
சர் வில்லியம் ஹெர்ச்செல் என்பவர் வான் ஆய்வாளர். 1781ம் ஆண்டு ஒருநாள் ஹெர்ச்செல் தானே உருவாக்கிய தூரதரிசினியைக் கண்களில் பொருத்திக் கொண்டு, விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருந்தார். திடீரென்று தூரதரிசினி லென்சின் ஒரு முனையில் பசுமை கலந்த நீல நிறத்தட்டு ஒன்று தென்பட்டது. வான வீதியில் இப்படி சில காட்சிகள் தெரிவது சகஜம்தான். அபூர்வமல்ல... பல நூற்றாண்டுகளாக வான் ஆய்வாளர்கள், இரவு வானில் இதுபோன்ற பொருள்களைக் காண்பது வழக்கம். இவற்றை வான் ஆய்வாளர்கள் நட்சத்திரம் என்று கருதி வந்தனர்.
ஹெர்செல்லுக்கு அந்தப் புதிய தட்டை ஆராய வேண்டும் என்ற எண்ணம் எதனாலோ ஏற்பட்டது. நட்சத்திரங்களை ஆராயும் எண்ணம் அதுவரை எந்த வான் ஆய்வாளருக்கும் ஏற்பட்டதில்லை. தான் கண்ட தட்டை மேலும் நெருக்கமாக ஆராய்ந்த போது அது நட்சத்திரங்களின் குணங்களோடு இல்லை. ஒரு வேளை வெகு தொலைவிலுள்ள காமெட்டோ (வால் நட்சத்திரம்) என்று எண்ணினார். ஆனால், அது தூம கேது. வால் நட்சத்திரமாகவும் செயல்படவில்லை. திடீரென்று அவர் மனதில் ஒரு எண்ணம் பளீரிட்டது. இது புதிய கிரகமோ? இது நட்சத்திரமல்ல... காமெட்டுமல்ல. சூரியப்பாதையில் உள்ள ஒரு புதிய கிரகம். பிளானெட் என்ற முடிவுக்கு வந்தார் ஹெர்ச்செல்.
தான்கண்ட புதிய கிரகத்துக்கு 'ஜார்ஜியம் சைடஸ்' என்று பெயரிட்டார். லத்தீன் மொழியில் இதற்கு ஜார்ஜியின் நட்சத்திரம் என்று பொருள். இங்கிலாந்தை அப்போது ஆண்டு கொண்டிருந்த மூன்றாம் ஜார்ஜ் மன்னரைக் கவுரவிக்கவே அவ்வாறு பெயரிட்டார் ஹெர்ச்செல். பெருமைப் பட்ட மன்னரும் 1782ல் ஹெர்ச்செலைத் தம் அந்தரங்க வான் ஆய்வாளராக நியமித்துக் கொண்டார். ஆனால், இந்த கிரகத்தின் பெயர் 1850ல் 'யுரானஸ்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
சூரியப் பாதையில், யுரானஸ் கிரகம் ஏழாவது இடத்தில், சூரியனிலிருந்து 1784 மில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளது. பூமியிலிருந்து 1680 மில்லியன் மைல்கள். சூரியனை ஒருமுறை சுற்றி வர, யுரானஸுக்கு, 84 ஆண்டுகளாகும். ஆகவே, யுரானஸில் பிறப்பவர்களுக்கு, 84 ஆண்டு களுக்கு ஒருமுறையே பிறந்த நாள் வரும். ஆனாலும், இந்த கிரகம் தன் இருசில் பத்து மணிக்கு ஒருமுறை சுற்றுகிறது. அதாவது யுரானஸில் ஒருநாள் என்பது நம்முடைய ஒரு நாளை விடக் குறைவானது. யுரானஸின் குறுக்களவு 30,900 மைல்கள். இதற்கு ஐந்து சந்திரன்கள் உண்டு.
***
யுக்கா அல்லிமலர்!
வேல் போன்ற இலைகளை யுடைய 'யுக்கா அல்லி மலர்' தென் மற்றும் தென்மேற்கு ஐக்கிய நாடுகளிலும் மெக்ஸிகோவிலும் வளர்கின்றன. யுக்கா பூச்சியினால் மகரந்தச்சேர்க்கை செய்யப்படுகிறது யுக்கா பூ.
யுக்கா பூவும், யுக்கா பூச்சியும் ஒன்று இல்லாவிட்டால் இன்னொன்று இல்லை என்னும் அளவுக்கு ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது.
பெண் யுக்கா பூச்சி, மணிபோன்ற உருவ முள்ள யுக்கா பூவிலிருந்து மகரந்தப் பொடியை, வாய்பாகங்களில் சேகரித்து ஒரு பெரிய பந்தாக உருட்டி, அருகேயுள்ள வேறொரு யுக்கா பூவிற்கு எடுத்துச் செல்கிறது.
பிறகு மகரந்தப் பொடி உருண்டையை பூவினுடைய சூல் தண்டுக்குள்ளே தள்ளுகிறது யுக்கா. இந்த முறையினால் மட்டும்தான் பூ செழுமையடைய முடிகிறது. இதன்பிறகு பூவின் சூல்தண்டின் அருகே ஒன்று, இரண்டு முட்டைகளை இடுகிறது பூச்சி.
குஞ்சு பொறித்ததும் அவைகள், யுக்கா பூவின் பாதி வளர்ந்த விதைகளை உண் கின்றன. இவைகள் தின்றது போக, போது மான விதைகள் யுக்காவில் வருங்கால அபிவிருத்திக்காக மீதம் இருக்கும்.
இவை வளர்ந்ததும் வழக்கம் போல் மகரந்தப் பொடியை எடுப்பதும், முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதும் தொடர்கிறது.
***