sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

சிறுவர் மலர்

/

யாகம்!

/

யாகம்!

யாகம்!

யாகம்!


PUBLISHED ON : ஜூலை 29, 2016

Google News

PUBLISHED ON : ஜூலை 29, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்னொரு காலத்தில், அனந்தபுரி நாட்டை சகஜானந்தா என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் தன் நாட்டை விரிவுபடுத்த எண்ணினார். அதனால், தன் அமைச்சரை அழைத்துப் பேசினார்.

''அமைச்சரே, நம் நாட்டில் செல்வம் பெருக வேண்டும். அத்துடன் நமது ராஜ்ஜியமும் விரிவுபட வேண்டும். அதற்கு ஒரு நல்ல வழியை யோசித்துச் சொல்லுங்கள்,'' என்றார்.

''அரசே! நமது எல்லைக்கு உட்பட்ட காட்டில், ஒரு பெரிய மகான் வசித்து வருகிறார். அவர் யாகம் செய்வதில் வல்லவர். அவர் யாகம் செய்து பல ஊர்களுக்கு மழை வரச் செய்து மக்களின் வறுமையை போக்கியுள்ளார். அவரைக் கொண்டு யாகம் செய்வோம். நமக்கு எல்லா செல்வங்களும் வந்து சேரும்,'' என்றார்.

''அமைச்சரே நல்ல யோசனை கூறினீர். நாம் இப்போதே போய் மகானை அழைத்து வருவோம்,'' என்றார் அரசர்.

''மன்னா! சற்றுப் பொறுங்கள். அந்த மகான் உள்நோக்கத்துடன் வரும் யாருக்கும் உதவமாட்டார். அதனால் நாட்டு மக்களின் நன்மைக்காக யாகம் செய்ய வேண்டும் என்று கூறி அழைத்து வருவோம்,'' என்றார் அமைச்சர்.

அரசனுக்கும் அமைச்சரின் யோசனை சரியாகப்பட்டது. உடனே, புறப்பட்ட அரசர் முனிவரை பார்த்து பணிந்து வணங்கினார்.

ஆசீர்வதித்த மகானிடம் நாட்டு நன்மைக்காக யாகம் செய்ய விரும்புவதாகவும், அதற்கு தாங்கள் வந்து நடத்தித் தர வேண்டுமென்று வேண்டினார். மனம் மகிழ்ந்த மகானும் அதற்கு சம்மதித்தார்.

யாகத்துக்கான நாள் குறிக்கப்பட்டது. யாக ஏற்பாடுகளை மன்னர் சிறப்பாக ஆரம்பித்தார். குறிப்பிட்ட நாளில் யாகம் சிறப்பாக நடைபெற்ற போது, அரசர் தன்னை மறந்தார். அப்போதே தான் குபேரனாக மாறி விட்டதாக நினைத்தார்.

''இறைவா, எனக்கு மேன்மேலும் செல்வத்தையும், நாடுகளையும் கொடு,'' என்று சத்தம் போட்டு வேண்டினார்.

அரசனின் உள்நோக்கத்தைக் கண்ட முனிவர் வேதனை அடைந்தார். அவர் எதுவும் பேசவில்லை. விரைந்து எழுந்தார்.

பின், யாகசாலையை விட்டு வேகமாக வெளியேறத் துவங்கினார். அரசர் அதிர்ச்சி அடைந்தார். பாதியில் யாகம் நின்றால் தனது லட்சியத்திற்கு மோசம் வந்து விடும். அரசர் ஓடிச் சென்று முனிவரை வேண்டி வணங்கினார்.

''மகா முனிவரே! தாங்கள் ஏன் எதுவும் பேசாமல் வெளியே செல்கிறீர்கள்? இங்கு தங்களுக்கு ஏதேனும் குறை ஏற்பட்டு விட்டதா? தயவு செய்து யாகத்தை சிறப்பாக முடித்துத் தாருங்கள்,'' என்று வேண்டினார்.

அரசனை கோபத்துடன் பார்த்தார் முனிவர்.

''அரசனே, உன் கேள்விக்கெல்லாம் நான் விளக்கமளிக்க வேண்டியது அவசியமா?'' என்றார்.

முனிவரின் கோபத்தைக் கண்ட அரசர் குழப்பத்தில் ஆழ்ந்தார்.

''மகானே, தெரிந்தோ, தெரியாமலோ ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் தயவு செய்து அதை பொறுத்தருள வேண்டும். தாங்கள் அவரசப்பட்டு வெளியேறும் அளவிற்கு நான் என்ன தவறு செய்து விட்டேன்,'' என்று திரும்பவும் பணிந்து வேண்டினார் அரசர்.

முனிவர் ஒருவாறு சமாதானம் அடைந்து பேசினார்.

''அரசனே என்னைப் போன்ற மகான்கள் காட்டில் வசித்து வருகிறோம். எங்களுக்கு தேவையான வசதிகளை அரசனாகிய உன்னிடம் யாசித்துப் பெறுகிறோம். அதேபோல் உன்னையே நம்பி வாழும் லட்சக்கணக்கான மக்களும், உன்னை நம்பி யாசிப்பதும் உண்மைதான்.

''ஆனால், எல்லாருடைய நலனுக்காகவும் நான் செய்த யாகத்தை உன் சுயநலத்திற்காக நீ இறைவனிடம் யாசிப்பதை என்னால் ஏற்க முடியாது. அதனால் தான் யாகத்தை விட்டு வெளியேறுகிறேன். நாடும், நாட்டு மக்களும் நன்றாக இருந்தாலே அரசனும் நன்றாகத்தான் இருக்கிறான் என்று அர்த்தம். நல்ல அரசனைத் தேடி நாடும், செல்வமும் வந்து சேரும் புரிந்து கொள்,'' என்றார்.

முனிவரின் நீண்ட விளக்கத்தைக் கேட்ட அரசர், தன் செயலுக்காக வெட்கப்பட்டார்.

''மகானே! என்னை மன்னியுங்கள். தயவு செய்து என் யாகத்தை சிறப்பாக முடித்துத் தாருங்கள். அதன் பின் நான் தங்களுக்கு ஏராளமான அன்பளிப்புகளை தருவேன். அதையும் பெற்று தாங்கள் மகிழ்ச்சியாக செல்லலாம்,'' என்றார்.

அரசரின் பேச்சைக் கேட்ட முனிவர் மிகவும் வருந்தினார்.

''அரசே! நீ திருந்தியதாக எனக்கு தெரியவில்லை. ஒரு அரசர் சுயநலவாதியாக இருப்பது மிகவும் தவறு. அதை விட பெரிய தவறு, யாசித்துப் பெற விரும்பும் குணம். யாசித்து நீ பெறுவதை உன்னிடமிருந்து நான் ஏற்றுக் கொள்வது எப்படி சரியாக இருக்கும்?

''எனக்கு தேவையானவற்றை நானே இறைவனிடம் வேண்டிக் கொள்ள வேண்டியதில்லை. கடமையைச் செய்யும் போது அதன் பலன் தானே வந்து சேரும். நான் புறப்படுகிறேன்,'' என்ற முனிவர், விரைந்து அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

அரசனுக்கு என்ன செய்வதென்று புரிய வில்லை. முனிவரை ஏமாற்றி தான் செய்ய நினைத்த காரியம் நிறைவேறாதது குறித்து வருந்தினார். அப்போதும் திருந்தும் எண்ணம் இல்லை அரசருக்கு.

குட்டீஸ்... எத்தனை அறிவுரைகள் கொடுத்தாலும் திருந்தவே மாட்டார்கள் சிலர். அவர்களைப் போல் நீங்களும் இருக்கக் கூடாது சரியா!






      Dinamalar
      Follow us