
மதுரை, கல்லுாரி உயர்நிலைப் பள்ளியில், 1962ல், 6ம் வகுப்பு படித்தபோது, வாரத்திற்கு ஒருநாள் நீதி போதனை வகுப்பு நடைபெறும். அதை நடத்துவதற்கு அன்று உடற்பயிற்சி ஆசிரியர் சுந்தர் வந்திருந்தார்.
வகுப்பில் நிலவிய இறுக்கத்தை போக்க, குடும்பம் மற்றும் சுயவிபரம் குறித்து கேட்டார். மவுனம் கலைத்து உற்சாகத்துடன் கூறினோம். உடன் படித்த சிவப்பிரகாசம் தாழ்ந்த குரலில், 'என் தந்தை இறந்து விட்டார்; தாய்தான் படிக்க வைக்கிறார். அவர் கழிப்பறை சுத்தம் செய்கிறார்...' என்றான். ஏளனமாக சிரித்தோம்.
கூனி குறுகி அமர்ந்திருந்தவனை தேற்றும் விதமாக, 'கழிப்பறை சுத்தம் செய்வது போற்றுதலுக்குரிய பணி; தியாக மனப்பான்மை உடையவர்களால் செய்யக்கூடியது; இதை செய்யும் உன் அன்னையை போற்றுகிறேன்...' என்றவாறு, 'தொழிலில் உயர்வு, தாழ்வு காண்பது தவறு' என புரிய வைத்தார். இறுக்கமான சூழ்நிலை கலைந்தது.
எனக்கு, 72 வயதாகிறது. வங்கி அதிகாரியாக பணி செய்து ஓய்வு பெற்றேன். எந்த தொழில் செய்பவரையும் உயர்வு, தாழ்வுடன் பார்ப்பது இல்லை. இந்த எண்ணத்தை மனதில் ஆழமாக பதிய வைத்த ஆசிரியரின் நினைவை போற்றுகிறேன்.
- ஜி.எஸ்.ஸ்ரீனிவாசன், பாலக்காடு.
தொடர்புக்கு: 94436 08688