PUBLISHED ON : ஜூலை 29, 2011

இதுவரை: மந்திரவாதியைத் தேடிச் சென்றார் அமைச்சர். அவரை மறைமுகமாகப் பின்தொடர்ந்தான் பேரறிவாளன். இனி-
பூமி அதிர்ச்சியில், காட்டு பூமி இரண்டாக பிளந்து பயங்கரமாக காட்சியளித்தது. மரங்கள் வேரோடு சாய்ந்திருந்தன. மந்திரவாதி தங்கியிருந்த குகையை காணவில்லை. அது இருந்த இடத்தில் ஒரு பள்ளம்தான் இருந்தது. அதனுள் எட்டிப் பார்த்தார் அமைச்சர் அறிவுமதி.
பின்னால் சற்று தள்ளி நின்று, அவரறியாமல் பேரறிவாளனும் பார்த்தான். பள்ளத்தில் ஒரு எலும்புக் கூடு மட்டுமே கிடந்திருந்தது. அதன் சதைப் பகுதிகளை புழுக்கலும், பறவைகளும், மிருகங்களும் உண்ட பின் வெறும் எலும்புக்கூடு மட்டும் இருந்தது. அதன் கையிலும், காலிலும் போடப்பட்டிருந்த உலோக கங்கணங்களும், காப்பும், மண்ணால் அரிக்க முடியாமல் அப்படியே இருந்தன.
அவைகளை அடையாளமாகக் கொண்டு பார்த்தால், எலும்புக்கூடு மந்திரவாதியினுடையதுதான் என்பது புரிந்தது அமைச்சர் அறிவுமதிக்கு.
மந்திரவாதி மரணமடைந்து விட்டான் என்பது கண்கூடாக தெரிந்தது. ஒரு பொருளை வேறொரு பொருளாகவும், ஒருவரை வேறொரு உருவாகவும், கூடுவிட்டு கூடு பாயும், அஷ்டமா சித்திகளை அடைந்த மந்திரவாதி மரணமடைந்து விட்டான். அவனோடு, அவன் கற்ற வித்தைகளும், மாய மந்திரங்களும் மரணமடைந்து விட்டன.
பூங்குழலியை கிளியாக மாற்றியவனுக்குத்தான், அவளை மீண்டும் பெண் வடிவில் மாற்றவும் தெரியும். இரண்டும் தெரிந்தவன் போய் விட்டான். இனி பூங்குழலி இவ்வுலகில் கிளியாக மட்டுமே பறந்து திரிய முடியும். மீண்டும் மனித வடிவம் பெற முடியாது என்று நினைத்ததும், அமைச்சர் அறிவுமதி, தன் மகன் அரசனாக வேண்டுமென்ற ஆசையில், பேராசையில், செய்யக்கூடாததை எல்லாம் செய்து, துள்ளி விளையாடுகிற இளம் பெண்ணான பூங்குழலியை, இனி பழைய உருவை அடைய முடியாத கிளியாக மாற்றி விட்டோமே. எவ்வளவு பெரிய பாவி நான்!'' வாய்விட்டு அழுது புலம்பி தனக்குத்தானே ஆறுதல் கூறிக் கொண்டார் அமைச்சர் அறிவுமதி.
இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த பேரறிவாளன், அவர் வாய்விட்டு கூறிய ஒவ்வொன்றையும் தன் நினைவில் நிறுத்திக் கொண்டான்.
அமைச்சர் அறிவுமதி, பெருத்த ஏமாற்றத்துடனும், தளர்ந்த நடையுடனும் அங்கிருந்து அரண்மனை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
அவர் அங்கிருந்து சென்று விட்டார் என்பதை உறுதி செய்துகொண்ட பேரறிவாளன், மறைவிடத்திலிருந்து, மந்திரவாதியின் எலும்புக்கூடு கிடக்கும் இடத்திற்கு வந்தான். சுற்றும் முற்றும் பார்த்தான். நிலப்பிளவு ஏற்பட்டபின், அதில் உயிர் தப்பிய சில ஜீவராசிகள் அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தன.
மண்ணை கிளறிக் கொண்டு ஒரு புழு வெளியே வந்தது. அதன் உடல் பளபளப்பாக இருந்தது. அஷ்டமா சித்திகளைப் பெற்றவன் மந்திரவாதி என்றும், வரப்போவதை ஊகிப்பவனென்றும், கூடுவிட்டு கூடு பாயும் அபார சக்தியைப் பெற்றவன் என்றும், அவன் தந்தை, மந்திரவாதியின் எலும்புக் கூட்டைப் பார்த்து கூறி புலம்பினாரல்லவா?
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நிலம் பிளந்து, அதில் சிக்கி தான் மரணமடைய நேரும் என்று உள்வாதம் நேரும் முன்பே யூகித்து, மந்திரவாதி ஏதாவது ஒரு இறந்த பூச்சி, புழு, பறவையின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்திருக்கலாமல்லவா? இந்தப் புழு ஒருவேளை மந்திரவாதி கூடுவிட்டு கூடு பாய்ந்த ஜீவனாக இருக்குமோ?
அதனருகில் சென்று மண்டியிட்டு உட்கார்ந்து கொண்ட பேரறிவாளன், அந்த புழுவையே கண் கொட்டாது பார்த்தான். அதுவும் அவனைப் பார்த்தது; பிறகு சுற்றுமுற்றும் பார்த்தது.
''என்ன பார்க்கிறாய் புழுவே?'' என்று கேட்டான் பேரறிவாளன்.
''ஏதாவது இறந்த பறவையின் உடல் கிடக்கிறதா என்று பார்க்கிறேன்!'' என்றது புழு.
''ஆனானப்பட்ட மந்திரவாதியின் பிரமாண்ட உடலையே மண் அரித்து சாப்பிட்டுவிட்டது... பறவையின் இறந்த உடல் மட்டும் எப்படி கிடைக்கும்?'' என்றான் பேரறிவாளன்.
புழு அவனைப் பார்த்து கேட்டது, ''மனிதனே! ஒரு புழு பேசுகிறதே என்று உனக்கு ஆச்சரியமாக இல்லையா? நிலம் பிளந்து எல்லாம் காட்டில் தலைகீழாக மாறியிருக்கும்போது, இந்த ஒரு புழு மட்டும் எப்படி தப்பி பிழைத்து உயிர் வாழ்கிறது; பேசுகிறது என்று உனக்கு வியப்பாக இல்லையா?''
''இருக்கிறது. ஆனால், எனக்கு ஒரு சந்தேகமும் இருந்ததால், என் வியப்பை நான் வெளியில் காட்டிக்கொள்ளவில்லை,'' என்றான் பேரறிவாளன்.
''என்ன சந்தேகம் அது?'' என்றது புழு.
''காட்டில் ஏற்பட்ட பேரிடரால், பூதாகரமான மந்திரவாதியே இறந்து எலும்புக்கூடாகி விட்டான். சின்னஞ்சிறிய ஜீவனான நீ எப்படி அதிலிருந்து தப்பினாய்?''
''காட்டில் பேரிடர் ஏற்படப் போகிறது என்பதை, ஐந்தறிவுள்ள மிருகங்கள், பறவைகள், பேரிடர் நிகழும் முன்பே இவ்விடம் விட்டு வேறிடம் சென்று விட்டன. மந்திரவாதியின் உடலில் மரணம் விதிக்கப்பட்டிருப்பது எனக்கு முன்பே தெரியும். அதனால், பேரிடர் நிகழும் முன்பே இறந்துவிட்டிருந்த ஒரு புழுவின் உடலில் கூடுவிட்டு கூடு பாய்ந்து சென்று, மந்திரவாதியின் பூத உடலை விட்டு பிரிந்து விட்டேன்; மண்ணுக்குள் சென்று மறைந்துவிட்டேன்.
''பேரிடர் நிகழ்ந்து, எல்லாம் தலை கீழாகி, சகஜ நிலை கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருவதைப் பார்த்து, மண்ணிலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கிறேன்,'' என்றது புழு.
''இளவரசி பூங்குழலியை கிளியாக மாற்றிய மந்திரவாதி நீ தானா புழுவே?''
''ஆமாம்!'' என்றது புழு.
''அப்படி என்றால், கிளியாகிவிட்ட பூங்குழலியை மீண்டும் பெண்ணாக மாற்றவும் உன்னால் முடியுமல்லவா?''
''நிச்சயமாக முடியும். ஆனால்...''
''என்ன ஆனால்?'' என்று அச்சமுடன் கேட்டான் பேரறிவாளன்.
''இந்த புழுவின் உருவில் என்னால் அதை செய்ய முடியாது!'' என்றது புழு.
''பிறகு எந்த உருவில் செய்ய முடியும்?''
''மனித உருவில்!'' என்றது புழு.
புழுவாக இருப்பவர் மனித வடிவை அடைவது எப்படி சாத்தியம்?
''மனித உருவை நான் எப்படி அடைய முடியும் என்று திகைத்துப் போய்விட்டாயா மந்திரிகுமாரா?''
''நான் மந்திரிகுமாரனா?''
''ஆமாம்!''
''நான் மந்திரி குமாரன் என்பது உனக்கு எப்படித் தெரியும்?''
''அமைச்சர், தன் மகன் அரசனாக, பூங்குழலியை கிளியாக மாற்ற வேண்டும் என என்னிடம் வேண்டினார். அப்போது நான் ஒரு ஜோசியனைப் போல உருமாறி உன் அரண்மனைக்கு வந்திருக்கிறேன். அப்போது அமைச்சர் உன்னை எனக்கு காட்டி, 'இவன் என் குமாரன் பெயர் பேரறிவாளன்' என்று கூறினார்.
''உன் பெயர் பேரறிவாளன் என்பதும், நீ அமைச்சரின் மகன் தான் என்பதும் உண்மைதானே?'' என்றது புழு.
''உண்மைதான்! நாம் இப்போது மிகவும் நெருங்கி வந்துவிட்டோம் புழுவே!'' என்று மகிழ்ச்சியுடன் கூறினான் பேரறிவாளன். அப்போதே கிளியாக இருக்கும் பூங்குழலியை எழில் மங்கையாக மாற்றிவிடக் கூடிய சாத்ய கூறுகள் தெரியத் தொடங்கிவிட்டது போலிருந்தது அவனுக்கு.
''புழுவே! நீ மனித வடிவம் பெறவும், அதன் மூலம், உன் சித்திகளால் கிளியாக மாறிவிட்டிருக்கும் எங்கள் இளவரசி பூங்குழலியை மீண்டும் பெண்ணாக வடிவம் பெறவும் என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டான் பேரறிவாளன்.
''நான் புழுவின் உருவிலிருந்து மனித உருவாக மாற வேண்டும்! அதற்கு, அப்போது தான் இறந்த ஒரு மனிதனின் உடல் வேண்டும்!'' என்றது புழு.
''அப்போது தான் இறந்த மனிதனின் உடலா?''
''ஆமாம்! என்னை இலைகளில் பொதித்து, பூங்குழலி கிளியாக மாறி இருக்கும் ஆலமரத்துக்கு எடுத்துச் செல். அங்கு அப்போது தான் இறந்த ஒரு மனிதனின் உடம்பு இருக்க ஏற்பாடு செய்!'' என்றது புழு.
ஏதோ ஒரு தீர்மானத்தை நொடியில் செய்துவிட்ட பேரறிவாளன், பெரிய இலைகளை பறித்து, முட்களால் அதை ஒரு பெட்டி போலச் செய்து, அதனுள் புழுவை எடுத்துவிட்டுக் கொண்டான். அது உண்பதற்கு சில பச்சிளம் இலைகளையும் பறித்து போட்டுக் கொண்டான்.
பேரறிவாளன் புறப்பட்டான். அவன் மனக்கண்ணில், கிளியாக இருக்கும் பூங்குழலி பழைய வடிவம் பெற்று, புலந்திரனுடன் மாலையும் கழுத்துமாக நிற்கும் காட்சி தெரிந்தது.
(-20 தொடரும்)
