தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி! (14) - சரண்யா

பூங்குழலி! (14) - சரண்யா

பூங்குழலி! (14) - சரண்யா


PUBLISHED ON : ஜூன் 17, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 17, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: குருகுல படிப்பு முடித்த இளவரசிக்கு போர்பயிற்சி கொடுக்கும் பொறுப்பை அரசர் அமைச்சரிடம் ஒப்படைத்தார் இனி-

உடனே தம்மைக் காண வருமாறு போர் பாசறையைச் சேர்ந்த பயிற்சியாளர்களை வரச் செய்தார் அமைச்சர் அறிவுமதி. சிலம்பாட்டத்தில் சிறந்த சிவநேசன், வில் வித்தையில் சிறந்த வில்லாளன், வாட்போரில் சிறந்த வடிவழகன், குதிரையேற்றத்தில் சிறந்த குணாளன், யானையேற்றத்தில் சிறந்த யதுகிரி ஆகியோர் உடன்வந்து, அவர்முன் வணங்கி நின்றனர்.

''வருங்கால இளவரசி, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க, தன் குருகுல வாசத்தை செம்மையாக முடித்துவிட்டாள். அடுத்ததாக அவருக்கு போர்க்கால பயிற்சிகளை கற்றுக்கொடுக்க அரசர் விரும்புகிறார். அதனால் தான் உங்களையெல்லாம் இப்போது அழைத்துள்ளேன்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''வருங்கால இளவரசிக்கு போராயுதப் பயிற்சி கொடுப்பதில் எங்களுக்கெல்லாம் மிகவும் மகிழ்ச்சி அமைச்சர் பெருமானே!'' என்றான் வில்லாளன்.

''எங்களுக்கு தெரிந்ததை எல்லாம் வருங்கால இளவரசிக்கு நன்கு பயிற்சி கொடுக்கிறோம் அமைச்சர் பெருமானே!'' என்றான் வடிவழகன்.

''என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? உங்களுக்கு தெரிந்ததை எல்லாம் வருங்கால இளவரசிக்கு நன்கு பயிற்சி கொடுப்பதாகவா சொன்னீர்கள்?'' என்று கேட்டார் அமைச்சர் அறிவுமதி.

''ஆம் அமைச்சர் பெருமானே!'' என்றனர் எல்லாரும்.

''இளவரசிக்கு எந்த பயிற்சியையும் நீங்கள் நன்கு கற்றுத்தரக் கூடாது!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

நன்கு கற்றுக்கொடுக்க வேண்டுமென்று தான் எல்லாரும் சொல்வர். அமைச்சர் நன்கு கற்றுத்தரக் கூடாது என்று ஏன் சொல்கிறார்? என்று புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும், ஆயிரம் பொற்காசுகள் கொண்ட பொற்கிழிகளை வழங்கினார் அமைச்சர் அறிவுமதி.

''இதெல்லாம், நான் சொல்வதை நீங்கள் செவ்வனே செய்து முடிப்பதற்கு நான் கொடுக்கும் முன் அன்புப்பரிசு... சொல்வதை செய்துமுடித்து விட்டால், உங்கள் ஒவ்வொருவருக்கும் பல பொற்கிழிகள் பரிசாக கிடைக்கும்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''நாங்கள் என்ன செய்ய வேண்டும் அமைச்சர் பெருமானே?'' என்று ஒரே குரலில் கேட்டனர் பயிற்சியாளர்கள்.

''நான் சொல்லப் போவதை நீங்கள் யாரிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் உங்கள் தலை உங்கள் கழுத்தில் இருக்காது; துண்டிக்கப்பட்டுவிடும்!''

''கூற மாட்டோம் அமைச்சர் பெருமானே!''

''பயிற்சி தொடங்குகிற சில நாட்கள் ஆர்வமுடன் அரசரும், அரசியாரும் பூங்குழலி பயிற்சி பெறுவதைக் காண ஆவலாக வருவர். அப்போதெல்லாம் நீங்கள் பூங்குழலி போர் ஆயுதங்களை எப்படி கையில் ஏந்த வேண்டும்; எப்படி சுழற்ற வேண்டும்; எப்படி மோத வேண்டும்; எப்படி தன்னை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை பூங்குழலிக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். அதைப் பார்த்து மனம் நிறைந்து சென்று விடுவர் அரசரும், அரசியும்! அதற்குப் பிறகு தான், நான் சொல்வதுபோல நீங்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் பூங்குழலிக்கு!''

''சொல்லுங்கள் அமைச்சர் பெருமானே?''

''வில், கத்தி, கதை, ஈட்டி, சூலாயுதம் போன்ற போராயுதங்களை எப்படி உபயோகிப்பது என்று சொல்லிக் கொடுக்காமல், அவற்றை எப்படி தவறான முறையில் உபயோகிப்பதென்று பூங்குழலிக்கு நீங்கள் கற்றுத்தர வேண்டும். அதைக் கற்றுக் கொள்கிற அவள், அதைப் பிற்காலத்தில் பிரயோகிக்கும் போது, அவளுக்கு உடம்பில் பலமான வெட்டுக்காயமோ அல்லது மரணமோ ஏற்பட வேண்டும். வெட்டுக்காயங்கள் ஏற்படுவதைவிட, போராயுதங்களை தவறான முறையில் உபயோகிக்கிற பூங்குழலி, அதனால் மரணமே அடைய வேண்டும்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''பூங்குழலி இறந்துவிட்டால், வாரிசற்ற இந்த மேகநாட்டிற்கு, நான் அரசரை ஒழித்து மன்னனாகி விடுவேன். நீங்கள் குபேரராக, பொன்னை கொட்டிக் கொட்டி கொடுப்பேன். வைரத்தை வாரி வாரி இறைப்பேன்! என்ன சொல்கிறீர்கள்? நான் சொல்கிறபடி செய்கிறீர்களா, இல்லை மரணத்தை தழுவுகிறீர்களா?'' என்றார் அமைச்சர்.

''நீங்கள் சொல்கிறபடியே கேட்கிறோம் அமைச்சர் பெருமானே! எங்களுக்கு வளமான வாழ்வு வேண்டும். எங்கள் மனைவி, மக்கள் சுகபோகத்தில் திளைக்க வேண்டும்!'' என்றனர் எல்லாரும்.

''நன்று! இந்த திட்டம் வெளியில் தெரியக்கூடாது. தெரிந்தால் உங்களை அழித்துவிடுவதோடல்லாமல், உங்கள் குடும்பத்தினரையும் பூண்டோடு அழித்துவிடுவேன்,'' என்று மீண்டும் எச்சரித்தார் அமைச்சர் அறிவுமதி. அவர்கள், அவர் அளித்த பொற்கிழிகளுடன் புறப்பட்டுச் சென்றனர்.

அரண்மனை வாயிலில் எதிர்பட்டான் அமைச்சர் அறிவுமதியின் மகன் பேரறிவாளன். அவனைக் கண்டதும், பொற்கிழியை கக்கத்தில் வைத்து அழுத்தி, மேலே போட்டிருந்த வஸ்திரத்தால் அதை மறைத்துக் கொண்டனர்.

''எங்கே வந்துவிட்டுச் செல்கிறீர்கள் நால்வரும்? நீங்கள் நால்வரும் ஒன்றாகச் சேர்ந்து வரக் காரணம் என்ன?'' என்று அவர்களிடம் கேட்டான் பேரறிவாளன்.

''வருங்கால இளவரசிக்கு, விற்போர், வாட்போர், மற்போர் எல்லாம் கற்பித்துக் கொடுக்க வேண்டுமென்று அரசர் உத்தரவிட்டுள்ளார். அதனால், அமைச்சர் பெருமான் எங்கள் நால்வரையும் ஒருசேர அழைத்து அந்தச் செய்தியை கூறி, உடனே பயிற்சியை தொடரும்படி கேட்டுக் கொண்டுள்ளார். அதனால் தான் ஒருசேர நால்வரும் வந்தோம்!'' என்றனர் நால்வரும்.

''வேறு என்ன கூறினார் அமைச்சர்?''

''இளவரசியை போர்க்கால ஆயுதப் பயிற்சியில் தலைசிறந்தவர்களாக நாங்கள் உருவாக்க வேண்டும். இதில் எந்த தவறோ, தடையோ ஏற்பட்டுவிடக் கூடாதாம்... இளவரசியை ஒரு சிறந்த போராளியாக மாற்றிவிட்டால், எங்களுக்கு போதும் போதும் என்னும் அளவுக்கு வைரத்தையும், வைடூரியத்தையும் அரசர் வாரி வரி வழங்குவாராம்!'' என்றனர்.

''சரி போங்கள்!'' என்று அவர்களிடம் கூறி அனுப்பிவிட்டு, புலந்திரனை தேடிச் சென்றான் பேரறிவாளன்.

புலந்திரன், நந்தவனத்தில் நிழல் தரும் ஒரு மரத்தினடியில் அமர்ந்திருந்தான். ஏதோ யோசனையில் ஈடுபட்டிருப்பவனைப் போல இருந்தது அவனைப் பார்த்தால். அவனருகில் சென்றடைந்த பேரறிவாளன், ''புலந்திரா! என்ன யோசனை?'' என்றான்.

''எல்லாம் அரசகுமாரி பூங்குழலியைப் பற்றித்தான்!'' என்றான் புலந்திரன்.

''அவளை பட்டத்து யானை தேர்ந்தெடுத்து அரச குமாரியாக்கியது போல, ஏழையான என்னையும் ஏதாவது ஒரு சந்தர்ப்பம் அரசகுமாரராகவோ அல்லது அதற்கு மேலோ உயர்த்தி விடாதா?''

''அதன்மூலம், இளவரசியை மணந்து கொள்ளலாமே என்ற யோசனை தானே?'' என்று கேட்டான் பேரறிவாளன்.

''அரசகுமாரி எங்கே, நான் எங்கே பேரறிவாளா? முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?'' என்று கேட்டான் புலந்திரன்.

''அப்படி என்றால், பூங்குழலியை மணக்க உனக்கு விருப்பம்தான் என்று சொல். பூங்குழலியும் உன்னை விரும்புகிறாள் என்பதும் எனக்குத் தெரியும். புலந்திரா, கவலையை விடு. காலம் வரும்போது உன்னையும், பூங்குழலியையும் நான் சேர்த்து வைக்கிறேன்!'' என்றான் பேரறிவாளன்.

''தனது நேரத்தில் மிகுதியான நேரத்தை இப்போதெல்லாம் பூங்குழலி அரண்மனை நூலகத்திலேயே செலவழிக்கிறாள். அது ஏன் என்று எனக்குத் தெரியவில்லை!'' என்றான் புலந்திரன்.

''எனக்குத் தெரியும்!'' என்றான் பேரறிவாளன்.

(- தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us