PUBLISHED ON : ஜூலை 04, 2020

பிரபல தமிழ் எழுத்தாளர் கல்கி. இவரது இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தி. நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே புத்தமங்கலம் கிராமத்தில், 1899ல் பிறந்தார்.
தொடக்க கல்வியை, மயிலாடுதுறை அருகே மணல்மேட்டில் கற்றார்; பின், திருச்சி, இந்து செகண்டரி பள்ளியில் சேர்ந்தார். காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்க அழைப்பை ஏற்று, பள்ளியிலிருந்து விலகினார். காந்தியடிகள், 1921ல் திருச்சி வந்த போது சந்தித்து பேசினார்.
நாமக்கல் கவிஞர் தலைமையில் கரூரில், 1922ல் நடந்த சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார். சிறையிலிருந்த போது, 'விமலா' என்ற நாவலை, கல்கி என்ற புனை பெயரில் எழுதினார்.
இது தவிர, அகத்தியர், தமிழ்தேனீ, கர்நாடகம், லாங்கடலன், குகன் என பல புனைப்பெயரிகளிலும் எழுதியுள்ளார். நகைச்சுவை, அரசியல், இலக்கியம், இசை என பல துறைகளிலும் கட்டுரைகள் எழுதி வந்தார்.
பின், கல்கி என்ற பெயரில் பருவ இதழை ஆரம்பித்தார்; அப்போது, 'என் முதல் நோக்கம் தேச நன்மையே...' என்று முழங்கினார்.
சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு போன்ற வரலாற்று நாவல்கள், அவரை புகழின் உச்சியில் ஏற்றின.
அவரது சிறுகதைகள், நாவல்கள், பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளன. எழுத்தால் புகழ்பெற்ற கல்கி, 1954ல் மரணம் அடைந்தார்.
