PUBLISHED ON : ஏப் 23, 2022

மதுரை மாவட்டம், ச.மேலப்பட்டி, நாடார் உறவின் முறை மேல்நிலைப் பள்ளியில், 1980ல், 8ம் வகுப்பு படித்தேன். அறிவியல் ஆசிரியராக இருந்த மாரியப்பன் இனிமையாக பாடம் நடத்துவார். சந்தேகம் கேட்டால், கோபப்படாமல் கற்றுத்தருவார்.
வாரத்தேர்வுகள் நடத்தி பரிசு கொடுப்பார்; நேரத்தை வீணாக்காத வகையில் பயன்படுத்த அறிவுரை சொல்வார். அன்று அறிவியல் பாடத்தில் மனித உறுப்புகளை, கரும்பலகையில் வரைந்து, பெயர் குறித்தபடி, 'சந்தேகம் இருந்தால் கேளுங்கள்...' என்றார்.
பின், சட்டை, பனியனை கழற்றி போட்டபடி, நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடினார். சிறிது நேரத்தில், அவசரமாக வந்த அலுவலக உதவியாளர் அவரை எழுப்பி, 'சார்... மாவட்ட கல்வி அலுவலர் சோதனைக்கு வருகிறார். சீக்கிரம் சட்டையை மாட்டுங்க...' என்று கூறி கடந்தார்.
பதறி எழுந்தவர், நெற்றியில் கட்டை விரலால் தேய்த்தபடி சிந்தித்தார். சட்டை அணியாத, வெற்று உடம்பை காட்டி, உடல் உறுப்புகள் பற்றி எடுத்து கூறினார். இதை வெளியில் நின்றபடி கவனித்த அதிகாரி, பாராட்டி சென்றார். சமயோசிதமாக செயல்பட்டு, நல்ல பெயர் எடுத்தார் ஆசிரியர்.
எனக்கு, 54 வயதாகிறது; தனியார் வங்கியில் பணிபுரிகிறேன். அந்த ஆசிரியர் காட்டிய வழியில் சமயோசிதமாக செயல்பட்டு, சிக்கல்களில் இருந்து விடுபடுகிறேன்.
- ஜெ.பிரபு, மதுரை.
தொடர்புக்கு: 97900 61014
