
கோவில் கோபுரத்தில் புறா ஒன்று வசித்து வந்தது. ஒருநாள் அந்தப் புறாவானது கோபுரத்தின் உச்சியில் இருந்து கீழே குப்பைத் தொட்டியைப் பார்த்தது.
குப்பைத் தொட்டியில் நாயானது எச்சில் இலையை நக்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தது. அந்த நாய் கோபுரத்தின் அருகே படுக்க வந்தது.
புறாவானது நாயை அருவருப்பாகப் பார்த்து, ''நாயே! இனிமேல் நீ கோபுரத்தின் அருகே கீழே படுக்காதே! எச்சிலைச் சாப்பிடும் நீ கோபுரத்தின் அருகே படுத்தால், கோபுரத்தில் தங்கியிருக்கும் எனக்கு இழிவாகி விடும். அதனால் நீ கோபுரத்தின் அடியில் படுக்காதே,'' என்றது.
நாயும் புறாவைப் பகைத்துக் கொள்ளாமல், அதன் பேச்சுக்கு கட்டுப்பட்டது. குப்பைகள் கொட்டப்பட்ட பகுதியில் தங்கிக் கொண்டது.
ஒருநாள்-
கோவில் கோபுரத்தில் வண்ணம் பூசிடும் வேலை நடைபெற்றது. அந்நேரம் கோவில் ஊழியர்கள் அந்தப் புறாவைப் பிடித்திட முயற்சித்தனர். உடனே புறாவானது அவர்கள் பிடியில் இருந்து தப்பிக்க நினைத்தது. ஆனால், அதற்குள் ஒரு ஊழியர் புறாவின் மீது கம்பை வீசினார். அக்கம்பானது புறாவின் கால்களில் பட்டது. அடி வாங்கிக் கொண்ட புறா கோவில் கோபுரத்தை விட்டுப் பறந்தது. அதனால் வேகமாகப் பறக்க முடியவில்லை.
கோபுரத்தின் கீழேயுள்ள குப்பைத் தொட்டியின் பக்கம் பொத்தென்று விழுந்தது. தரையில் விழுந்த புறாவால் அசையக் கூட முடியவில்லை.
கோவில் ஊழியர்கள் கோபுரத்தை விட்டு கீழே இறங்கி ஓடோடி வந்தனர். இக்காட்சியினைப் பார்த்துக் கொண்டிருந்த நாயானது, புறாவை தன் வாயால் கவ்வியபடி அங்கிருந்து ஓடியது.
சிறிது தூரம் சென்றதும் புறாவை தன் வாயிலிருந்து விடுவித்து விட்டது.
''புறாவே இனிமேல் தப்பித்து ஓடிவிடு! நீ மீண்டும் கோபுரத்தின் பக்கம் வந்தால், ஊழியர்கள் உன்னைப் பிடித்து விடுவர்,'' என்றது நாய்.
''உன்னை நான் எச்சிலைச் சாப்பிடுகிறாய் என்று ஒதுக்கி வைத்தேன். இன்றோ நீ என் உயிரையே காப்பாற்றி விட்டாய்,'' என்று கண் கலங்கியது.
அன்றுமுதல், புறாவும், நாயும் நண்பர்களாக இருந்தனர்.

