PUBLISHED ON : ஆக 01, 2014

அழகான மீன்கள் துள்ளித் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தன அந்தக் குளத்தில். நாரைகளும், கொக்குகளும் அவைகளைப் பிடித்துத் தின்ன பலமுறை முயற்சி செய்தன. ஆனால், ஒரு மீன் கூட அவைகளின் வாய்க்குள் போகவில்லை.
குளக்கரையில் நின்றிருந்த கொக்கு நெடுநேரம்வரை மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தது. எத்தனையோ நாட்கள் கொக்குக் கண்களுக்குக் குளத்தில் மீன் இருப்பது தெரிந்தால் போதும், உடனே அவை கொக்கின் வாய்க்குள் வந்துவிடும். இன்று ஏன் இந்த நிலை. கண்களுக்கு முன்னால் துள்ளிக் குதிக்கும் மீன்கள் தன் நீண்ட வாய்க்கு அகப்படவில்லையே... என்று ஏங்கிக் கொண்டிருந்தது.
ˆகடிக்கு குளத்திலுள்ள மீன்கள் மட்டுமல்ல; கரையிலிருந்து புழு, பூச்சிகள் எவை கிடைத்தாலும் தின்று தீர்த்து விடும். அதனால் எல்லாப் பறவைகளும் உணவின்றி வாடியது. ஒவ்வொரு நாளும் மற்ற பறவை கள் தின்ன முயற்சிக்கும் ஆகாரங்களைக் கொக்கு தன் நீண்ட வாயால் கொத்திப் பிடித்துத் தின்றுவிடும். அதனால் அப்பறவை கள் ஏமாந்து சென்றன.
மைனா, காடை, கவுதாரி, காட்டுப்புறா ஆகிய அனைத்தும் உண வின்றி வாடின. கொக்கு தினமும் தன் உணவுக்குப்போக மிஞ்சியதையும் பிடித்து நாசம் செய்தது. அதற்கு எவ்வளவு கிடைத்தாலும் போதும் என்ற மனத்திருப்தி அடைந்ததில்லை. அதனால் மற்ற பறவைகள் அக்குளத்தை விட்டு, வேறு இடத்திற்குச் செல்வதென்று முடிவு செய்தன.
மீன்கொத்திக் குருவி மட்டும் இதற்கு உடன்படவில்லை.
''கொக்குக்காகப் பயந்து நாம் ஏன் போக வேண்டும். கொக்குவின் பேராசைக்கு நாம் எல்லாரும் சேர்ந்து ஒரு முடிவு கட்ட வேண்டும்!'' என்று கூறியது.
மீன்கொத்திக் குருவியின் பேச்சை ஆமோதிப்பதுபோல், காட்டுப்புறா, 'ஆமாம்' போட்டது. அதைக் கேட்ட மற்றவைகளும் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தன.
ஒருநாள் அக்குளக்கரை வழியே ஒரு மீனவன் கையில் வலையோடு சென்று கொண்டிருந்தான். அவனை மீன்கொத்திக் குருவி பார்த்தது. 'இவனிடம் போய் நம் எண்ணத்தைச் சொன்னால் வழி பிறக்காதா' என்று நினைத்தது. அவன் குளத்தைக் கடந்து சென்று கொண்டிருந்தான்.
மரத்தில் இருந்த மீன்கொத்திக் குருவி பறந்து சென்று, ''ஐயா! கொஞ்சம் நில்லுங்கள்,'' என்றது.
தன்னை யாரோ, அழைப்பதைக் கேட்டு அவன் திரும்பிப் பார்த்தான்.
''ஐயா! உங்கள் உதவி எங்களுக்குத் தேவை. மறுக்காமல் செய்ய வேண்டும்,'' என்று கெஞ்சிக் கேட்டது குருவி.
''நான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமா? என்ன உதவி சொல்லுங்கள். முடியுமானால் செய்கிறேன்,'' என்றான் மீனவன்.
''இந்தக் குளத்தில் ஏராளாமான மீன்கள் இருக்கின்றன. அவைகளை இங்கு வரும் கொக்கு பிடித்துத் தின்று விடுகிறது. எங்களுக்கு ஒன்று கூட கிடைப்பதில்லை. குளத்து மீன் போதாதென்று கரையோரத்தில் இருக்கும் புழு, பூச்சிகளைக் கூட அந்தக் கொக்கு விடுவதில்லை. அதனால் நாங்கள் உணவின்றி பட்டினியால் வாடுகிறோம்,'' என்று அவனிடம் கூறியது.
''உங்கள் பலபேர் உணவை, அது ஒன்றே சாப்பிடுகிறது என்றால் அது அநீதி. அநீதிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்,'' என்று கூறினான் மீனவன்.
இந்த வார்த்தையைக் கேட்டதும் பறவை களுக்குச் சொல்ல முடியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. 'இன்றோடு நம் பசி பட்டினி எல்லாம் ஒழிந்தது' என்று நினைத்து மகிழ்ச்சியில் துள்ளிப் பறந்தன.
மீன்கொத்திக் குருவி மட்டும் யோசனை யில் ஆழ்ந்தது. 'இவன் பேசியது சரிதான். ஆனால், அந்தக் கொக்கிடம் இருந்து நமக்கெல்லாம் விமோசனம் எப்படிக் கிடைக்கும்? அதற்கு வழி என்ன?' என்று சிந்தித்தது.
- தொடரும்.
