தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி (3) - சரண்யா

பூங்குழலி (3) - சரண்யா

பூங்குழலி (3) - சரண்யா


PUBLISHED ON : ஏப் 01, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: மகள் பூங்குழலியை படிக்கவைக்க வேண்டும் என்பதற்காக, நாட்டின் தலைநகரான மின்னல்புரிக்கு பயணமானான் பொன்னன். அவர்களை அழைத்துச் செல்ல பல்லக்கு வந்தது. இனி-

பல்லக்கை தோளிலிருந்து இறக்கி கீழே வைத்தனர், அதை தூக்கி வந்தவர்கள். தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து, தங்கள் உடலில் அரும்பியிருந்த வியர்வையை துடைத்துக் கொண்டனர். பிறகு, பொன்னனையும், பூங்குழலியையும் மாறி மாறிப் பார்த்தனர்.

அவர்களில் ஒருவன், பொன்னனை நோக்கி பணிவாக, ''ஐயா! இச்சிறுமி தங்கள் மகளா? முகத்தில் அறிவுச்சுடர் பிரகாசிக்கிறதே! எங்கிருந்து வருகிறீர்கள்; எங்கு செல்ல வேண்டும்?'' என்று கேட்டான்.

''மின்னல்புரி செல்கிறோம். இவள் என் மகள். பெயர் பூங்குழலி. நீங்கள் சொன்னதுபோல, இவள் அறிவில் சிறந்தவள். கருவில் திருஉடையவள் என்று சொல்வார்களே, இவளுக்கு அது மிகவும் பொருத்தமாக இருக்கும். என் பெயர் பொன்னன். எந்த வேலை கிடைத்தாலும் செய்வேன். இவள் தாயற்றவள். இவளை படிக்க வைக்கவும், எங்களை காப்பாற்றிக் கொள்ள ஒரு வேலை தேடியும் நான் என் மகளை அழைத்துக்கொண்டு புறப்பட்டு விட்டேன்!'' என்றான் பொன்னன்.

''உங்கள் பேச்சில், நல்ல எண்ணமும், நம்பிக்கையும் தெரிகிறது. நீங்கள் புறப்பட்ட காரியம் வெற்றியடையும்!'' என்றான் ஒரு பல்லக்கு தூக்கி.

''நன்றி ஐயா! மின்னல் புரி, தொலைவில் உள்ளதா?'' என்று கேட்டான் பொன்னன்.

''சற்று தொலைவுதான். சிறிய பெண்ணை அவ்வளவு தூரம் எப்படி நடக்கச் செய்து செல்வதென்று நீங்கள் கவலைப்பட வேண்டாம்!

''நாட்டிலுள்ள ஏழை பாழைகள், ஊனமுற்றோர், நோயுற்றோர், பணம் செலவழித்து பயணம் செய்ய முடியாதோர், அவர்கள் செல்ல வேண்டிய இடத்துக்கு சென்று சேர்க்க, எங்கள் மன்னர், நாடுமுழுவதும் இதுபோன்ற பல்லக்குகளையும், அதை தூக்கிச் செல்ல எங்களையும் நியமித்துள்ளார். இலவச பயணம் தான். பயணம் செய்யும்போது, பயணிகளுக்கு உணவு கொடுக்கவும் நிதி உதவி செய்கிறார்!'' என்றான் ஒரு பல்லக்கு தூக்கி.

''அப்பா! மனிதர்களை மனிதர் சுமக்கும் இந்த பல்லக்கில் நாம் செல்ல வேண்டாமப்பா!'' என்றாள் பூங்குழலி.

''குழந்தாய்! உன் கருணை உள்ளத்தை எப்படி பாராட்டுவதென்றே எங்களுக்குத் தெரியவில்லை. எங்கள் மன்னர் அமரசிம்மன், வறியவர்களுக்கு உதவ வேண்டும் என்று இந்த ஏற்பாட்டை செய்துள்ளார். ஒவ்வொருவரும், உட்கார்ந்து உண்ணாமல், உழைத்தே உண்ண வேண்டுமென்று, நீதி நூல்களும், அறநெறியாளர்களும் கூறுகின்றன. அதுபோல், பல்லக்கு தூக்கி நாங்கள் அழைக்கிறோம், பிழைக்கிறோம்!'' என்றான் இன்னொரு பல்லக்குத் தூக்கி.

அவன் வாதத்தை எதிர்த்து பிடிவாதமாக எதையும் கூற வேண்டாமென்று எண்ணிய பூங்குழலி, தன் தந்தை பொன்னனை பார்த்தாள்.

''பூங்குழலி... நீ நாட்டை ஆளப் போகிறவள் என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார். அது மெய்ப்படுவது போல அறிகுறிகள் தென்பட துவங்கிவிட்டன என்று நினைக்கிறேன். முதல் வேலையாக, நாம் நம் மேக நாட்டின் தலைநகரான மின்னல்புரி நோக்கி பயணம் தொடங்கினோம். இரண்டாவதாக, பாதி வழியிலேயே நம்மை அழைத்துச்செல்ல, அரசு பல்லக்கும் வந்துவிட்டது. அதிர்ஷ்டம் வந்து கதவை தட்டும்போது, அதை நாம் திறக்காமலிருக்கக் கூடாது. தானாக வரும் வாய்ப்புகளை தவறவிடக் கூடாது!'' என்றான் பொன்னன்.

அவர்கள் பல்லக்கில் ஏறிக்கொள்ள தயாராகி விட்டனர் என்பதை புரிந்துகொண்ட பல்லக்குத் தூக்கிகள், பல்லக்கின் உட்புறத்தையும், வெளிப்புறத்தையும் துடைத்தனர். அருகில் பலகாரம் விற்றுக் கொண்டிருந்த ஒரு கிழவியிடமிருந்து, பொன்னனுக்கும், பூங்குழலிக்கும் உணவு வாங்கிக் கொடுத்தனர்.

நடை பயணம் என்பதால், அரை திருக்கையில் நீர் நிரப்பி எடுத்துக் கொண்டனர்.

''ஐயா! தாங்கள் மகளுடன் பல்லக்கில் ஏறி அமர்ந்து கொள்ளுங்கள். நாங்கள் வேகமாக நடக்கும்போது, பல்லக்கு சில சமயம் அப்படியும், இப்படியும் ஆடும். அதனால், பல்லக்கினுள் பொருத்தப்பட்டிருக்கும் தோல் கைப்பிடியை பலமாக பிடித்துக் கொள்ளுங்கள். மாலைக்குள் நாம் மின்னல்புரியை அடைந்து விடலாம்,'' என்றான் ஒருவன்.

பல்லக்கினுள் ஏறி அமர்ந்தனர் பொன்னனும், பூங்குழலியும். பல்லக்கு புறப்பட்டது. வழியில் ஒரு பெண், குழந்தையை வைத்து சோறூட்டிக் கொண்டிருந்தாள். அவள் இந்த பல்லக்கு செல்வதை குழந்தைக்கு காட்டி அதற்கு சோறு ஊட்டுபவள். அதுமாதிரி இப்போதும் செய்தாள்.

அவளருகில் பல்லக்கை நிறுத்தி, ''என்ன செல்வி! குழந்தை நல்லா சாப்பிடுதா?'' என்று ஒரு பல்லக்கு தூக்கி கேட்டான்.

''பகல்ல பரவாயில்ல அண்ணே... பல்லக்கு, குருவி, கோழி, நாய், கிளின்னு காட்டி குழந்தைக்கு சோறூட்டிடுவேன். ராத்திரி தான் சோறூட்ட முடியலே அண்ணே!'' என்றாள் குழந்தையின் தாய்.

''ஏன்... ராத்திரி, வானத்துலே இருக்கிற நிலாவே காட்டி சோறு ஊட்ட வேண்டியது தானே செல்வி?'' என்று கேட்டான் ஒருவன்.

''அதுதான் பிரச்னையாயிடிச்சு அண்ணே!''

''என்ன பிரச்னை செல்வி?''

''வானத்துல இருக்கிற நிலா என் கைக்கு வந்தாதான் சாப்பிடுவேன்னு பிள்ளை ஒரே அடம் பிடிக்குது. வானம் எங்கே இருக்கு, நாம எங்கே இருக்கோம்? நிலா பக்கத்துலேயே இருந்தாலும், அதை எப்படி பிடிச்சு குழந்தை கையிலே கொடுக்கிறது!'' என்றாள் செல்வி.

''கொடுக்கலாமே!'' என்றாள் பூங்குழலி.

''எப்படியம்மா கொடுக்க முடியும்?'' என்று ஒரே குரலில் கேட்டனர் எல்லாரும்.

''உங்க வீட்லே, முகம் பார்க்கிற கண்ணாடி இருக்குதா அக்கா?'' என்று கேட்டாள் பூங்குழலி.

''இருக்குது!''

''அதை, ராத்திரி சோறு ஊட்டுறப்போ, குழந்தை கையிலே கொடுத்து, 'நிலாவைப் பாரு... உன் கைக்குள்ளே வந்திரிச்சுன்னு சொல்லுங்க. கண்ணாடியிலே நிலாவை பார்த்துட்டு, நிலா கையிலே வந்திரிச்சுன்னு நெனைச்சு, குழந்தை சாப்பிட ஆரம்பிக்கும்!'' என்றாள் பூங்குழலி.

''அடி என் ராசாத்தி!'' என்றாள் செல்வி அவள் புத்திகூர்மையைப் பார்த்து.

அவள் பூங்குழலியை, 'ராசாத்தி' என்றழைத்ததும், ஜோதிடர் கணிப்பின் மூன்றாவது அறிகுறியாக எண்ணினான் பொன்னன்.

பல்லக்கு புறப்பட்டது.

(- தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us