PUBLISHED ON : அக் 01, 2022

விமான டயர்களில், நைட்ரஜன் வாயு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. அது பற்றி பார்ப்போம்...
விமான பயணத்தில் அபாய கட்டம், 'டேக் ஆப்' மற்றும் 'லேண்டிங்' ஆகும். அந்த நேரங்களில் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம். இதை தவிர்க்க விமான டயர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் உராய்வதால், டயர்களில் அதிக வெப்பம் உருவாகும். விமானத்தில் எரிபொருள் அதிகம் இருக்கும் என்பதால் எடையும் அதிகமாக இருக்கும். டயர்களில் வெப்பம் உருவாவதால் தீப்பற்ற வாய்ப்பு அதிகம். நைட்ரஜன் வாயுவை நிரப்பினால், டயர்களில் வெப்பம் அதிகரிப்பு தடுக்கப்படும். விமானம் உயரத்தில் பறக்கும் போது, குளிர் அளவு மைனஸ், 50 டிகிரி செல்சியஸ் அளவு வரை இருக்கும். அப்போது சாதாரண காற்று நிரப்பிய டயர் உறைந்து போக வாய்ப்பு உள்ளது.
ஆனால், நைட்ரஜன் வாயு, மைனஸ் 170 டிகிரியில் தான், திரவ நிலைக்கு மாறும். இதனாலும், விமான டயரில் நைட்ரஜன் வாயுக்கு முன்னுரிமை தரப்படுகிறது.நைட்ரஜன் வாயு மந்தமாக இருக்கும். அது மற்ற பொருளுடன் சேர்ந்து, எளிதில் வினையாற்றாது. ரப்பருடன் சாதாரண காற்று வினை புரியும்.விமான டயரில் சாதாரண காற்றை நிரப்பினால், காற்றழுத்தம் நீடித்திருக்காது. நைட்ரஜன் வாயுவை நிரப்பினால் நிலைத்திருக்கும். இதனால் விமான பராமரிப்பு பணியும், செலவும் குறையும். எனவே தான் விமான டயரில், நைட்ரஜன் வாயு நிரப்பப்படுகிறது.
- எம்.அசோக்ராஜா
