலத்திலே ராணுவத்தைப் பலப்படுத்தினார். பல தேசியப் பள்ளிகளைத் திறந்தார். சொந்தமாகப் பத்திரிகைகளைத் தொடங்கினார். புதிய நாணயங்களை வெளியிட்டார். அதற்காக ஒரு வங்கியையையும் தோற்றுவித்தார்.சிங்கப்பூரிலிருந்து தலைமையகம் ரங் கூனுக்கு மாற்றப்பட்டது. சிங்கப்பூர் அலுவலகம், கிழக்காசிய இந்தியர்களின் நலனைக் கவனித்துக் கொண்டது. மலேயாவில், பர்மாவில், தாய்லாந்தில் பல கிளைகள் திறக்கப்பட்டன. சுதந்திரச் சர்க்காரை, ஜப்பான், சுதந்திர பர்மா, சுதந்திரப் பிலிப்பைன், சயாம், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து, மஞ்சுக்கோ போன்ற நாடுகள் அங்கீகரித்தன.போரில் ஜப்பானிய துருப்புகள் கைப்பற்றிய அந்தமான் நிகோபார் தீவுகள், இந்திய சுதந்திர சர்க்காரின் வசம் வந்தது. இந்திய தேசிய ராணுவத்தினர், இந்தியாவுக்குள் படையெடுத்தனர். பிரிட்டிஷ் இந்திய படையுடன் மோதினர். மணிப்புரி சமஸ்தானத்தில் பல இடங்களையும் கைபற்றினர். ஜப்பானியரும் அவர்களுக்குத் துணையாக இருந்தனர்.மேலும், தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தத் தயாராக இருந்த நிலையில் தான், உலகப் போரில் ஜப்பானும், ஜெர்மனியும் தோற்றன. அதனால், தேசிய ராணுவத்தினரின் பலம் குறைந்து, பின்னடைய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.ஜப்பான் மீது அமெரிக்கா ஆறு குண்டுகளை வீசி பெரும் நாசத்தை விளைவித்தது. அதனால், நேச நாடுகளிடம் சரணடைய வேண்டியதாயிற்று. அச்சமயத்தில் நேதாஜி, 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ம் நாள் ஜப்பானிய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த விமானத்தில் ஏறிப் புறப்பட்டார். அந்த விமானம், ஆகஸ்ட் 18ம் நாள் விபத்துக்குள்ளானது.அவ்விமானத்தில் பயணம் செய்த நேதாஜியும், வேறு சில அதிகாரிகளும் காயமடைந்தனர். ஜப்பானிய மருத்துவமனையொன்றில் சேர்க்கப்பட்ட நேதாஜிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்று ஆய்வுக் குழுவொன்று உறுதி செய்த போதிலும், இறக்கவில்லை என்ற ஒரு கருத்தும் அப்போது நிலவியது.சுதந்திரப் போராட்ட வீரர்களில் வீரமுழக்கமிட்டவர் நேதாஜி. அஞ்சாநெஞ்சம் கொண்டவர். தாய்நாட்டின் விடுதலைக்காக தன் உயிரையும் பணயம் வைத்துப் போராடிய அவர் என்றும் மக்களின் மனத்தில் நிலைத்திருப்பார் என்பது உறுதி.(முற்றும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us