PUBLISHED ON : ஏப் 29, 2011

இதுவரை: பட்டத்து யானை பூங்குழலி என்ற ஏழைச் சிறுமியை தேர்ந்தெடுத்தது. ஆத்திரம் கொண்டார் அறிவுமதி. இனி
உப்பரிகையிலிருந்து பார்த்தார் அமைச்சர் அறிவுமதி. பட்டத்து யானையைச் சுற்றி மக்கள் கூடியிருந்தனர். பட்டத்து யானை மீது அமர்த்தப்பட்டிருந்தாள் பூங்குழலி.
''மேகநாட்டு எதிர்கால இளவரசி வாழ்க! இளவரசி பூங்குழலி வாழ்க!'' என மக்கள் இடும் கோஷம், விண்ணில் எதிரொலித்துக் கொண்டிருந்தது.
'டக் டக்'கென்று, குதிரைகள் வரும் குளம்பொலியின் சப்தம் கேட்டது. மன்னர் அமரசிம்மனும், மகாராணி மாணிக்கவல்லியும் வந்து கொண்டிருந்தனர். பட்டத்து யானை, பூங்குழலி என்ற ஒரு சிறுமிக்கு மாலையிட்டு, நாட்டின் எதிர்கால இளவரசியாக அவளை தேர்ந்தெடுத்துள்ளது என்ற மகிழ்ச்சி செய்தியை மன்னருக்கு அனுப்பியிருந்தனர் அதிகாரிகள்.
தன் மகள், மேகநாட்டின் எதிர்கால ராஜகுமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த பொன்னனுக்கு, பூங்குழலிக்கு ராஜயோகம் உண்டென்று ஜோதிடர் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது; அது எவ்வளவு சீக்கிரம் பலித்துவிட்டது.
பொன்னனின் பார்வையை ஆனந்தக் கண்ணீர் மறைத்தது. நினைக்கவே பெருமையாக இருந்தது. 'இவ்வளவு சிறப்படைய வேண்டிய பெண்ணை, வயலில் வேலை செய்ய விட்டாளே கோலம்மா! என்ன மனுஷி அவள்!'
பட்டத்து யானை மீது அமர்ந்திருந்த பூங்குழலியின் கண்கள், கூட்டத்தில், தன் தந்தை பொன்னனைத் தேடின. வெகுநேரம் பார்வையை சுழலவிட்டு, பிறகு பொன்னனை கண்டுபிடித்து விட்டாள்.
''எனக்கு இந்த மேகநாட்டின் அரசகுமாரியாகும் வாய்ப்பு உங்களால் தான் வாய்த்தது!'' என்று மானசீகமாக கூறி, மார்பின் நடுவே தன் இரு கரங்களையும் கூப்பி, பொன்னனை நமஸ்கரித்தாள்.
தன் மாளிகை உப்பரிகையிலிருந்து, பூங்குழலியையும், அவள் தந்தையையும் மாறி மாறி பர்த்துக் கொண்டிருந்தார் அமைச்சர் அறிவுமதி. அவர் வயிறு எரிந்து கொண்டிருந்தது. தன் மகன் பேரறிவாளனுக்கு கிட்டியிருக்க வேண்டிய வாய்ப்பை தட்டிப் பறித்துக் கொண்டவர்கள். அடுத்த வேளைக்கு உணவில்லாமல் அல்லாடியவர்களுக்கு அரசபோக வாழ்க்கையா? பொன் வைர ஆபரணங்களா? பட்டுப்பீதாம்பர ஆடைகளா? சுவையான உணவுகளா? அரண்மனை வாழ்வா? இதை அவர்கள் அனுபவிக்கவிடக் கூடாது! என்று மனதினுள் அமைச்சர் அறிவுமதி கறுவிக் கொண்டிருந்தபோது, அரசரின், அரசியாரின் புரவிகள், அரசவை பிரதானிகள் புடை கூழ வந்துவிட்டனர்.
அரசரும், அரசியாரும் அமர்ந்து வந்த குதிரைகள், பட்டத்து யானையின் எதிரே வந்து நின்றன.
அவர்களின் பின்னே, மலர்களாலும், ஜரிகைகளாலும் அலங்கரிக்கப்பட்டு ஒரு முத்துப் பல்லக்கு பூங்குழலியை அரண்மனைக்கு அழைத்துச் செல்ல பின்னால் வந்து நின்று கொண்டிருந்தது.
அரசரும், அரசியாரும், பூங்குழலியை கண் இமைக்காது பார்த்தனர். அறிவுச்சுடராக, முகம் சுந்தர சூரிய ஒளிவீச, கண்களில் கனிவு நிரம்பியிருக்க, பூங்குழலி மிகவும் சாந்தமாகவும், அமைதியாகவும் இருப்பதை பார்த்தனர்.
முதல் பார்வையிலேயே, பூங்குழலியின் மீது, நல்ல மதிப்பு ஏற்பட்டுவிட்டது அவர்களுக்கு. அவளை நோக்கி கையசைத்து, புன்னகைத்து, பிறகு யானைப் பாகனை பார்த்தனர்.
அவர்களின் பார்வையின் பொருள் உணர்ந்து கொண்ட யானைப் பாகன், பூங்குழலியை, பட்டத்து யானை மீதிருந்து கீழே இறக்கிவிட்டான்.
அரசனும், அரசியும், தத்தம் குதிரைகளிலிருந்து இறங்கி கீழே வந்தனர். பூங்குழலியை நோக்கிச் சென்று, ஒரு கைகளையும் நீட்டி, ''வா குழந்தாய்!'' என்றனர்.
அவர்களுடைய அன்பான அழைப்பு, பூங்குழலியின் மனதை நெகிழச் செய்து, இடது கையால் பாவாடையை தூக்கிபிடித்தபடி வந்து, அவர்கள் நீட்டிய கைகளில் அடைக்கலமாயினாள். அவளை தூக்கி உச்சிமுகர்த்து, முத்தமிட்டு அணைத்துக் கொண்டனர்.
அக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்த பொன்னனின் கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகிற்று.
ஒரு நல்ல குழந்தையை, நாட்டின் இளவரசியாக தேர்ந்தெடுத்து கொடுத்துவிட்ட பட்டத்து யானைக்கு, அரண்மனை சிப்பந்திகள், நிறைய பழங்கள், கரும்பு, கனிகளை உண்ணக் கொடுத்தனர்.
அரசர் அமரசிம்மன், ''குழந்தாய்! உன் பெயர் பூங்குழலி என்றறிந்தோம். உன் தாய், தந்தையர், இந்த மின்னல்புரியில் எங்கே வசிக்கின்றனர்?'' என்று கேட்டார்.
''அதோ நிற்கிறாரே... அவர்தான் என் தந்தை?'' என்று பூங்குழலி, பொன்னனை சுட்டிக்காட்டினாள்.
''அருமையான, அழகான, அறிவும், செறிவும் நிறைந்த பூங்குழலியை பெற்ற பெருந்தகையே வணக்கம்!'' என்றார் அரசர் அமரசிம்மன்.
அரசி மாணிக்கவல்லியும், ''இன்று நாங்கள் பாக்கியமுற்றவர்களானோம்!'' என்று கூறி, தானும் பொன்னனை வணங்கினார்.
''தங்கள் பெயரென்ன?'' என்று அரசர் கேட்டார்.
''என் பெயர் பொன்னன்... பூங்குழலிக்கு, பெற்ற தாயில்லை. சிற்றம்மை தான் இருக்கிறாள். அவள் இவளை கவனிப்பதேயில்லை. கஷ்டப்படுத்திக் கொண்டே இருப்பதால் தான், பூங்குழலியை அழைத்துக் கொண்டு மின்னல்புரிக்கு வந்தேன் அரசே!''
''இனி நீங்கள் பூங்குழலியைப் பற்றியோ, உங்களைப் பற்றியோ சிறிதும் கவலைப்பட வேண்டாம். ஒரு அரச குமாரிக்கே உரித்தான சீரோடும், சிறப்போடும் வளர்வாள் பூங்குழலி. அவளுக்கு, கல்வி, தியானம், யோகம், குதிரை, யானையேற்றம், வாள் சண்டையெல்லாம் கற்று கொடுக்கப்படும். உங்களுக்கு ஒரு வீடு கொடுக்கப்பட்டு, அதில் எல்லா வசதிகளும் இருக்கும்படி செய்யப்படும். அரசின் சார்பில் ஊதியம் தரப்படும். ஒரு பணி, உங்களது கல்வி, திறமை, ஆவல் எல்லாவற்றையும் பார்த்து கொடுக்கப்படும்!'' என்றார் அமரசிம்மன்.
அரசரும், அரசியும், தம் குதிரை மீது ஏறிக்கொள்ள, முத்துப் பல்லக்கில் உட்கார வைக்கப்பட்டாள். எல்லாரும் அரண்மனை நோக்கி புறப்பட்டனர்.
திரும்பி பார்த்தாள் பூங்குழலி. அவள் அப்பா பொன்னன் நிற்கும் இடம் தூர போய் கொண்டிருந்தது. அரச பதவி, தன்னையும், அப்பாவையும் பிரித்துவிட்டதே என்றெண்ணியதும், பூங்குழலியின் கண்களில் கண்ணீர் திரண்டது.
(- தொடரும்)
