PUBLISHED ON : ஜூன் 29, 2018

சென்றவாரம்: அரண்மனை வளாக இடுகாட்டில் இருந்த சப்போட்டாமரத்தில் மர்மம் இருப்பதாக, சிறுவர்கள் மூவரும் சந்தேகப்பட்டனர். அதை ஆராய முடிவு செய்தனர். இனி -
''தம்பீங்களா... இங்க என்ன செய்யறீங்க; நான் சொன்ன இடத்துக்கு போங்க... இந்த பூக்களை போட்டு, பெரிய அய்யா கிட்ட ஆசி வாங்குங்க,'' என்று அமைதியாக கூறி, தொங்க விட்ட வேட்டியுடன் தடுமாறி தடுமாறி வந்தான் காளியப்பன்.
''சரி... ஆனா, நீங்களும் வாங்க... சேர்ந்தே போவோம்,'' என்றான் ராமு.
''ராமு, ஆனாலும் உனக்கு திமிர் அதிகம்டா... இது என் ஏரியா; நான் சொன்னா கேக்கணும்...'' காளியப்பன் குரலில் அதிகாரம் தெரிந்தது.
'அந்த குரல், ஏற்கனவே அப்பா பேசிய அதே குரல்.... அப்படியென்றால், பேசியது காளியப்பன் அல்ல; பெரிய ராஜாவின் ஆவி தான். இதை உறுதிப் படுத்த வேண்டும்...' என நினைத்துக் கொண்டிருந்தே போதே, ''டேய் ராமு... அவர் பேசறப்போ வேட்டியை மடிச்சிருக்கார் பாரு,'' என்றான் ஆசாத்.
''ஆமாம்! அதான் பேச்சிலும் ஒரு மாற்றம், கம்பீரம் தெரியுது,'' என்று ஆமோதித்தான் டேவிட்.
''ஏய்... நாம இப்ப முக்கியமா ஒண்ணு கவனிக்கணும்; வேட்டிய மடிச்சி கட்டி பேசறப்போ, அவர் கால்கள கவனிங்கடா,'' என்றான் ஆசாத்.
''ராமு... உன் அப்பா கவலைப்படுவாரு; நேரம் ஆகிட்டு இருக்கு. இந்த தம்பிங்க நம்ம அரண்மனைக்கு புதுசு... அவங்க நல்லபடியா வீடு போய் சேரணும் இல்லயா... பெரிய ராஜா ஒரு மாதிரி. அதான் உடனே நான் முன்பு காட்டிய இடத்துக்கு, பூக்கள வாங்கிட்டு ஓடுங்க. எனக்கு கால்ல முள் குத்திடுச்சு... அதனால வேகமா நடக்க முடியல,'' என்றான் காளியப்பன்.
''போறதுக்கு முன்னால ஒரு சந்தேகம் கேட்கணும். அதனால நீங்க வர்ற வரைக்கும், நாங்க போக மாட்டோம்,'' என்றான் ராமு.
காளியப்பன் வேட்டியை மடித்துக் கொண்டான்; முகம் உக்கிரமானது.
''ஏண்டா ராமுப்பயலே, முளைச்சு மூணு இலை விடல, அதுக்குள்ள உனக்கு அவ்வளவு திமிரா... என் பேச்சுக்கு, எதிர் பேச்சா பேசற... ஓடுங்கடா... பெரிய ராஜாவை புதச்ச இடத்துக்கு ஓடுங்க... இல்ல உங்கள இங்கேயே தீத்து கட்டிடுவேன்,'' என்றபடி வேகமாக ஓடி வந்தான்.
குரலின் கம்பீரத்தையும், கால்களையும் மூவரும் கவனித்தனர். கால்கள் இல்லை; வெறும் வேட்டி மட்டுமே மடிந்து காணப் பட்டது. காளியப்பனிடம் இறங்கியிருப்பது பெரிய ராஜாவின் ஆவி தான் என தெரிந்தது. அவன் ஓடி வருவது கண்டு, மூவரும், காற்றாக பறந்தனர்.
ஒரு கட்டத்துக்கு மேல், காளியப்பனால் ஓட முடியவில்லை; அமர்ந்து விட்டான்.
''டேய் டேவிட்! நான் பொறுக்கிய சப்போட்டா பழங்கள் விழுந்த இடத்தில்தான்டா அமர்ந்திருக்காரு... அப்படின்னா, அந்த இடம் தான் பெரிய ராஜாவை புதைச்ச இடமா இருக்கும். இதில், காளியப்பன் ஏதோ சூழ்ச்சி செய்றார்,'' என்றதும் ஆசாத்தும், டேவிட்டும் காளியப்பன் அமர்ந்திருந்த இடத்தை கவனித்தனர்.
''ஆமா, நீ சொல்றது சரிதான். அதோ பாருடா... காளியப்பன் அடிச்சிக்கிட்டு அழுவதை... மண்ணை தொட்டு தொட்டு ஏதோ சொல்லி அழுறார்,'' என்று ஆசாத் சொல்ல, இருவரும் பார்த்தனர்.
''சரி, முதல்ல இங்கிருந்து தப்பிடுவோம். என்னை பொறுத்தவரை, உண்மய கண்டுபிடிக்க ஒரே வழி, காளியப்பன் இல்லாம, உன் அப்பாவை மட்டும் தனியா இங்கு அழைச்சி வந்து, பெரிய ராஜா உடலைப் பொதச்ச இடத்தை அறியணும். அடுத்து, அந்த இடத்த ரகசியமா தோண்டி பாக்கணும்,'' என்றான் டேவிட்.
இப்போது, மூவரும் நந்தவனம் நோக்கி ஓடினர்.
அங்கு ஓரத்தில், ஒரு குடிசை காணப்பட்டது. அது காளியப்பன் வீடாகத் தான் இருக்கும் என்று உறுதிப்படுத்தியபடி, மூவரும் சென்றனர்.
நுாறு வயது குடுகுடு தாத்தா ஒருவர், கைத்தடியை பிடித்து கொண்டே வாசலுக்கு வந்து, ''காளியப்பன் இல்ல... என்ன வேணும்; காளியப்பன் இல்ல... என்ன வேணும்,'' என்று கிளிப்பிள்ளை போல் சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தார்.
''அய்யா நல்லா இருக்கீங்களா...'' ராமு கேட்டான்.
''தம்பி, நீ... நீ... எப்பவோ பார்த்த முகம் போல இருக்கே; ஓ... நம்ம கோவிந்த நாத சிம்ம ராஜா மகனா... இவங்க உங்க நண்பர்களா... நான் கேட்டது சரியா இளவரசரே,'' என்று பெரியவர், பாசம் பொங்க பேசியது கேட்டு, ராமு அசந்து விட்டான்.
''பெரியவரே... இங்க, ராஜான்னா, அது, இறந்து போன பெரிய ராஜா தான்... என் அப்பா ராஜாவும் இல்ல; நான் இளவரசனும் இல்ல,'' என்று சிரித்தபடியே கூறினான் ராமு.
''அது எப்படி தம்பீ, நீங்க சொல்ல முடியும்... உண்மை ஒரு நாளும் பொய்க்காது; இந்த மாரியப்பன் சொன்னதுல, ஆயிரம் அர்த்தம் இருக்கும்,'' அவர் குரலில் ஒரு அழுத்தம் தெரிந்தது.
''ஐயா... எப்படி சொல்றீங்க...'' என்று கேட்டான் டேவிட்.
''சரி... அதெல்லாம் பிறகு பாப்போம். நீங்க மொதல்ல தண்ணி குடிங்க... அடியே பொன்னம்மா... வந்திருக்கிறது யாருன்னு பாரு... நம்ம இளவரசர் தம்பி தான் வந்திருக்காரு. அவரோட நண்பர்களும் வந்திருக்காங்க... வந்தவங்களுக்கு, தண்ணி குடு,'' என்றபடி கைகளை உரக்க தட்டி சைகை செய்தார் மாரியப்பன்.
''ஐயா, நான் இந்த அரண்மனையில் பிறந்து வளர்ந்திருந்தாலும், இதுவரைக்கும் இங்கு வந்ததே கிடையாது; உங்கள பார்த்ததும் இல்ல... இப்போ காளியப்பனின் அப்பாவான உங்கள பாத்தது சந்தோஷமா இருக்கு,'' என்றான் ராமு.
''தம்பி நான் மகா பாவி; என் குடும்பமே பாவப்பட்ட குடும்பமா போயிடுச்சு. நாங்க, பெரிய ராஜா அப்பா, மூத்த ராஜா ஐயாவோட கைக்கூலிங்க. சொன்னதை கேட்டு செய்த பாவத்துக்கு, இப்ப என் மவன் காளியப்பனுக்கு குழந்தை பாக்கியம் இல்லாம, பரம்பரை முடியற மாதிரி போயிடுச்சு. தினை விதைத்தவன் தினை அறுப்பான்; நாங்க விதச்சது வினையாச்சே... அதான் வினையை அறுத்துக்கிட்டு இருக்கோம்,'' என்றவர் தேம்பி தேம்பி அழுதார்.
''பெரியவரே அழாதீங்க... ஏதோ சமய சந்தர்ப்பம் தான் மனுஷன கெட்டவனாக்குது... அதுல, நீங்களும் சிக்கிட்டீங்க. கவலைபடாதீங்க... பெரிய பாவின்னு சொல்ல, கொலையா செஞ்சீங்க,'' அவரை தேற்றினான் ராமு.
''உங்கப்பா கோவிந்தநாத சிம்மர் ராஜா தயவால, உடம்புக்கு ஒண்ணுமில்ல... அவரே எனக்கு மருந்து செலவுக்கு மாச மாசம் பணம் கொடுத்துடுவாரு. ஆனா இந்த பாழாப்போன மனம் இருக்கே... அதுதான் கேட்க மாட்டேங்குது... செஞ்ச வினைக்கு அழுதுகிட்டே இருக்கு தம்பி,'' என்று அழுதார் பெரியவர்.
அப்போது மருமகள் தண்ணீர் எடுத்து வந்து, கொடுத்து சென்றாள்.
''தம்பிங்களா... மொதல்ல தண்ணியை குடிங்க! என் மருமகள் ஒரு அசடு; அவளே கிளாஸ்ல ஊத்தி கொடுத்திருக்கலாம் இல்லையா... அவ பாட்டுக்கு வெச்சுட்டு போறா... என்னாலும் அவள் கிட்ட பேச முடியாது. காரணம், அவளுக்கு காது கேட்காது; எனக்கும் சத்தமாக பேச தெம்பு இல்ல... செய்த பாவத்துக்கு கிடைக்கிற சம்பளத்த பார்த்தீங்களா...
''சின்ன எசமான் நல்லாத்தான் பேசறாரு... இந்த பாவிக்கு பல வாட்டி உடம்புக்கு வந்து, போயிடுவேன்னுதான் என் மவன் நினைச்சான். ஆனா அப்பல்லாம் என் உயிர் போகாததுக்கு இப்பத்தான் காரணம் புரியுது. ஆமா தம்பி... என் மனசுல உள்ளத யார் கிட்டயாச்சும் கொட்டனும்னு துடிச்சிகிட்டு இருந்தேன். எனக்குன்னு யாரும் இல்லீங்களே...
''உங்க அப்பா கிட்டயும் பேச மாட்டேன்; நல்ல வேளை... நீங்க வந்திருக்கீங்க. அதுவும் இந்த அரண்மனைக்கு உரிமை கொண்ட இளவரசரா... அதுவே போதும்... இப்ப கொஞ்சம் மனசு சாந்தமாயிட்டு வருது... எல்லா உண்மைகளையும் புட்டுப்புட்டு வெச்சாதான் ஆன்மா சாந்தி அடையும்!'' என்றவர் கண்ணீரை துடைத்து கொண்டே, ''எனக்கு ரேடியோவில பாட்டு கேட்கறதுன்னா ரொம்ப பிடிக்கும். நீங்களும் ஒரு பாட்டு கேளுங்க. மனச முழுசா சாந்தப்படுத்தகிட்டு உங்க கிட்ட பேசறேன்,'' என்றவர் அருகில் இருந்த பழைய ரேடியோவை திருகினார்.
'நானே வருவேன்... அங்கும் இங்கும்... நானே வருவேன்... வருவேன்...' பாடல் ஒலித்தது.
''அய்யோ தம்பிங்களா... இது ஆவி பாடற பழைய கால பாட்டாச்சே... இப்ப போயா இதை போடுவான்,'' என்று மாரிமுத்து கூறிய போதே, 'நானே வருவேன்... வருவேன்...' என்ற பாட்டை முணுமுணுத்தபடியே வந்தான் காளியப்பன்.
- தொடரும்...
