தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி - சரண்யா (1)

பூங்குழலி - சரண்யா (1)

பூங்குழலி - சரண்யா (1)


PUBLISHED ON : மார் 18, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 18, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாடசாலை துவங்குவதற்கு தயாராகிவிட்டது. மாணவ, மாணவிகள் ஒவ்வொருவராக, கையில் ஏடும், எழுத்தாணியுமாக வரத் தொடங்கினர். அவர்களில், ஏழ்மையானவர்களும், பணவசதிமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்களில் ஒருத்தி தான் பூங்குழலி.

ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவளானாலும், கல்வி கற்க வேண்டுமென்பதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தாள் பூங்குழலி. மலர்கள், நட்சத்திரங்கள், சந்திரன், நீர்வீழ்ச்சி, சின்னஞ்சிறு ஜீவன்கள் எல்லாம் அவளுக்கு மிகவும் பிடித்தவை. பறவைகளிடம், அவை பதில் சொல்லாவிட்டாலும் நின்று பேசுவாள்.

பூங்குழலியின் அம்மா இறந்து விட்டாள். அவள் அப்பா மறுமணம் செய்து கொண்டார். அவர் பெயர் பொன்னன். அவர் இரண்டாவதாக மணந்து கொண்ட பெண்ணின் பெயர் கோலம்மா.

கணவன் வீட்டிற்கு வந்த நாளிலிருந்தே, கோலம்மாவுக்கு பூங்குழலியை பிடிக்கவில்லை. அதிலும், படிக்க வேண்டுமென்று பூங்குழலி கொண்டிருந்த ஆவல், அவளுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. பூங்குழலியை, வீட்டு வேலைக்கு அனுப்பவும், கழனியில் வேலைக்கு அனுப்பவுமே அவள் விரும்பினாள்.

தன் கணவன் அன்றாடம் சம்பாதித்து வரும் பணம் குடும்பம் நடத்த போதவில்லை. வரவு குறைவு; செலவோ அதிகம். தானும் ஏதாவது வேலை செய்தால்தான், ஓரளவு உயிர் பிழைக்க முடியும். அதுகூடப் போதாது... பூங்குழலியும் ஏதாவது கூலி வேலை செய்து நான்கு காசு சம்பாதித்து கொண்டுவர வேண்டும். அப்போதுதான் வாழ முடியும் என்றெண்ணினாள் கோலம்மா.

கழனியில் நாற்றுநட, களை பிடுங்க, கதிர் அறுக்க, நெல்லையும், பதரையும் புடைந்து பிரிக்க என்று ஏதாவது வேலைக்குச் செல்வாள் கோலம்மா. அப்போது, அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் சிறுமிகளை பார்ப்பாள்.

இவர்களைப் போல, பூங்குழலியும் ஏதாவது வேலை செய்யலாமே... அதை விட்டுவிட்டு, 'படிக்கிறேன், படிக்கிறேன்' என்று பாடசாலை செல்கிறாளே என்றெண்ணினாள் கோலம்மா.

தன் எண்ணத்தை, கணவன் பொன்னனிடம் சொன்னாள்.

''இதோ பார் கோலம்... நம் பூங்குழலி, சிறிய பெண். அவள் சம்பாதித்தாக வேண்டும் என்ற கட்டாயம் எதுவுமில்லை. கல்வி கற்க வேண்டும் என்பதில், அவளுக்கு பெரும் ஆர்வமிருக்கிறது. எது எதில், எவரெவருக்கு ஆவல் இருகுகிறதோ, அதில் அவர்கள் ஈடுபட செய்ய வேண்டும். அப்போது தான் அவர்கள் பிரகாசிப்பர்!'' என்றான் பொன்னன்.

''கல்வி கற்று, எந்த ராஜ்ஜியத்தை ஆளப் போகிறாள் பூங்குழலி?'' என்றாள் கோலம்மா.

''அவள் ஜாதகப்படி, அவளுக்கு ராஜயோகம் வரப் போகிறது. ஜோசியர், பூங்குழலியின் ஜாதகத்தை கணித்துப் பார்த்துவிட்டு, 'அவளுக்கு, நாட்டை ஆளும் யோகம் இருக்கிறது' என்று கூறினார்,'' என்றான் பொன்னன்.

''ஒரு ஏழைப் பெண்ணுக்கு, நாட்டை ஆளும் யோகம் வரப் போகிறதாம்! கேழ்வரகில் நெய் வழிகிறது என்று கூறினால், அதையே நம்பி விடுவதா? நாளைக்கு வரவிருக்கிற பலாக்காயைவிட, இன்று கிடைக்கவிருக்கிற கலாக்காயே மேல்... அவள் படிப்பை நிறுத்திவிட்டு, ஏதாவது ஒரு வேலைக்கு அனுப்புங்கள்!'' என்றாள் கோலம்மா.

பொன்னனோ, பூங்குழலியை கல்வி கற்க பாடசாலைக்கு அனுப்புவதை நிறுத்தவில்லை. தான் கல்வி கற்க வேண்டும் என்பதில், தன் அப்பா இவ்வளவு உறுதியாக இருக்கிறாரே என்றெண்ணி மகிழ்வாள் பூங்குழலி.

பாடசாலையில், இந்த பக்கமும், அந்த பக்கமும், நான்கு பலகைகள் போடப்பட்டிருந்தன. மாணவ, மாணவியர் ஒவ்வொருவராக வந்து, தத்தம் இருக்கைகளில் அமர்ந்தனர். பூங்குழலியும், தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

எதிரே போடப்பட்டிருந்த ஒரு பலகையின் மீது உட்கார்ந்து சம்மனம் இட்டுக் கொண்டார் குரு. எல்லா மாணவ, மாணவிகளையும் ஒருமுறை பார்த்தார். பிறகு கண்களை மூடி, தம் இருகைகளையும் நெஞ்சின் மீது கூப்பிக் கடவுளை வணங்கினார். அதுபோலவே, எதிரே அமர்ந்திருந்த மாணவ, மாணவிகளும் செய்தனர்.

கண்களை திறந்த குரு, ''குழந்தைகளே! இன்று உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். ஆனால், அக்கதையின் முடிவை நான் சொல்ல மாட்டேன். உங்கள் மதிநுட்பத்தால், நீங்கள் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும்,'' என்றார்.

என்ன கதையோ, முடிவை எப்படி சொல்ல வேண்டுமோ என்ற கலக்கத்தில் மாணவர்கள் திகைக்க, பூங்குழலி மட்டும், ''கதையை சொல்லுங்கள் குருவே!'' என்று உற்சாகமாக கேட்டாள்.

குரு சொன்ன கதைக்கான விடையை பூங்குழலி தான் சரியாகச் சொன்னாள். அத்துடன் குரு கேட்ட கேள்விகளுக்கான பதில்கள் அனைத்திற்கும் குழலியே விடை கூறினாள். அவளது அறிவை கண்ட குரு ஆச்சரியப்பட்டார்.

குருகுலத்தில் படிக்கும் பணக்கார பிள்ளைகள், சான்றோர்களின் பிள்ளைகளைவிட இந்த ஏழைச் சிறுமிக்குள் இருந்த அறிவு, குருவை திகைக்க வைத்தது.

''மகளே! உனக்கு மிகவும் சிறப்பான எதிர்காலம் இருக்கிறது!'' என்றார் குரு.

அன்று இரவு- தன் தந்தையிடம் இந்த விஷயங்களைக் கூறி மகிழ்ந்தாள் பூங்குழலி. அதை கேட்டுக் கொண்டிருந்த சித்திக்கு வயிறு எரிந்தது.

( தொடரும்)

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us