தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/பூங்குழலி (19) - சரண்யா

பூங்குழலி (19) - சரண்யா

பூங்குழலி (19) - சரண்யா


PUBLISHED ON : ஜூலை 22, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 22, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை: கிளியாக மாறிய பூங்குழலியை தேடிச்சென்றான் பேரறிவாளன். இனி-

ஆலமரத்தில் நூற்றுக்கணக்கான கிளிகள் அமர்ந்து, 'கீ... கீ' என்று கத்திக் கொண்டிருந்தன. இதில் எது பூங்குழலி கிளி? அதற்கென்று வித்தியாசமான எந்தவொரு அடையாளத்தையும் பார்க்க முடியவில்லையே? எல்லா கிளிகளும் பச்சையாக இருக்கின்றன. கழுத்தில் சிவப்பு வளையங்கள் கொண்டுள்ளன. சிவந்த வளைந்த மூக்கை கொண்டுள்ளன. இவற்றினிடையே பூங்குழலி கிளியை கண்டுபிடிப்பது எப்படி சாத்தியம்?

பேரறிவாளன், 'கிளி வடிவில் பூங்குழலி இருக்கிறாள் என்பது தெரிந்தும், அவளை கண்டுபிடிக்க முடியாதபடி இருக்கிறோமே!' என்றெண்ணினான்.

அப்போது, ''பூங்குழலி... எங்கேயம்மா போயிட்டே, எங்களையெல்லாம் விட்டுவிட்டு!'' என்று அழுது புலம்பியபடி அங்கே வந்தான் புலந்திரன்.

கிளி கூட்டத்திலிருந்து ஒரு கிளி 'சர்'ரென்று கீழ்நோக்கிப் பறந்து வந்து அவன் இடது தோளில் உட்கார்ந்து, 'கீ... கீ' என்று சுத்திற்று. அதுதான் பூங்குழலி கிளி என்பது உறுதியாயிற்று பேரறிவாளனுக்கு.

''புலந்திரா! உன் தோளில் உட்கார்ந்திருக்கும் கிளியை கெட்டியாகப் பிடி!'' என்று கூறியபடி ஓடிவந்தான் பேரறிவாளன்.

அப்போது மரந்திலிருந்த மற்ற கிளிகள் எல்லாம், கீழ்நோக்கி பாய்ந்து பறந்து வந்து பூங்குழலியை மீட்டுச் செல்ல அதை கொத்தத் தொடங்கின.

வலி தாள முடியாமல் பூங்குழலி கிளி, ஆலமரத்தின் கிளையை நோக்கிப் பறந்தது. மற்ற கிளிகளும், அதை பாதுகாப்பது போல் அதைச் சுற்றி கிளைகளிலும் அமர்ந்து கொண்டன.

''பேரறிவாளா! என் தோளில் வந்தமர்ந்து, 'கீ... கீ' என்று கத்திய ஒரு கிளியை மட்டும், 'கெட்டியாகப் பிடி... கெட்டியாகப்பிடி' என்று ஏன் சொன்னாய்?'' என்று கேட்டான் புலந்திரன்.

''அந்த கிளிதான் பூங்குழலி புலந்திரா...'' என்றான் பேரறிவாளன்.

''என்ன சொல்கிறாய் பேரறிவாளா? பூங்குழலி - கிளியாக மாறியிருக்கிறாள் என்றா சொல்கிறாய்?'' என்று ஒன்றும் புரியாதவனாக கேட்டான் புலந்திரன்.

''ஆம் புலந்திரா! அந்த கிளிதான் பூங்குழலி. வேண்டுமென்றால், மேலே அண்ணாந்து பார்த்து உரத்த குரலில், 'பூங்குழலி, பூங்குழலி' என்று கூப்பிட்டுப் பார்!'' என்றான் பேரறிவாளன்.

இரு கைகளையும் வாய்முன் குவித்து, தன் சக்தியை எல்லாம் திரட்டி ஆலமரத்தில் அமர்ந்திருக்கும் கிளிகளைப் பார்த்து, ''பூங்குழலி, பூங்குழலி,'' என்று கூப்பிட்டான் புலந்திரன்.

ஆலமரத்திலிருந்து ஒரு கிளி மட்டும், அவன் குரல் கேட்டு, கிளையைவிட்டு கீழ்நோக்கிப் பறந்து வந்தது.

அது புலந்திரன் தோளை அடையும்முன், மற்ற கிளிகள் எல்லாம் மின்னல் வேகத்தில் கீழ்நோக்கிப் பறந்து வந்து, பூங்குழலி கிளி, புலந்திரனை அடைந்து விடாமல் வழிமறித்து, அதை மரக்கிளைக்குச் செல்லும்படி விரட்டிச் சென்றன.

''பேரறிவாளா! நீ சொன்னது சரிதான்... பூங்குழலி தான் அந்த கிளி. அவள் ஏன் கிளியாக மாற்றப்பட்டிருக்கிறாள்? மாற்றியது யார்? மாற்றியது ஏன்?'' என்று கேள்விகளை ஒன்றின்மீது ஒன்றாக அடுக்கிக் கேட்டான் புலந்திரன்.

எல்லா விவரங்களையும் மறைக்காமல் புலந்திரனிடம் கூறினான் பேரறிவாளன்.

''அமைச்சரா இப்படி செய்தார்?'' என்று வியப்போடு கேட்டான் புலந்திரன்.

தொடக்கத்திலிருந்தே பூங்குழலி, ஒரு அரசக்குமாரி அந்தஸ்தை அடைந்துவிடக் கூடாது என்பதற்காக செய்த சதிகளையும், மோசடிகளையும் கூறினான் பேரறிவாளன்.

அவைகளை எல்லாம் கேட்டுவிட்டு, ஆலமரத்தை அண்ணாந்து பார்த்த புலந்திரன், ''பேரறிவாளா! பூங்குழலி கிடைத்தும் கிடைக்காமலிருக்கிறாளே! கிளி வடிவிலிருக்கும் அவளை மறுபடியும் மனித வடிவில் மாற்றுவது எப்படி?'' என்று கேட்டான் புலந்திரன்.

''முயன்றால் முடியாதது எதுவுமில்லை புலந்திரா... காலம் சற்று ஆகும், அவ்வளவுதான். பூங்குழலியை கிளியாக மாற்றிய மந்திரவாதியைத் தேடி என் தந்தை செல்வார். அவனிடம் பூங்குழலி கிளியை கண்டுபிடித்து தன்னிடம் சேர்க்கச் சொல்லி கேட்பார். அந்த நிபந்தனையுடன் தான் பூங்குழலியை கிளியாக மாற்றித்தர என் தந்தை கேட்டிருப்பார்.

''அதனால், காலதாமதம் செய்யாமல் என் தந்தையை கண்காணிக்கிறேன். அவரறியாமல் அவர் பின் சென்று தொடர்கிறேன். என்ன செய்கிறார் என்பதை நோட்டமிட்டு, என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து, பூங்குழலியை பழைய பெண் வடிவில் மீட்டு வருகிறேன்?'' என்றான் பேரறிவாளன்.

''சிரமமான பணியில் ஈடுபடப் போகிறேன் என்கிறாய் பேரறிவாளா? உனக்கு உதவியாக நானும் வருகிறேன்!'' என்றான் புலந்திரன்.

மரத்திலிருந்து ஒரு கிளி மட்டும் அவனருகில் வந்து, ''நீ போகாதே... இங்கேயே இரு...'' என்று சொல்வது போல இறக்கைகளை, 'படபட'வென அடித்துவிட்டு மேலே எழும்பிச் சென்றது.

''புலந்திரா! இப்போது வந்து சென்றது தான் பூங்குழலி கிளி. அதற்கு உன்னைப் பிரிய மனமில்லை. நீ அது இருக்கிற இடத்திலேயே இருக்க வேண்டுமென விரும்புகிறது. மற்ற கிளிகளால் அதற்கு துன்பம் ஏற்படாமலிருக்க வேண்டுமென்றால், நீ இங்கேயே இருக்க வேண்டும் என்று விரும்புகிறது. நீ இங்கேயே இரு. பூங்குழலி கிளி எங்கும் பறந்து சென்று விடாமலிருக்க, அந்த மந்திரவாதி நிறைய கிளிகளை பாதுகாப்பு படை போல அமைத்திருக்கிறான் என்று நினைக்கிறேன்,'' என்று கூறிய பேரறிவாளன், அரண்மனையை நோக்கிப் புறப்பட்டான்.

அப்போது அமைச்சர் அறிவுமதி, ஒரு மர வெட்டிபோல் வேடமணிந்து, தலையில் துண்டைக் கட்டி, தோளில் கோடரியைப் போட்டு காட்டுப் பக்கம் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தான் பேரறிவாளன்.

அவரறியாமல் அவரை பின் தொடர்ந்தான் அவன். அமைச்சர் அறிவுமதி, காட்டினுள் சென்று ஒரு இடத்தில் நின்றார். அங்கு நிலம் இரண்டாக பிளவுப்பட்டிருந்தது. அதன் ஒரு பக்கம் பார்த்த அமைச்சர் அறிவுமதி திகைத்து நின்றார்.

(- தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us