தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி (11) - சரண்யா

பூங்குழலி (11) - சரண்யா

பூங்குழலி (11) - சரண்யா


PUBLISHED ON : மே 27, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: பட்டத்து யானையால் இளவரசியாக்கப்பட்ட பூங்குழலி, அறிவிலும், போர்க்கலையிலும் சிறந்து விளங்க நூலகம் சென்றாள். இனி-

''அரசகுமாரிக்கு வணக்கம்... வருக, வருக!'' என்று பூங்குழலியை வரவேற்றார் நூலகர். அவர் வயதானவராக இருந்தார். அவருக்கு புன்னகைத்து தன் வணக்கத்தைக் கூறினாள்.

''நூலகரே! இப்பெரிய நூலகத்தில் எண்ணற்ற நூல்கள் நிறைந்துள்ளன. தரவாரியாக பிரித்து வைக்கப்பட்டுள்ளனவா?'' என்று கேட்டாள் பூங்குழலி.

''ஆம் இளவரசியாரே! வலதுபக்க மர தட்டுக்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஏடுகள், நீதி ஸ்ரீபாலனம் எப்படி செய்ய வேண்டும். இடதுபக்கமுற்ற மர அலமாரியில், நிதி எவ்வாறு நிர்வகிக்கப்பட வேண்டும் என்றும், ஓரமாக உள்ள அலமாரியில், மக்களை அதிகம் பாதிக்காத வரிகளை, எவற்றின் மீது எவ்வளவு விதிக்க வேண்டும் என்று கூறுகிற ஏடுகளும் உள்ளன!'' என்றார் நூலகர்.

''போர் முறை பயிற்சிப் பற்றி?''

''எண்ணற்ற ஏடுகள் உள்ளன இளவரசியாரே... போரின் அடிப்படை பொருட்கள் ஆயுதங்களே! அந்த ஆயுதங்கள் எவை எவை, அதை எப்படி கையில் பிடிக்க வேண்டும், எப்படி எதிரியை தாக்க வேண்டும், எதிரியின் தாக்குதலிலிருந்து நாம் எப்படி தப்பிக்க வேண்டும் என்றெல்லாம், ஒருமுறை படித்தாலே மனதில் படியும்படியாக எழுதப்பட்டுள்ளன!'' என்றார் நூலகர்.

''குதிரையேற்றம், யானையேற்றம் பற்றி?''

''உள்ளன இளவரசியாரே! குதிரையின் மீது எப்படி எறி அமற வேண்டும். கால்களை தாங்கு கட்டையில் எப்படி புதித்துக்கொள்ள வேண்டும், ஏறி அமர்ந்தபின் கீழே விழுந்துவிடாதபடி எப்படி அதன் முதுகில் அமர வேண்டும். அதன் மூக்கில் துவாரமிட்டு, அதன் வழியாக நுழைக்கப்பட்டுள்ள தோல்பட்டையை எப்படி இடது கையால் பிடிக்க வேண்டும். குதிரையை எந்த பக்கம் அந்த பட்டையை திருப்ப வேண்டும். குதிரையிலிருந்து இறங்க கையில் பிடித்துள்ள தோல்பட்டையை எப்படி இறுக்கிப்பிடிக்க வேண்டும். குதிரை படுவேகமாக ஓடும்போது, அதன் கழுத்துப்பகுதியில் வீரன் எப்படி சாய்ந்து கொள்ள வேண்டும் என்பதுவும், இதுபோல, யானை ஏற்றத்திலும் எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும். என்னென்ன விதிகளை கடைபிடிக்க வேண்டும், படிந்த அதன் முன்னங்காலில் ஏறி, அதன் காதைப்பிடித்து எப்படி யானையின் மீது ஏறி அமர வேண்டும்.

''யானையின்மீதிருந்து கீழே விழாதிருக்க, அதன் கழுத்தில் இறுக்கமாக பட்டை போல் கட்டியிருக்கும் சத்தியக் கயிற்றில் காலை நுழைத்துக் கொள்ள வேண்டும். அம்பாரியின் மீது எப்படி உட்கார்ந்தால் நாற்புறமும் பார்க்க முடியும் என்பது போன்ற நுண்ணிய வழிகாட்டிகள் எல்லாம் யானை ஏற்றம் என்ற நூலில் எளிதில் புரியும் வண்ணம் விளக்கப்பட்டுள்ளன இளவரசியாரே!'' என்றார் நூலகர்.

''ஒவ்வொன்றிலும் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா?'' என்று வியந்தாள் பூங்குழலி.

''நான் கூறியது சொற்பமே இளவரசியாரே... ஒவ்வொரு ஏட்டையும் ஆழ்ந்து அனுபவித்து படிக்க படிக்க இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்!'' என்றார் நூலகர்.

''இங்கேயே இருந்து தான் ஏடுகளை படிக்க வேண்டுமென்ற நிபந்தனை ஏதுமுள்ளதா நூலகரே?'' என்று கேட்டாள் பூங்குழலி.

''அப்படி எந்த நிபந்தனையும் கிடையாது இளவரசியாரே... இங்கேயே இருந்து படித்தால், ஊசி விழுந்தால்கூட சப்தம் கேட்காத இந்த தனிமை சூழலில் படிக்கலாம். அப்படி படிப்பது மனதில் நன்றாகப் பதியும். நூல்களை மாற்றி மாற்றி எடுத்து படிக்கலாம். வெளிச்சம், காற்று, அமைதியான சூழ்நிலை, தனிமை எல்லாம் கையில் எடுக்கிற ஏட்டை நாம் மிகவும் ஆவலுடன் படிக்க மிகவும் உதவி செய்யும்!'' என்றார் நூலகர்.

''அப்படி என்றால், இங்கே வந்தே எனக்கு விருப்பமான ஏடுகளை எடுத்து படிக்கிறேன் நூலகரே!'' என்று கூறிவிட்டு, பூங்குழலி வெளியில் வந்தபோது, எதிரே புலந்திரன் வந்தான்.

''இளவரசியாரே வணக்கம்!'' என்றான் அவன்.

''குருகுலத்தில் நாமெல்லாம் ஏற்ற தாழ்வுகள் இல்லாமல் சரிசமமாக படிக்கிறோம். அதனால், நீ என்னை பூங்குழலி என்றே அழைக்கலாம்; அழைக்கவும் வேண்டும்!'' என்றாள் பூங்குழலி.

''உன் இஷ்டம் பூங்குழலி!'' என்ற புலந்திரன், அவன் அங்குவந்ததன் காரணம் கேட்டாள்.

அரசர், அமைச்சர் மூலமாக தனக்கு வில்வித்தை, வாள் சண்டை, குதிரையேற்றம், யானை ஏற்றமெல்லாம் சொல்லித்தர உத்தரவிட்டுள்ளார். அது சம்பந்தமாக ஏடுகளையும் படித்துக்கொண்டே பயிற்சியிலும் ஈடுபட்டால், படித்ததும் செய்வதும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புள்ளதா, இல்லையா என்பது தெரிந்து, மேலும் அதில் சிறப்பாக ஈடுபடமுடியுமே என்று தான் அரண்மனை நூலகத்துக்கு வந்தேன்!'' என்றாள் பூங்குழலி.

''ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்கும் உன் அறிவுக்கு வணங்குகிறேன் பூங்குழலி. வில்வித்தை, வாள்வித்தை, குதிரையேற்றம், யானையேற்றம் எல்லாம் எப்படி கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துகெள்வதைவிட, அப்பயிற்சியை மேற்கொள்ளும்போது, எதிர்பாராத விதமான அசம்பாவிதம், விபத்து ஏதாவது நிகழ்ந்தால் அதை எப்படி தவிர்ப்பது, அதற்கு ஆளாகாமல் எப்படி நடந்து கொள்வதென்ற வழிகளையும் முதலில் படித்து அறிந்துகொள்வது மிகவும் நல்லது!'' என்றான் புலந்திரன்.

''ஏன் அப்படி சொல்கிறாய் புலந்திரா?'' என்று கேட்டாள் பூங்குழலி.

''ஒரு சாதாரணமான ஏழை குடும்பத்தைச் சேர்ந்த நீ, இன்று இந்நாட்டின் இளவரசியாக ஆகியிருக்கிறாய். உன்னை பிடித்தவர்களும் இருப்பர்; பிடிக்காதவர்களும் இருப்பர் இல்லையா? தனக்கு இளவரசராகும் அதிர்ஷ்டம் கிடைக்கவில்லையே என்று நினைப்பவர்களும், நமக்கு கிடைக்காதது இவளுக்கு கிடைத்துவிட்டதே என்று நினைப்பவர்களும் இருக்கலாமல்லவா? அதனால் தான் அப்படி கூறினேன் பூங்குழலி!'' என்றான் புலந்திரன்.

தன் மீது மிகவும் அன்பும், அக்கரையும் கொண்டு புலந்திரன் கூறியது, பூங்குழலியை பரவசமடையச் செய்தது. அவன் மீது பாசமும், பிரியமும் கொள்ளச் செய்தது.

''புலந்திரா... தினசரி நீ குருகுலம் வருவாயல்லவா?''

''வருவேன். ஏன் கேட்கிறாய் பூங்குழலி?''

''என் மீது இவ்வளவு பரிவு காட்டுகிற நீ, எனக்கு தினமும் ஏதாவது அறிவுரை கூறிக்கொண்டயிருக்க வேண்டும் என்பதற்காகத்தான்!'' என்றாள் பூங்குழலி.

அரண்மனை நூலகத்தை அடுத்து இருந்த அமைச்சர் அறிவுமதியின் குமாரன் பேரறிவாளன், பூங்குழலி, புலந்திரன் இருவரையும் மாறி மாறி பார்த்தான். வேறொரு இடத்திலிருந்து பார்த்த அமைச்சர் அறிவுமதியோ, பூங்குழலியை சுட்டெரிப்பது போல பார்த்துக் கொண்டிருந்தார்.

(-தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us