PUBLISHED ON : ஜூலை 18, 2020

மாணவர்களிடையே, பேசிக் கொண்டிருந்தார், கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்.
'நல்ல மாணவனின் இலக்கணம் எது...' என்று கேட்டான் ஒருவன்.
'சந்தேகங்களை தெளிவுப்படுத்திக் கொள்ளுதல்...' என்றார் சாக்ரடீஸ்.
'மாணவர்கள், யாரை முன்மாதிரியாக கொள்ள வேண்டும்...'
'கொக்கு, கோழி, உப்பு இவற்றோடு உன்னையும் சேர்த்து தான்...'
அந்த பதிலுக்கு முறையான விளக்கம் கேட்டான் மாணவன்.
'எதிர்பார்க்கும் பெரிய மீன் வரும் வரை, ஒற்றைக் காலில், அசையாமல் காத்திருக்கும் கொக்கு. அதுவரை, தனக்கு முன் நீந்தும் சிறிய மீன்களை விட்டுவிடும்; பெரிய மீனை கண்டவுடன், மின்னலென அலகை நீட்டி கொத்தி பிடிக்கும்...
'குப்பையை கொத்தி கிளறும் கோழி, தேவையான இரையை மட்டுமே எடுத்துக் கொள்ளும். எதனுடன் கலந்தாலும், உவர்ப்பு தன்மையில் சமரசமின்றி, தனித்தன்மையுடன் விளங்கும் உப்பு...'
இவ்வாறு கூறி நிமிர்ந்தவர், கேள்வி கேட்டவனை சுட்டிக் காட்டி, 'இவனைப் போல, ஐயம் தெளிவுற, எந்த இடத்திலும் துணிந்து கேள்வி கேட்க வேண்டும்...' என்றார்.
மாணவர்கள் ரசித்து ஆரவாரம் செய்தனர்.
குழந்தைகளே... வகுப்பில் பாடம் புரியாவிட்டால், தயக்கமின்றி ஆசிரியரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
மல்லிகா குரு
