PUBLISHED ON : ஆக 08, 2014

மீனவன் தன் வலையை விரித்துத் தரையில் போட்டான். அதைக் கண்ட மற்ற பறவைகள் அந்த வலைக்குள் கொக்கு அகப்பட்டுக் கொள்ளும் என்று நினைத்தன. ஆனால், மீன்கொத்திக் குருவி மட்டும் அவன் செயலை உற்றுக் கவனித்தது.
கொக்கு குளத்தை நோக்கிப் பறந்து வந்தது. எல்லாப் பறவைகளும் மரத்தைவிட்டு இறங்காமல் இருப்பதைப் பார்த்தது. ஏன், இவைகள் குளக்கரைக்கு வரவில்லை என்று யோசித்தது. சுற்றும், முற்றும் பார்த்தது.
மீனவன் வலையை விரித்துப் போட்டுவிட்டு மரத்தடியில் மறைந்து கொண்டான். கொக்கு வந்து குளத்தை வட்டமிடுவதைப் பார்த்தான். ஆனால், கொக்கு குளக்கரை ஓரத்தில் வந்து இறங்காமல் வட்டமிட்டுப் பறந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.
கொக்கு கீழே இறங்காமல் பறந்தபடியே கரையோரத்தில் வலை விரிக்கப்பட்டிருப் பதைப் பார்த்து விட்டது. சிறிது நேரம் குளத்தை வட்டமிட்டு விட்டுப் பறவைகள் அமர்ந்து கொண்டிருக்கும் மரத்தில் வந்து உட்கார்ந்து கொண்டது.
சிறிது நேரம் மீனவன் காத்திருந்தான். கொக்கு கீழே இறங்க வில்லை. மரத்தில் அமர்ந்திருந்தது. என்ன செய்வதென்று புரியாமல் திகைத் தான். மறைந்திருந்த இடத்தைவிட்டு வெளியில் வந்தான். தான் விரித்த வலையைச் சுருட்டிக் கொண்டு நடந்தான்.
மீன்கொத்திக் குருவிக்கு அவன் செயல் ஏமாற்றத்தைக் கொடுத்தது. 'நாம்தான் கொக்கைப் பிடிக்க இந்த ஏற்பாடுகள் செய்தோம் என்று கொக்குவிற்குத் தெரிந்தால்...?' என்று யோசித்தது. அப்போது வேகமாகக் காற்று வீசியது. பயத்தால் மீன்கொத்திக் குருவி 'கிரீச் கிரீச்' சென்று கத்திக்கொண்டு பறந்தது. அதன் அலறல் குரலைக் கேட்ட மற்ற பறவைகளும் சத்தமிட்டுக் கொண்டு பறந்தன.
கொக்கு அந்த மீனவன் சென்றதும் குளத்தை வட்டமிட்டுவிட்டுப் பறந்து சென்றது.
மறுநாள் காலையில் குளத்தில் ஒரு மீன் துள்ளித் துள்ளிப் பாய்ந்து கொண்டிருந்தது. பசியுடன் வந்த கொக்கு பாய்ந்து அந்த மீனைக் கொத்தி விழுங்கியது.
எல்லாப் பறவைகளும் மீனவன் செயலை நம்பி வருந்திக் கொண்டிருந்தன. இந்தக் கொக்கிடம் இருந்து நம்மைக் காப்பாற்றுபவர்கள் யார் என்று ஏக்கத்தோடு வானைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தன.
மீனை விழுங்கிய கொக்கு பறக்க முடியாமல் தண்ணீரில் தத்தளிப்பதை மீன் கொத்திக் குருவி பார்த்தது. மற்ற பறவை களுக்குக் கொக்கு படும் துன்பத்தைக் காட்டியது. எல்லாப் பறவைகளும் அதன் துன்பத்தைக் கண்டு இரக்கப்பட்டன.
மீனவன் வேகமாக ஓடி வந்தான். தூண்டிலில் அகப்பட்ட மீனை விழுங்கியது கொக்கு. அதன் நெஞ்சில் தூண்டில் முள் குத்தி அது பறக்க முடியாமல் தவித்தது. மீனவன் அதைப் பிடிப்பதற்காகக் குளத்தில் இறங்கினான்.
கொக்கு மீனவனைப் பார்த்து, ''என்னை ஏன் வஞ்சமாகப் பிடிக்க முயற்சித்தாய்? உனக்கு நான் எவ்விதத் தீமையும் செய்ய வில்லையே,'' என்று கேட்டது.
''பலருடைய உணவை நீ மட்டுமே தின்று தீர்க்கிறாய். இது நியாயமா? பகிர்ந்துண்டு வாழும் பண்பு உனக்கு வேண்டாமா?'' என்று கேட்டான் மீனவன்.
''கிடைத்ததை எல்லாம் நானே அனுபவித்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கிடையாது. அதோ பார்!'' என்று மேற்குத் திசையைக் காட்டியது.
கொக்குக் காட்டிய திசையை மீனவன் பார்த்ததும் திகைத்தான். அங்கே சிறகு உடைந்த பறவைகளும் கால் முடமான பறவை களும், ஒரு கண் இழந்த பறவைகளும் குழுமி இருந்தன.
''அவைகள் உயிர் வாழத்தான் நான் இங்கே ஓயாமல் உழைக்கிறேன். கிடைத்த வற்றை எல்லாம் கொண்டு சென்று கொடுக்கிறேன். ஆனால், இதோ இருக்கிற பறவைகள் <உழைக்காமல் என் வாயில் இருந்து கீழே விழும் மீன்களையும், புழு பூச்சிகளையும் உண்டு உடல் வளர்க்கின்றன.
மீனவன் கொக்கின் வாயில் இருந்து தூண்டில் முள்ளை எடுத்தான். இரக்கத்தோடு கொக்கைப் பார்த்தான்.
''ஐயா! நீ என்னைக் கொன்றால் நான் மட்டும் இறக்கத் தயாராக இருக் கிறேன். ஆனால், என்னை நம்பி இருக்கும் இவர்கள் கதி என்ன என்று சிந்தித்துப் பார்,'' என்று வேதனையோடு மீனவனை கேட்டது.
மீனவன் மற்றப் பறவைகளைப் பார்த்தான். பிறர் உழைப்பால் வாழ நினைக்கும் அவைகள் தலைகுனிந்து அமர்ந்திருந்தன.
''ஐயா! நான் செய்யும் தவம் இவர்கள் உயிரைக் காப்பாற்ற வேண்டும்; அதற்காகத் தினமும் உழைக்க வேண்டும் என்பதுதான். உழைப்பின்றி உயிர் வாழ்தல் பயனற்றது என்று எண்ணுகிறேன்,'' என்றது கொக்கு.
''உண்மை. தனக்காக வாழ்பவன் தன்னல வாதி; தன் குடும்பத்திற்காக வாழ்பவன் சுயநலவாதி; நாட்டுக்காக வாழ்பவன் பொது நலவாதி. கொக்கு, உன் தியாக உள்ளத்தை நான் பாராட்டுகிறேன்,'' என்று கூறிவிட்டுச் சென்றான்.
சுயநலமிக்கப் பறவைகள் தங்கள் பொறாமைக் குணத்தால் அவமானப் பட்டதை எண்ணி வெட்கப்பட்டன.
-முற்றும்.
