PUBLISHED ON : அக் 31, 2020

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி, அரசு மேல்நிலைப் பள்ளியில், 1982ல், 6ம் வகுப்பு படித்தேன்.
தமிழாசிரியர் ராஜூ புரியும் வகையில் பாடம் நடத்துவார். நேர்த்தியாக தமிழ் உச்சரிக்க கற்றுக் கொடுப்பார். தவறின்றி வாசிக்கவும் பயிற்சி அளிப்பார்.
ஒருமுறை, 'எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறீர்...' என கேட்டார். மருத்துவர், பொறியாளர், போலீஸ் என பலரும் கூறினர். நான் மட்டும், 'ஆசிரியராக விரும்புகிறேன்...' என கூறினேன். உரிய காரணத்தைக் கேட்டார்.
'பிறருக்கு உதவும் எண்ணம் உடையவர் ஆசிரியர்; உயர்த்தும் ஏணிப்படியாக செயல்படுபவர். பெற்றோருக்கு பின்பும், தெய்வத்திற்கும் முன்பும், நடுநிலையுடன் செயலாற்றக் கூடியவர்... அதனால் தான் ஆசிரியத் தொழிலை விரும்புகிறேன்...'
இவ்வாறு கூறியதும், ஆரவாரத்துடன் கைதட்டல் பெற்றேன். மிகவும் மகிழ்ந்து, 'உன் ஆசை நிறைவேறட்டும்...' என ஆசிர்வதித்தார்.
தற்போது, என் வயது, 49; அரசு ஊழியராக பணிபுரிந்து வருகிறேன். பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிகிறார் மனைவி. அவரது செயல்களில், மதிப்புக்குரிய தமிழாசிரியரை தினமும் காண்கிறேன்.
- ச.கண்ணன், திண்டுக்கல்.
தொடர்புக்கு: 88071 46036
