
சீனப் பெருஞ்சுவர் (கி.மு.214 - 204 ஆண்டுகளில் கட்டப்பட்டது) சுமார், 2,250 கிலோமீட்டர் நீளத்திற்கும் அதிகமானது. 9 மீட்டர் உயரம் கொண்டது. தேர்கள் செல்லும் அளவிற்கு அகலம் கொண்டது. இந்தச் சுவரைக் கட்ட ஆயிரக்கணக்கான விவசாயிகள் வேலை பார்த்தனர். எதிர்பார்த்த அளவிற்கு வேலை செய்யாத ஆட்கள் கொல்லப்பட்டனர்.
சாங் ஜியாங், ஜி ஜியாங், ஹுவாங் ஹெ ஆகிய மூன்று பெரிய நதிகளின் கரையோரங்களில்தான் சீனாவின் தொடக்கக்கால நாகரிகங்கள் வளர்ந்தன. தங்களின் பயிர்களுக்கு உழவர்கள் நீரைப் பயன்படுத்தினர். ஆனால், ஆற்று வெள்ளத்தினால் அடிக்கடி பாதிக்கப்பட்டனர்.
சுமார் கி.மு.2205 முதல், சீனாவை அரசப் பரம்பரையினர் (ஆளும் குடும்பங்கள்) ஆண்டு வந்தனர். வல்லுநர்கள் தக்க ஆதாரங்களைக் கொண்டு முதலாவது அரசப்பரம்பரையாக 'ஷாங்' வம்சம் இருந்தது என்கின்றனர். இது சுமார் கி.மு.1766ல் தொடங்கியது. 'ஷாங்' வம்சம் சுமார் 400 ஆண்டுகளுக்கும் மேலாக சீனாவை அரசாண்டது. பிறகு அவர்கள் 'சௌ' வம்சத்தால் தோற்கடிக்கப்பட்டனர்.
கி.மு.221 வரை சௌ பரம்பரை ஆட்சி நீடித்தது. இந்தக் காலகட்டத்தில் சௌ நிலப்பரப்பை ஆக்கிரமித்த எதிரி அரசர்களுடன் பல போர்கள் நடைபெற்றன. ஆனால், இந்தக் காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. சீனப்பட்டு, விலைமதிப்புமிக்க அணிகலனுக்கான கற்கள், அழகான வேலைப்பாடு கொண்ட பீங்கான் போன்றவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன.
கி.மு.221ல் சீனாவின் அரச ராஜ்யங்கள், தங்களுக்குள் 250 ஆண்டுகளுக்கும் மேலாகப் போரிட்டுக் கொண்டன. மெதுவாக வடமேற்கில் இருந்து வந்த போர்ப்படை போன்ற அரச பரம்பரை சின் நாட்டை ஒரு ஆட்சியின் கீழ் கொண்டு வந்து சாம்ராஜ்யத்தை நிறுவினர். அதனால்தான், 'சீனா' என்ற பெயர் ஏற்பட்டது.
ஒருங்கிணைந்த சீனாவின் முதல் பேரரசர் 'ஷ ஹிவாங்தி.' இவர் அரசாங்கம் மற்றும் தரப்படுத்தப்பட்ட பணம், எடைகள் மற்றும் அளவுகள் ஆகியவற்றை மறுசீரமைத்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளையும் இணைக்கும் விதமாக சாலை மற்றும் கால்வாய் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. வடக்கு எல்லையில் எதிரியான ஹசுங் நு (ஹன்ஸ்) அரசரை தடுப்பதற்காக சீனாவின் பெருஞ்சுவர் கட்டப்பட்டது.
ஷ ஹிவாங்தி அறிவாளியாக இருந்தாலும் இரக்கமற்ற படைத்தளபதியாகவும், கொடிய அரசியல்வாதியாகவும் இருந்தார். அவரது சொந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளாமல் வேறு கருத்துக்களை கூறும் அறிஞர்களை கொன்றார். ஷ ஹிவாங்தியின் மரணத்துக்குப் பிறகு கி.மு.206ல் சின் அரச வம்சம் கவிழ்க்கப்பட்டது.
தொடக்கக்கால செப்புக், 'காசுகள்' கருவிகள் போன்ற வடிவத்தில் இருந்தன. ஒவ்வொரு மாநிலத்திலும் அவை வேறு வேறாக இருந்தன.
ஷ ஹிவாங்தி காலத்தில், அனைத்துக் காசுகளும் வட்ட வடிவில் ஒரு துளையுடன் தயாரிக்கப்பட்டன. அவற்றை ஒன்று சேர்த்து கட்டக்கூடிய வகையில் இருந்தன.
ஷ ஹிவாங்தியின் புதை கல்லறை யில் இருந்து ஒரு டெரக்கோட்டோ வீரரின் உருவம் கிடைத்தது. இம்மன்னர் கி.மு.210ல் மறு உலக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களுடனும் புதைக்கப்பட்டனர். மனித உருவ அளவுக்கு 10 ஆயிரம் வலிமையான களிமண் வீரர்கள் கொண்ட ஒரு பெரிய படையும் இதில் அடங்கும்.
போர்கள் அடிக்கடி நடைபெற்றுக் கொண்டு இருந்த கி.மு.551ல் தத்துவவாதி கன்பூஷியஸ் பிறந்தார். அமைதியாக வாழ்வது எப்படி என்று மக்களுக்குப் போதிப்பதிலேயே அவர் தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவரது போதனைகளே 20ம் நுாற்றாண்டின் தொடக்கம் வரை சீன குடிமைப் பணிகளுக்கான (சிவில் சர்வீஸ்) அடிப்படைக் கூறாக அமைந்திருந்தது.

