PUBLISHED ON : ஜூலை 01, 2016

ஒரு காட்டில் நரியும், பூனையும் நெருங்கிய நண்பர்களாக இருந்தன. நரி எப்போதுமே தன்னை ஒரு மேதாவியாகவே கருதும். அத்தனை மிருகங்களையும் விட தனக்கே அறிவு அதிகம் என்பதில் அதற்கு இறுமாப்பு உண்டு.
ஒருநாள்-
நரி, பூனையிடம், திடீரென்று, ''பகைவர்கள் உன்னைத் தாக்க வந்தால் நீ என்ன செய்வாய்?'' என்று கேட்டது.
''அந்த நேரத்தில் ஏதாவது ஒரு தந்திரத்தைப் பயன்படுத்தி அவற்றிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்வேன்,'' என்றது பூனை.
''ஒரேயொரு தந்திரம்தான் உனக்கு தெரியுமா? எனக்கு நூற்றுக்கும் மேற்பட்டத் தந்திரங்கள் தெரியும். ஒன்றில்லை என்றால் இன்னொன்றைப் பயன்படுத்தி எதிரிகளிடம் இருந்து தப்பித்துக் கொள்வேன். நீயும் இவ்வாறு நிறைய தந்திரங்களைத் தெரிந்து வைத்துக் கொள்,'' என்று அதற்கு யோசனை சொன்னது நரி.
அப்போது அங்கு பெரிய இரைச்சல் கேட்டது. மிகப் பெரிய கத்தல் ஒலியும் எழுந்தது.
ஏதோ ஆபத்து நெருங்குவதை நரியும், பூனையும் உணர்ந்தன. சத்தம் வரும் திசையை கூர்ந்து கவனித்தன.
அப்போது சில ஓநாய்கள் ஓட்டமாக விரைந்து வருவது தெரிந்தது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த ஓநாய்க் கூட்டம் இங்கே வந்து இவர்களைக் கொன்று விடும் என்பதும் சட்டென்று புரிந்தது.
ஒரேயொரு தந்திரம் மட்டுமே தெரிந்த பூனை, கடகடவென்று பக்கத்தில் இருந்த மரத்தின் மீதேறி, அதன் உச்சாணிக் கிளையில் சென்று பாதுகாப்பாக அமர்ந்து கொண்டது.
ஆனால், நரிக்குத்தான் பல தந்திரங்கள் தெரியுமே! அவற்றில் எந்தத் தந்திரத்தை இப்போது பயன்படுத்தலாம் என்று அது யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஓநாய்க் கூட்டம் நரியைச் சூழ்ந்து கடித்துக் கொன்றன.

