
மன்னருக்கு தேவதை போல, அழகான மகள் இருந்தாள்; அவள், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினாள். வரப்போகும் கணவர் சமயோசிதம் மிக்கவராக இருக்க வேண்டும் என விரும்பினாள்.
பலநாட்டு இளவரசர்கள் அவளை மணமுடிக்க ஆவலாக வந்தனர்.
அவர்களுக்கு ஒரு பரீட்சை வைத்தாள் ராஜகுமாரி. மிக சாதாரண தேர்வு தான்.
அதாவது, இளவரசி போல அவளது தோழிகளும் அலங்கரித்தபடி பேரவையில் நின்றனர்.
அனைத்து பெண்களும், நடை, உடை, அலங்காரங்களில் ஒரே மாதிரி தெரிந்தனர். இளவரசியை அடையாளம் காண இயலவில்லை; தோல்வியை ஒப்புக் கொண்டு நாட்டிற்கு திரும்பினர் இளவரசர்கள்.
மன்னரின் படையில் வீரமும், அழகும், புத்திசாலித்தனமும் நிரம்பிய போர்வீரன் இருந்தான். இளவரசி நடத்தும் தேர்வில் வெல்ல விரும்பினான். அவளை அடையாளம் காண விரும்பி, குருவிடம் வழிகாட்ட வேண்டினான்.
'குலத்தால் செய்த ஒரு பழியைக் கண்டுபிடி...' என அறிவுரைத்தார் குரு.
மன்னர் குடும்பத்தினர் குறித்து நெடுநேரம் யோசித்தான் வீரன்.
மறுநாள் -
இளவரசி, தோழியருடன் இருந்த பேரவைக்கு சென்றான் வீரன்.
கையில் பொற்காசுகள் அடங்கிய பை ஒன்றை வைத்திருந்தான். அது, திறந்து இருந்தது.
'மதிப்புமிக்க இளவரசிக்கு வணக்கங்கள்...'
கூறியபடி, பையிலிருந்த தங்க காசுகளை நழுவ விட்டான் வீரன்.
அவை, பேரவை எங்கும் சிதறியோடின.
தோழியர், 'அடடா... தங்க நாணயங்கள்...' என, ஆச்சரியமுடன் தேடிப் பொறுக்கலாயினர்.
தோழியர் பொற்காசுகளை தேடிக் கொண்டிருக்க, எந்த பாதிப்பும் இன்றி நின்றிருந்தாள், இளவரசி. அவளை அடையாளம் கண்டு கொண்டான் வீரன்.
யுக்தியுடன் கண்டுபிடித்த வீரனை மணக்க சம்மதித்தாள் இளவரசி.
சமயோசித அறிவால் இளவரசியை மணந்து, மன்னன் ஆனான் வீரன்.
குழந்தைளே... சமயோசிதமாக செயல்பட்டால் வெற்றி தேடி வரும்.
- மல்லிகா குரு

