PUBLISHED ON : நவ 09, 2012

தீபாவளியை கலர்புல் ஆக்குவது பட்டாசுதான். தீ விபத்து இல்லாமல் தீபாவளியை கொண்டாடுவது எப்படி?
பெங்களூரு போன்ற நகரங்களில் பொதுவான ஒரு கிரவுண்டில் வைத்து பெரியவர்கள் முன்னிலையில் எல்லாரும் சேர்ந்து பட்டாசு கொளுத்துவர். இதனால் பொருளாதார ரீதியாக பணம் மிச்சமாவதுடன், மாசு ஏற்படுவதும் குறைகிறது. இப்போதே சென்னையின் சில அபார்ட்மென்டுகளில் இதை போல பண்ணத் தொடங்கி விட்டனர்!
*பெரியோர்கள் முன்னிலையில் சிறுவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டும்.
*பட்டாசு வெடிக்கும் முன்னர் ஒரு பக்கெட் தண்ணீர் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
*தீக்காயம் ஏற்பட்டால் குளிர்ந்த நீரில் நன்றாகக் கழுவி விட்டு மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
*திறந்த வெளி மைதானத்தில் பட்டாசு வெடிப்பது நல்லது.
*அக்கம் பக்கம் நோயாளிகள், வயதானவர்கள் வசிப்பதை மனதில் வைத்து, மாலை ஆறு மணிக்கு மேல் அதிக சத்தம் உள்ள
வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
*பட்டாசு வெடிக்கும் போது பருத்தி ஆடைகளையே அணியுங்கள்.
*புஸ்வானம், சங்கு சக்கரம் போன்றவற்றைக் கொளுத்தும்போது குனிந்து கொண்டு நிற்காமல் நேராக நின்றபடி பற்ற வையுங்கள்.
பட்டாசு கொளுத்தும்போது நாம் கவனிக்க வேண்டியது குறித்து விளக்குகிறார் சென்னை கீழ்ப்பாக்கம் ஹாஸ்ப்பிடலின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். ஆர். சுகுமார்.
*புஸ்வானம் பல நேரங்களில் வெடிக்கும் தன்மை கொண்டது. அதனால் அதனை கையில் வைத்து வெடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
*வெடிக்காத பட்டாசுகளை கையால் தொடுவதோ அதை ஒன்று சேர்த்து கொளுத்துவதோ அறவே கூடாது.
*முகத்தை பட்டாசின் அருகே கொண்டு போய் வெடிக்கும் போதுதான், தீ முகத்தில் படுகிறது. எனவே, நீண்ட மத்தாப்பு வைத்துக் கொண்டு வெடிப்பது நல்லது.
*கையில் பட்டாசுகளை வைத்துக் கொண்டு பற்ற வைத்து தூக்கி எறிவதே தீ விபத்துக்கு முக்கிய காரணம். இதனால் நீங்கள்
மட்டுமில்லாமல் உங்களைக் கடந்து செல்லும் நபர்களும் பாதிக்கப்படலாம்.
*வானவேடிக்கை, காதைப்பிளக்கும் வாலாக்கள் போன்றவற்றை மக்கள் அதிகம் நடக்கும் இடங்களில் வெடிக்காமல் இருப்பது நல்லது.
*பாம்பு மாத்திரை போன்ற அதிகம் புகை கக்கும் மத்தாப்புகளைக் கொளுத்தும்போது முகத்தை கவர் செய்து கொள்ளுங்கள்.
அதிலிருந்து வெளிவரும் கரிய புகை, ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களுக்கு உங்களைக் கொண்டு செல்லும்.
