
மங்களவலசு கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார் துரைப்பாண்டி. அவர் மகள் கவிதா. 10ம் வகுப்பு கணக்கு பாட தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாள்.
''இப்படி கணக்கு போட்டால், பொதுத்தேர்வில் வெற்றி பெற முடியுமா...''
கோபித்து சத்தம் போட்டார் ஆசிரியர்.
கவிதாவின் முகம் வாடியது.
இரண்டு நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை. அழுதவாறு இருந்தாள்.
வெளியூர் சென்றிருந்த அப்பாவுக்கு இது தெரியவந்தது.
வீடு திரும்பியவர், ''தோற்றால், வாழ்க்கையே அவ்வளவு தான் என நினைப்பது முயற்சியில்லாமைக்கு சான்று. சோம்பேறி தான் அப்படி எண்ணுவார்.
''காக்கையும், குருவியும் கூடு கட்டுவதைப் பார்த்திருக்கிறாயா... சின்ன சின்ன குச்சி, பஞ்சு, தேங்காய் நார் எல்லாம், அலகில் கொத்தி வந்து கட்டும். குச்சி விழுந்து விட்டால், மறுபடி எடுத்து வந்து கட்டி முடிக்கும்...
''அறிவு குறைந்த உயிரினங்களே, நினைத்ததை முடிக்கும் போது, ஆறறிவுள்ள நாம் சோம்பி இருக்கலாமா... முயற்சி செய்தால் முன்னேறலாம்...'' என, பரிவுடன் தேற்றினார்.
உற்சாகத்துடன் எழுந்து, ''கணக்கில் பயிற்சி செய்து, வகுப்பில் முதல் மாணவியாக வருகிறேன் பாருங்கள்...'' என சபதம் செய்தாள் கவிதா. சொன்னபடி செய்து முடித்தாள்.
பிள்ளைகளே... முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
- ஆ.வேதாம்பாள்

