தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி (12) - சரண்யா

பூங்குழலி (12) - சரண்யா

பூங்குழலி (12) - சரண்யா


PUBLISHED ON : ஜூன் 03, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: தன்னுடைய மகள் பூங்குழலி இளவரசியாகிவிட்டால் என்பது தெரிந்தும் மகளைப் பிரிய முடியாமல் தவித்தான் பொன்னன். இனி-

பொன்னனுக்கு பைத்தியம் பிடித்துவிடும் போலிருந்தது. ஒரே ஊரிலிருந்தும், தந்தையும், மகளும் சேர்ந்து வாழ முடியவில்லை. குருகுலத்துக்கு பூங்குழலி செல்லும்போதும், வரும்போதும் மட்டுமே காண முடிகிறது. ஆனால், ஒரு வார்த்தைகூட பேச முடியவில்லை. அந்தஸ்து இருவரையும் பிரித்துவிட்டது.

பூங்குழலி அரச குமாரியாகாமல் ஏழைப் பெண்ணாகவே இருந்திருந்ததால், அவளை இப்போது இழந்திருக்க வேண்டாம். அவளை அரசகுமாரியாக ஆக விட்டுக் கொடுத்ததற்கு, வீடு, நிலம், பட்டாடைகள், பொன், பணம் எல்லாம் கிடைத்திருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், குழந்தையை அல்லவா முழுமையாக இழந்துவிட்டோம்... இவைகள் எல்லாம், வாழ்கிற சிரமத்தை குறைத்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், பூங்குழலியை பிரித்து எடுத்துச் சென்றுவிட்டதே!

ஒருநாள், ரதத்தில் பூங்குழலி குருகுலம் சென்று கொண்டிருந்தபோது, பொன்னன் தன்னை அடக்கிக் கொள்ள முடியாமல், 'பூங்குழலி, பூங்குழலி...' என்றழைத்தபடி, ரதத்தின் அருகில் சென்றுவிட்டான்.

அவன் ரதத்தின் அருகில் வந்துவிட்டதையும், தன்னை, 'பூங்குழலி, பூங்குழலி' என்று கண்களில் கண்ணீர் பொங்க கூப்பிடுவதையும் பூங்குழலி கவனித்துவிட்டாள்.

அவளாலும், தந்தை பாசத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. ரதத்தை நிறுத்தச் சொல்லி, அதிலிருந்து இறங்கி பொன்னனிடம் ஓடி வந்தாள்.

பூங்குழலியை அப்படியே தூக்கி மார்போடணைத்தான் பொன்னன். பூங்குழலியும், தந்தையை கட்டிக் கொண்டாள். அக்காட்சியைப் பார்த்தவர்கள், தந்தை - மகள் பாசம் எப்படிப்பட்டது என்பதை கண்டுகொண்டனர்.

தந்தை பாசத்தால் மகள், தான் ஒரு அரசகுமாரி என்பதையும் மறந்துவிட்டாளே! இதுவல்லவோ பாசப்பிணைப்பு என்று ஒருவருக்கொருவர் கூறிக் கொண்டனர்.

ரதத்தின் முன்னும் பின்னும் காவலுக்குச் சென்று கொண்டிருந்த நான்கு குதிரை வீரர்களும், வேகமாக தங்கள் குதிரையை செலுத்திவந்து அவர்களருகில் இறங்கினர். கங்கா, காவிரியும் ரதத்தை விட்டிறங்கி அங்கு வந்துவிட்டனர்.

''அரசகுமாரியாரே! தாங்கள் இவரின் மகள் தான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை தான். ஆனால், நீங்கள் மேக நாட்டின் இளவரசியாக பட்டம் சூட்டப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். நீங்கள் எப்போது எங்கு இருக்கிறீர்களோ, அங்குள்ள சட்ட திட்டங்களை நீங்கள் மதித்து நடக்க வேண்டும். தயவுசெய்து உடனே ரதத்தில் ஏறி குருகுலம் செல்லுங்கள்!'' என்று கூறினர் காவலுக்கு வந்திருந்த குதிரை வீரர்கள்.

''என் தந்தையை பிரிந்து என்னால் வாழ முடியாது. அரசபோகமும், அரண்மனை வாழ்வும் எனக்கு வேண்டாம். பகட்டும், பட்டாடையும், பொன்னும், வைரமும் வேண்டாம். ஏழையான என் அப்பா தான் எனக்கு வேண்டும். அவர் எனக்கு போடும் கால் வயிறு, அரை வயிறு சோறு போதும். அந்த கந்தலாடைகள் போதும்!'' என்று பொன்னனை கட்டியணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக்கியபடி கூறினாள் பூங்குழலி.

குதிரை வீரர்களுக்கு, தகப்பனையும், மகளையும் பிரிக்க மனம் கஷ்டப்பட்டது. ஆனாலும், தங்களுக்கு இடப்பட்டிருக்கும் பணியை நிறைவேற்றியாக வேண்டுமே! அதில் தவறக்கூடாதே! தவறினால் அரசக் கோபத்துக்கு ஆளாக நேரிடுமே! அது சிறைச்சேதம் வரை கொண்டு போய்விட்டால்?

கங்கா, காவிரி துணையோடு, பூங்குழலியை பொன்னனிடமிருந்து பிரித்து அவளை ரதத்தில் ஏற்றி குருகுலத்துக்கு அழைத்துச் சென்றனர். பொன்னன் நடுவீதியில் தன்னந்தனியாக விடப்பட்டான். வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டான்.

அப்போது அவனருகில், ஒரு வெண் புரவி வந்து நின்றது. அதில் அமைச்சர் அறிவுமதி உட்கார்ந்திருந்தார்.

''அமைச்சர் அவர்களே! என் மகளைப் பிரிந்து என்னால் ஒருநாள் கூட இருக்க முடியவில்லை. அவளுக்கு ஒரு ராஜயோகம் வந்திருக்கிறது என்று நான் அனுபவித்து வந்த சந்தோஷத்தை இந்த பிரிவு தகர்த்தெறிந்துவிட்டது. எனக்கு எந்த சுகபோகமும் வேண்டாம். என் மகள் பூங்குழலி மட்டும் எனக்கு கிடைத்தால் போதும்!'' என்று அமைச்சர் அறிவுமதியிடம் கெஞ்சிக் கேட்டான் பொன்னன்.

பொன்னனின் பேச்சைக் கேட்டதும், பூங்குழலியை எப்படி ஒழித்துக்கட்டலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த அமைச்சர் அறிவுமதிக்கு, இந்த பொன்னான வாய்ப்பை தவற விட்டுவிடக் கூடாதென்று தோன்றியது.

''உனக்கு உன் மகள் பூங்குழலி மீண்டும் கிடைக்க வேண்டும். அவ்வளவு தானே பொன்னா?''

''ஆம் அமைச்சர் பெருமானே!'' என்றான் பொன்னன்.

''பூங்குழலி உன்னை வந்து அடைந்து விட்டால், என்ன செய்வாய் பொன்னா?''

''நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்கிறேன் அமைச்சர் பெருமானே!'' என்றான் பொன்னன்.

''நீ உன் மகள் பூங்குழலியை அழைத்துக்கொண்டு இந்த மேகநாட்டை விட்டுச் செல்ல வேண்டும். எம் வீரர்கள், உங்கள் இருவரையும் இந்நாட்டின் எல்லைக்கப்பால் கொண்டுபோய் விட்டுவிடுவர்!''

''உத்தரவு அமைச்சர் பெருமானே!'' என்றான் பொன்னன்.

''எவரிடமாவது ஒருவேளை நீயும், உன் மகளும் சிக்க நேர்ந்தால், 'அவளால் என்னைப் பிரிந்து இருக்க முடியவில்லை. என்னைத் தேடி என்னிடம் வந்துவிட்டாள்' என்று நீ சொல்ல வேண்டும் பொன்னா!''

''சொல்கிறேன் அமைச்சர் பெருமானே!'' என்றார் பொன்னன்.

''பூங்குழலி அரண்மனையில் இல்லை, வெளியேறிவிட்டாள் என்பது தெரிந்ததும், அரசரும், அரசியும் துடித்துப் போவர். கண்ணீர்விட்டு கதறுவர். நான் அவர்களிடம் என்ன சொல்வேன் தெரியுமா பொன்னா?''

அமைச்சர் அறிவுமதியையே பார்த்தான் பொன்னன்.

''நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் கொண்டு வந்து வைத்தாலும், அது வாலை குழைத்துக் கொண்டு வெளியே தான் ஓடும். அதன் இயல்பு அது. பூங்குழலி ஏழையானாலும், சுதந்திரத்தின் சுகத்தை நன்றாக அனுபவித்தவள். அவளால் அரண்மனையின் சட்ட திட்டங்களுக்கும், நியதிகளுக்கும் உட்பட்டு இருக்க முடியவில்லை. அதுதான் அரண்மனையை விட்டு ஓடிவிட்டாள். கவலைப்படாதீர்கள் அரசே... இதுவும் ஒரு நன்மைக்குத்தான் என்று சொல்வேன்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''அரசர் அதை நம்புவாரா அமைச்சர் பெருமானே?'' என்று கேட்டான் பொன்னன்.

''சொல்கிற விதத்தில் சொன்னால், கேழ்வரகில் நெய் ஒழுகுகிறது என்று சொன்னால் அதைக்கூட நம்பிவிடுவர். நீ உன் இருப்பிடத்துக்குச் செல். அங்கு உனக்கு பொன்னும், பொருளும் மூட்டை மூட்டையாக காத்திருக்கும். என் வீரர்கள், பூங்குழலியின் கண்களைக் கட்டி உன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பர். பொன்னையும், பொருளையும் உன் மகளையும் அழைத்துக்கொண்டு, இந்த மேகநாட்டை விட்டு வெளியேறிவிடு...

''பிள்ளை பாசத்தால் துடிதுடிக்கும் உன்னிடம், பூங்குழலி இன்னும் சிறிது நேரத்தில் வந்து சேர்வாள். உனக்கு உதவி செய்கிற என்னை நீ காட்டிக் கொடுத்தால், அடுத்த விநாடியே உங்கள் இருவரது தலைகளும் மண்ணில் உருளும்!'' என்றார் அமைச்சர் அறிவுமதி.

''உத்தரவு அமைச்சர் பெருமானே! தங்களிடம் நான் மிகவும் நன்றியுள்ளவனாகவே நடந்து கொள்வேன்!'' என்று சொல்லிவிட்டு சென்றான் பொன்னன்.

தன் மெய்காப்பாளர்களில் நம்பிக்கையான ஒருவனை அழைத்து, ''அரண்மனை பூங்காவில், பூங்குழலி பந்து விளையாடிக் கொண்டிருப்பாள். அவள் வாயில் துணியை அடைத்து, கண்களை கட்டி தூக்கிச்சென்று, குமணன்சாவடியில் தங்கியிருக்கும் அவன் தகப்பன் பொன்னனிடம் சேர்ப்பித்து, அவர்களிருவரையும் நம் நாட்டின் எல்லைக்கு அப்பால் கொண்டு விட்டுவா... நிறைய செல்வங்களையும் எடுத்துச்சென்று அந்த பொன்னனிடம் கொடு!'' என்று உத்தரவிட்டார் அமைச்சர் அறிவுமதி.

''உத்தரவு அமைச்சர் பெருமானே!'' என்று சொல்லிவிட்டுச் சென்ற மெய்க்காப்பாளன், சிறிது நேரத்தில் திரும்பி வந்தான்.

''அமைச்சர் பெருமானே! என் மகளோடு வாழத்தான் ஆசைப்பட்டேன். ஆனால், சிறிது யோசித்த பிறகு அவளுக்கு கிடைத்த பொற்கால வாழ்க்கையை, எதிர்காலத்தை நான் ஏன் பறிக்க வேண்டும்... இது எத்தனை பெரிய முட்டாள்தனம் என்ற எண்ணம் வந்தது. அதனால்...'' என்று ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு, நம் நாட்டை விட்டே போய்விட்டான் பொன்னன். அரசகுமாரியை பூங்காவிலேயே விட்டுவிட்டு வந்துவிட்டேன்!'' என்றான் மெய்காப்பாளன்.

(- தொடரும் )

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us