தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/ஒருத்தருக்குத்தான்!

ஒருத்தருக்குத்தான்!

ஒருத்தருக்குத்தான்!


PUBLISHED ON : ஆக 23, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 23, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெய்யூர் என்னும் ஊரில் தினேஷ் என்பவன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு பெற்றோர் கிடையாது. அதனால் அவன் வேலை தேடி பக்கத்துக்கு ஊருக்கு போனான். போகும் வழியில் வயதான பாட்டியை கண்டான். அந்தப் பாட்டி, அரிசிப் பெட்டியை தன் தலையில் வைத்து சுமந்தபடி தள்ளாடிய படியே வந்து கொண்டிருந்தாள்.

அந்தப்பாட்டியைப் பார்க்கிற வேளையில் தினேஷுக்கு இரக்கம் ஏற்பட்டது. வேகமாக பாட்டியின் அருகே சென்றான்.

''பாட்டி! பாட்டி! நில்லுங்கள். உங்களைப் பார்த்தால் மிகவும் சிரமத்துடன் இந்த அரிசிப் பெட்டியை சுமந்து செல்வது போன்று தெரிகிறது. நீங்கள் இந்த அரிசிப் பெட்டியை சுமந்து செல்ல வேண்டாம். என்னிடம் கொடுங்கள் நான் சுமந்து வருகிறேன்,'' என்று பாட்டியிடம் இருந்து பெட்டியை வாங்கிக் கொண்டான்.

பெட்டியைத் தன் தலையில் வைத்து சுமந்தபடி பாட்டியோடு நடந்து வந்தான். தலையில் இருந்த பாரம் நீங்கியதும் பாட்டி சற்று சுறுசுறுப்புடன் நடக்கத் தொடங்கினாள்.

''பாட்டி உங்கள் வீடு எங்கே இருக்கிறது?'' என்று கேட்டான் தினேஷ்.

''இன்னும் சிறிது தூரம் நடந்து சென்றால் என் வீட்டை அடைந்துவிடலாம்,'' என்றாள் பாட்டி.

சிறிது நேரத்திற்குப் பின்னர் பாட்டியின் வீடு வந்தது. தினேஷ் வீட்டின் உள்ளே சென்று அரிசிப் பெட்டியை இறக்கி வைத்தான்.

''பேராண்டி நீ செய்த உதவியை நான் என்றுமே மறக்க மாட்டேன். நீ சற்று நேரம் பொறு... நாம் இருவருமே சாப்பிடலாம். இதோ சீக்கிரமாகச் சமையலை முடிக்கிறேன்,'' என்றாள் பாட்டி.

''பாட்டி, நானும் சமையலுக்கு வேண்டிய உதவிகளைச் செய்கிறேன்,'' என்று உற்சாகத்துடன் கூறிய தினேஷ், சமையலில் பாட்டிக்குச் சிறு சிறு உதவிகளைச் செய்து கொடுத்தான்.

''பேராண்டி, உனக்குப் பிடித்தமான கூட்டு எது? அதனைச் சொன்னால் நான் சமைத்துத் தருவேனே,'' என்று கூறினாள் பாட்டி.

''பாட்டி, நான் அசைவ உணவை சாப்பிட மாட்டேன். சைவ உணவைத் தான் சாப்பிடுவேன். உருளைக்கிழங்குப் பொரியலும், கத்தரிக்காய் சாம்பாரும் எனக்கு மிகவும் பிடிக்கும்,'' என்றான் தினேஷ்.

''சரி, பேராண்டி! உன்னுடைய விருப்பப்படியே நான் உனக்கு சமைத்துத் தருகிறேன்,'' என்றாள் பாட்டி.

பாட்டியின் அதிவேக சமையலைப் பார்த்து தினேஷ் ஆச்சரியமடைந்தான்.

சிறிது நேரத்தில் பாட்டி தினேஷுக்கு உணவு பரிமாறினாள். பாட்டியின் சமையலை நன்கு ரசித்து, ருசித்து சாப்பிட்டான்.

உணவு அருந்திவிட்டுச் சற்று நேரம் இளைப்பாறிய பின்னர் பாட்டியிடம் இருந்து விடைபெற்றான் தினேஷ்.

''பேராண்டி, உன்னைச் சும்மாவே அனுப்ப என் மனம் இடம் கொடுக்கவில்லை. உனக்கு ஏதாவது கொடுத்தாக வேண்டும். சற்று நேரம் பொறுமையுடன் நில். நான் உனக்குப் பரிசு பொருளைக் கொண்டு வருகிறேன்,'' என்று தன் வீட்டின் உள் அறைக்கு சென்றாள் பாட்டி. பின்னர் அறையில் இருந்து ஒரு முத்துமாலையை எடுத்து வந்தாள்.

''பேராண்டி, இந்த முத்துமாலையை நீ கழுத்தில் அணிந்து கொள். உன்னைப் பார்க்கிறபோது ராஜா போல் இருப்பாய்,'' என்று அந்த முத்து மாலையை தினேஷின் கழுத்தில் போட்டாள் பாட்டி.

பின்னர் பாட்டியிடம் இருந்து விடைபெற்ற படி தன் பயணத்தைத் தொடர்ந்தான் தினேஷ்.

அவன் காட்டுப் பாதையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தான். அப்போது மாலை நேரமாகி விட்டது. சற்றுத் தொலைவில் ஒரு கிராமம் தெரிந்தால் அந்தக் கிராமத்திற்குச் சென்று விடலாம் என்று முடிவு செய்தபடி வேகமாக நடக்கத் தொடங்கினான்.

அப்போது திடீரென அவன் முன்னே நான்கு திருடர்கள் வந்தனர். அந்தத் திருடர்கள் அவன் கழுத்தில் அணிந்திருந்த முத்து மாலையைப் பார்த்து விட்டனர்.

''ஏய் பொடியா! மரியாதையாக உன் கழுத்தில் கிடக்கும் முத்து மாலையைக் கொடுத்துவிடு. இல்லையென்றால் உன்னைக் கொன்றுவிடுவோம்,'' என்றான் திருடன் ஒருவன்.

தினேஷுக்கு அந்தத் திருடர்களைப் பார்த்துச் சற்று பயம் ஏற்பட்டது. இருந்தாலும் தன்னுடைய பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் அவர்களை நோக்கினான்.

''திருடர்களே! என் கழுத்தில் கிடப்பதோ கேட்டதைக் கொடுக்கிற மந்திர மாலை. அது ஒருவருக்குத்தான் பயன்படும். ஆனால், நீங்களோ மொத்தம் நான்கு பேர் இருக்கிறீர் கள்! இது எப்படி சாத்தியமாகும்,'' என்று அனுபவம் நிறைந்தவன் போல் கூறினான்.

அதனைக் கேட்டதும், அந்தத் திருடர்கள் நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறிப் பார்த்துக் கொண்டனர். எப்படியாவது அந்த மந்திர மாலையை கைப்பற்ற வேண்டும் என்று நால்வருமே முடிவு செய்தனர்.

உடனே அவர்கள் நால்வருக்குள் மாறி, மாறி ஒருவரையொருவர் அடித்துக் கொண்டனர். முடிவில் நால்வருமே தரையில் சாய்ந்தனர். அதனைக் கண்ட தினேஷ் மகிழ்ச்சி அடைந்தான். ஒரு வழியாகத் திருடர்களைச் சரி செய்து விட்டோம். இன்னும் வெகு சீக்கிரத்தில் இந்தக் காட்டை கடந்து விட வேண்டுமென்று முடிவு செய்தான்.

உடனே வேகமாக நடக்கத் தொடங்கினான். அப்போது அவன் எதிரே பேய் ஒன்று வந்து நின்றது.

அந்தப் பேயைக் கண்ட தினேஷ் திடுக்கிட்டான். இருந்தாலும் தன் பயத்தைக் காட்டிக் கொள்ளாமல் பேயை நேருக்கு நேராகப் பார்த்தான்.

உடனே பேயானது, 'சிறுவனே, என்னை நீ நேருக்கு நேராகப் பார்க்கிறாயா? நான் இந்தக் காட்டில் இருக்கும் முட்புதரில் பக்கத்து கிராம ஜமீன்தாரைப் பிடித்து மறைத்து வைத்திருக்கிறேன். இப்போது அவரோடு உன்னையும் சேர்த்து மறைத்து வைக்கப்போகிறேன்,'' என்றது பேய்.

''பேயே சற்று பொறு... நான் வரும் வழியில் மந்திர சக்தி பெற்ற முனிவர் ஒருவர் எனக்கு திருநீரு கொடுத்தார். அதனை எடுத்து உன் மீது தூவி விடுகிறேன். நீ இருந்த இடம் தெரியாமல் போய் விடுவாய்,'' என்றான் தினேஷ்.

அதனைக் கேட்டதும் பேய் நடுங்கியது. ஒரே ஓட்டமாக ஓட்டமெடுத்தது. பேய் ஓடுவதைக் கண்டு தினேஷ் மகிழ்ச்சியடைந்தான்.

பின்னர் காட்டில் இருந்த முட்புதருக்குள் சென்றான் அங்கே பேயால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஜமீன்தாரை காப்பாற்றினான்.

ஜமீன்தாரிடம் நடந்ததைத் தெரியப்படுத்தினான். உடனே ஜமீன்தார் தினேஷின் அறிவைப் பாராட்டினார்.

''பேயிடம் இருந்து என்னைக் காப்பாற்றி விட்டாய். இனிமேல் நீ எங்குமே செல்ல வேண்டாம். என்னுடைய சொத்தின் வாரிசாக உன்னை நான் நியமிக்கிறேன்,'' என்று அவனை அழைத்து சென்றார்.

தினேஷும் ஜமீன்தாரின் வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்தான்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us