தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/புரட்சி சிறுவன்! (4)

புரட்சி சிறுவன்! (4)

புரட்சி சிறுவன்! (4)


PUBLISHED ON : செப் 19, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 19, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதை: ஏழை சிறுவர்கள் மாணிக்கம், முருகன் ஒரே குடியிருப்பில் வசித்தனர். தந்தையர் குடி போதையில் கொடுமை செய்தனர். படிப்பை நிறுத்தியதால் குப்பை பொறுக்க சென்றான் முருகன். செருப்பு தைக்கும் தொழில் செய்தான் மாணிக்கம். இனி -

செருப்பு தைத்து சம்பாதித்த பணத்துடன் குடிசைக்குள் நுழைந்தான் மாணிக்கம். வாயைப் பிளந்தபடி கிடந்தார் அப்பா. கண்ணீர் கன்னங்களுடன், ''அப்பாவுக்கு கால்கள் விளங்கவில்லை... வாய் இழுத்துக் கொண்டது. பக்கவாத நோய் வந்திருக்கு...'' என, அழுதபடி விளக்கினாள் அம்மா.

'தினமும், அடித்து நொறுக்கி கொடுமை செய்தவருக்காக அழுகிறாரே' என்று வியந்தான்.

'இனி கை நீட்ட முடியாது. பணத்தை பிடுங்கி குடிக்கவும் முடியாது. படுத்தே கிடக்கட்டும்'

- அவன் மனதில் எண்ணங்கள் ஓடின. குரூர நிம்மதி குடியேறியது.

'துன்பத்திலிருக்கும் ஒருவர் மீது, கொடிய எண்ணம் கொள்ளலாமா' என்று எதிர் கேள்வி மனதில் எழுந்தது. மறுகணமே குரலை தணித்து, ''அழாதீங்க அம்மா... அரசு மருத்துவமனையில் சேர்த்து வைத்தியம் பார்க்கலாம்; ஆனால் ஒன்று...'' என்றபடி நிறுத்தினான்.

கண்களை துடைத்து ஏறிட்டாள்.

மேலும் குரலை தாழ்த்தி, ''அரசு மருத்துவமனையில் சேர்த்து விட்டு எங்கேயாவது போய்விடலாம். அவர் அல்லாடட்டும்...'' என்றான்.

குரலில் வெறுப்பும், கசப்பும் மண்டிக்கிடந்தன.

அம்மாவின் விழிகள் விரிந்தன!

''இப்படியா பேசுவது... ஆதரவற்ற நிலையில் விட முடியுமா... மனிதர்கள் தவறு செய்வது இயல்பு. அதை மன்னிப்பது தான் சிறந்த நேயம். நோயிலிருந்து முதலில் மீட்க வேண்டும். மீண்ட பின்னும் தவறான வழியில் நடந்தால், விட்டு போய்விடலாம்...''

அது மாணிக்கத்துக்கு எந்த உணர்வையும் ஏற்படுத்தவில்லை.

தாயின் அருகே உட்கார்ந்திருந்த தங்கை, ''அண்ணன் சொல்வது தான் சரி! எங்கேயாவது போய்விடலாம்...'' என்று அம்மா காதில் கிசுகிசுத்தாள்.

''அப்படி எல்லாம் பேச கூடாது...'' கண்கலங்கினாள் அம்மா.

''ஒரு நாளாவது நீங்க சந்தோஷமாக இருந்தது உண்டா... இப்படி பட்ட மனிதரை மன்னிக்கவேண்டும் என்கிறீர்களே...'' சற்று குரல் உயர்த்தினான் மாணிக்கம்.

''உன் கோபம் புரிகிறது; எனக்கு மட்டும் அன்பு பொங்கி வழிகிறதா என்ன... கிடையவே கிடையாது. ஆனாலும், பெற்றோரை நாம் நடத்துவது மாதிரி தான், நம் பிள்ளைகளும் நாளை நடத்துவர்...''

அதற்குமேல் அம்மாவுடன் வாதாட முடியவில்லை; மவுனமாக இருந்தான்.

அவன் தலையைக் கோதியபடி, ''எது நடந்தாலும் நல்லதுக்குத்தான். உடல் நலம் பெற்று நல்ல தகப்பனாக எழுந்து வரத்தான் போகிறார்...'' என்றாள்.

மாணிக்கத்தின் கண்கள் கலங்கின.

செருப்பு தைத்ததால் கிடைத்த பணத்தை எடுத்து நீட்டினான். வாங்கியவளின் கண்கள் வியப்பால் விரிந்தன. சேலை தலைப்பில் முடிந்து கொண்டாள்.

அப்போது, ''குடிகார கணவரிடம் அடி வாங்கும் பெண்கள், ஆந்திர மாநிலத்தில் மதுக்கடைகளை அடித்து நொறுக்குகிறார்களாம். அது போல் இங்கும் செய்தால், பொட்டல் காட்டில் தான் மதுக்கடை நடத்த வேண்டியிருக்கும். குடிகாரர்களால் ஏற்படும் துன்பம் குறையும்...'' என்றான் மாணிக்கம்.

சோகம் மண்டிய நிலையிலும், ''மதுவை ஒழிக்க முடியாதடா... ஊருக்கு வெளியேயும் போய் நன்றாக குடித்து விழுந்து கிடப்பர்... போராடுவதால் துன்பம் குறையாது...'' என்றாள் அம்மா.

''அப்படி சொல்ல முடியாது; தொலைதுாரம் போய் குடித்து வீடு திரும்புவது கடினம். குடித்தால் அங்கேயே விழுந்து கிடப்பர். வீட்டுக்கு வருவது குறையும்... பின் அதுவே வழக்கமாகி பிரச்னை குறையும்...''

''பார்க்கலாம்... ஏதோ கொஞ்சம் குறையலாம்...''

''நாமும் ஆந்திர பெண்கள் மாதிரி போராடி பார்க்கலாமா அம்மா... நீங்கள் தலைமை ஏற்பீர்களா...''

''ஐயோ நான் செத்தேன்; இப்போதே அடி, உதை வாங்கி, அரை உயிர் தான் இருக்கிறது. மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம் என ஆரம்பித்தால் அவ்வளவு தான்...''

மாணிக்கம் சிந்தனை வசப்பட்டான். அப்படி ஒரு போராட்டம், அம்மா தலைமையில் நடந்தால் எப்படி இருக்கும். அந்த நினைப்பே சிலிர்ப்பை ஏற்படுத்தியது.

'எத்தனையோ சிறுவர்களின் அப்பன்கள் எல்லாம் குடிப்பவர்கள் தான். மனைவியரை அடிப்பவர்கள் தான். குடும்பச் செலவுக்குச் சல்லிக் காசும் கொடுக்காதவர்கள் தான். அப்படிப்பட்ட குடும்ப பெண்களைத் திரட்டி போராடலாம்' என்று யோசித்தான்.

''என்னடா யோசனை... அக்கம் பக்கத்தில் யாரையாவது அழைத்து வா... அப்பாவை மருத்துவமனைக்கு கொண்டு போக வேண்டாமா...''

''காலையில் பார்த்துக் கொள்ளலாம் அம்மா; இப்போ மருத்துவமனை மூடியிருக்கும்...''

''என்னமோ யோசித்து செய்யப்பா...''

கடைக்கு புறப்பட்டாள் அம்மா.

அவளை தடுத்தவன், ''நானே கடைக்கு போய் வருகிறேனம்மா...'' என்றான்.

''இல்லையப்பா... பழைய சரக்கு தான் இப்போ இருக்கும். பேரம்பேசி மலிவாக வாங்கி வருவேன். உன்னை கடைக்காரன் ஏமாற்றி விடுவான்...'' என கிளம்பினாள்.

அப்பாவை பார்த்தான் மாணிக்கம். வாய்பிளந்து அரைக்கண் மூடியபடி கிடந்தார்.

குடிசைக்குள் இருக்கப் பிடிக்கவில்லை.

'இன்னா செய்தாருக்கும் நன்மை தான் செய்ய வேண்டும். ஆனாலும், அப்பா இப்படியே சில நாள் கிடந்தால் நல்லது. உடல்நிலை சரியாகி மெதுவாக எழட்டும். படுக்கையில் கிடந்தால் தான் புத்திவரும். மனைவியும், மகனும் வைத்தியம் பார்க்கின்றனர் என்ற மன அழுத்தத்தில் திருந்தக் கூடும்' என எண்ணினான்.

அப்பா விழுந்து விட்டதால், பள்ளியில் சேர்ந்து படிக்க தடை விலகியது.

பள்ளிக்கூடம் திறந்து ஒரு மாதம் தான் ஆகியிருந்தது. பரவாயில்லை; இனியும் சேரலாம்.

யோசித்தவனுக்கு, 'நான் படிக்கப் போய்விட்டால் சம்பாதிக்க முடியாதே... அம்மா ஒற்றை ஆளாய் என்ன செய்வார்... அப்பாவுக்கு வைத்தியச் செலவு வேறுஇருக்குமே' என்ற ஐயம் ஏற்பட்டது.

இந்த எண்ணம் சோர்வை தந்தது.

சற்றுநேரம் யோசித்தான். பிரச்னைக்கு வழி கிடைத்தது.

'அப்படித்தான் செய்ய வேண்டும்' என்று மனதில் சொல்லிக்கொண்டான்.

- தொடரும்...

ஜோதிர்லதா கிரிஜா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us