தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி! (18) - சரண்யா

பூங்குழலி! (18) - சரண்யா

பூங்குழலி! (18) - சரண்யா


PUBLISHED ON : ஜூலை 15, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 15, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: இளவரசி பூங்குழலி காணாமல் போய் பல மாதங்கள் ஆனது நாடே துக்கத்தில் இருந்தது. இனி-

''நாளை முதல் நம் நாட்டின் ஒவ்வொரு நகரத்தின், ஒவ்வொரு கிராமத்தின் மூலை முடுக்கெல்லாம் சென்று பூங்குழலியை தேடுவோம் புலந்திரா. பூங்குழலி கிடைப்பாள்... கிடைத்து விடுவாள். கவலைப்படாதே!'' என்று புலந்திரனுக்கு ஆறுதல் கூறிவிட்டு வந்து விட்டானே தவிர, பேரறிவாளனுக்கு மன நிம்மதியே இல்லை.

பூங்குழலி காணாமல்போனது தற்செயலாக நிகழ்ந்த ஒரு நிகழ்வல்ல. அது திட்டமிடப்பட்ட ஒரு சதியாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பூங்குழலியைப் பற்றி ஒரு சிறு துப்புகூட கிடைக்காமலிருக்காதே!

அமைச்சரின் அரண்மனையினுள் நுழைந்தான் பேரறிவாளன்.

''தந்தையே... தந்தையே!'' என்று அழைத்தான்.

''அமைச்சர் பெருமான், அரசர் மாளிகைக்கு சென்றுள்ளார் மந்திரிகுமாரரே!'' என்றார் அமைச்சர் அறிவுமதியின் பாதுகாவலர் ஒருவர்.

தன் தந்தை சில வருடங்களாகவே அமைதியான மனநிலையில் இல்லை என்பதையும், அடிக்கடி அவர் தனிமையிலமர்ந்து எதைப் பற்றியோ யோசித்துக் கொண்டிருப்பதையும் கண்டுள்ளான் பேரறிவாளன்.

பூங்குழலியை பட்டத்து யானை தேர்ந்தெடுத்ததையும், அந்த போட்டியில் தான் வெற்றி அடைய முடியாமல், தன் உருவத்தையும், தோற்றத்தையும் ஏன் மாற்றிக் கொண்டேன் என்று தான் கூறிய விளக்கத்தை தன் தந்தை ஏற்கவில்லை என்பதையும், பூங்குழலியின் கல்வி, போர்ப் பயிற்சி, நீதி பரிபாலன நிகழ்ச்சிகளில் அவர் ஆர்வமே காட்டாமல் இருந்ததும் ஒன்றின் பின் ஒன்றாய் நினைவுக்கு வந்தது பேரறிவாளனுக்கு.

எல்லாவற்றையும் வைத்து பார்க்கும்போது, சிம்மாசனத்தை கவர்ந்து, தான் அதில் அரசராகவோ அல்லது அவர் மகனான நானோ சிம்மாசனத்தில் அமர வேண்டுமென்பதில் தந்தை மிகவும் ஆர்வம் காட்டி வந்தார் என்பதை எல்லாம் யோசித்து பார்த்தபோது, பூங்குழலி திடீரென்று காணாமல் போய்விட்டதற்கு அவர் போட்ட ஏதோ ஒரு திட்டம் தான் காரணமாக இருக்க வேண்டுமென்று தோன்றியது பேரறிவாளனுக்கு.

அவன் நினைத்ததை ஆமோதிப்பது போல் பட்சி உலகத்திலிருந்து ஒரு கிளியின், 'கீ... கீ...' என்ற குரல் கேட்டது.

தனது தந்தையின் பட்சியுலகத்தில், மைனா, குருவி, செம்போத்து, இரட்டைவால் குருவி, அக்காப்பறவை, நாகணவாய் பறவை போன்ற பறவைகள் தானே உண்டு. இப்போது புதிதாக ஒரு கிளியின் குரல் கேட்கிறதே என்று நினைத்தபடி, பட்சிகள் உலகத்தினுள் நுழைந்தான் பேரறிவாளன்.

அழகான கிளி ஒன்று கூண்டில் அடைக்கப்பட்டிருந்தது. அது அவனை பார்த்ததும் உற்சாகமாக பறக்க ஆசைகொண்டு சிறகை 'படபட'வென அடித்துக்கொண்டது. வெளியே வரமுடியவில்லை. பலமுறை முயன்றும் அது தோல்வியில் முடியவே, அது சோர்ந்துபோய் ஊஞ்சல் கம்பியில் உட்கார்ந்தது. அதைப்பார்க்க பேரறிவாளனுக்கு பரிதாபமாகவும், இரக்கமாகவும் இருந்தது.

காட்டிலோ அல்லது நாட்டிலோ எவ்வளவு சுதந்திரமாக வான வெளியில் தன்னிஷ்டம் போல பறக்க வேண்டிய பறவை இந்த கிளி! இதன் சுதந்திரத்தை கட்டுப்படுத்த இதை கூண்டிலடைத்து இருப்பதும் எவ்வளவு கொடுமை!

''வெளியில் பறந்து போகணுமா உனக்கு?'' என்று கேட்டபடி கூண்டினருகில் சென்றான் பேரறிவாளன்.

''ஆமாம், ஆமாம்,'' என்பது போல, 'கீச் கீச்'சென்று கத்தியது கிளி.

''பறந்து போ கிளி இஷ்டம் போல!'' என்று சொல்லியபடி கூண்டின் கதவை திறந்தான்.

அதற்காகவே காத்திருந்தது போல் கூண்டிலிருந்து 'ஜிவ்'வென்று வெளியே பறந்து வந்து பேரறிவாளனை நோக்கி, ''நன்றி, நன்றி,'' என்று கூறுவதுபோல, 'கீ... கீ,'' என்று கத்திவிட்டு, இமை இமைக்கும் நேரத்தில் சுதந்திரத்தை அனுபவித்தபடி திறந்த வான் வெளியில் சந்தோஷமாக பறந்து சென்றது அக்கிளி.

ஒரு சின்னஞ்சிறு ஜீவனை சுதந்திரக் காற்றை அனுபவிக்க கூண்டை திறந்து விட்டுவிட்டோம் என்ற மனதிருப்தியில் பேரறிவாளன் திரும்பியபோது-

''என்ன காரியம் செய்துவிட்டாய் பேரறிவாளா?'' என்று அமைச்சர் அறிவுமதியின் குரல் கேட்டது கர்ண கொடூரமாய்.

''சுதந்திரமாய் தன் இஷ்டம் போல வாழ வேண்டிய ஒரு கிளியை கூண்டிலடைத்து வைத்தீர்களே தந்தையே?''

''அதை என்ன செய்தாய் பேரறிவாளா?''

''கூண்டைத் திறந்துவிட்டேன். அடிமையாக இருந்த கிளி சுதந்திரம் பெற்று வானில் பறந்து சென்றுவிட்டது தந்தையே!'' என்றான் பேரறிவாளன்.

''அது கிளியல்ல பேரறிவாளா?''

''கிளியல்லாமல்?''

''பூங்குழலியடா...''

''கிளி - பூங்குழலியா? என்னப்பா சொல்கிறீர்கள்? நீங்கள் போட்ட அந்த திட்டம் என்னால் நாசமாகிவிட்டது என்கிறீர்கள்?'' என்று கேட்டான் பேரறிவாளன்.

''பூங்குழலியை ஒரு அரசகுமாரியாக்க அரசர் போட்ட திட்டங்களை எல்லாம் நான் முறியடிக்க முயற்சி செய்தேன். என் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. எப்படியாவது உன்னை மேகநாட்டு சிம்மாசனத்தில் இந்நாட்டு அரசனாக அமரச் செய்துவிட வேண்டுமென்று திட்டம் போட்டேன். அதற்கு இடைஞ்சலாக இருந்த பூங்குழலியை, ஒரு மந்திரவாதியின் உதவியால் கிளியாக மாற்றி கூண்டிலடைத்து வைத்தேன்.

''பூங்குழலியை கண்டுபிடித்து கொண்டு வருபவர்களுக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பதாக அரசரை சொல்ல வைத்தேன். சிறிது நாள் கழித்து இக்கிளியை பூங்குழலியாக மாற்றி அவளை அழைத்துக் கொண்டு நீ அரசர் முன் செல்ல வேண்டுமென்று தீர்மானித்திருந்தேன்.

''ஆனால், சுதந்திரம் அது இதுவென்று சொல்லி, நான் கஷ்டப்பட்டு கிளியாக மாற்றியிருந்த பூங்குழலியை வானில் பறக்கவிட்டு விட்டாய்!'' என்று தலையில் அடித்துக்கொண்டு அழுது புலம்பினார் அமைச்சர் அறிவுமதி.

''பூங்குழலி... பூங்குழலி...'' என்று கூவிக்கொண்டு வானத்தை பார்த்தபடி வெளியே ஓடினான் பேரறிவாளன்.

ஒரு ஆலமரத்தடியில் வந்து நின்றான் அவன். ஆலமரத்தை அண்ணாந்து பார்த்தான். 'கீ... கீ' என்று கத்திக்கொண்டு நூற்றுக்கணக்கான கிளிகள் அங்கே இருந்தன.

(- தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us