தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/சிறுவர் மலர்/தொடர்கதை - கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பகுதி - (3) - பூரணி

தொடர்கதை - கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பகுதி - (3) - பூரணி

தொடர்கதை - கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பகுதி - (3) - பூரணி


PUBLISHED ON : ஆக 27, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 27, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இதுவரை:  இந்திய விஞ்ஞானி கொண்டு வந்த ரகசிய மேப்புடன் கடத்தப்பட்டதை அறிந்த பிரதமர், மிகுந்த கோபம் கொண்டார்.

இனி-

அன்று மாலையே விசேஷ பதிப்புடன் செய்தித் தாள்களில் பெரும் செய்தியாக பவிஷ்கோஷ் கடத்தப்பட்டது பற்றி செய்திகள் வெளியாயின. 'இந்தியாவின் மூத்த விஞ்ஞானியும், விஞ்ஞான உலகில் பல விந்தைகள் புரிந்த விஞ்ஞான உலகின் சிற்பி கடத்தல். போதை சாம்ராஜ்ஜியத்தின் கைகள் மேலோங்கி இருப்பதையே இது காட்டுகிறது' என்று தொலைக்காட்சிகள் செய்திகளை அறிவித்த வண்ணம் இருந்தன.  உலக விஞ்ஞானிகள் பலர் பிரகடீஸ்வருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் துயரத்தை வெளிப்படுத்தினர். அப்போது அவசரமாக ஒரு தொலைபேசி அழைத்தது. அது பிரதமரின் தொலைபேசி. ஒருவருக்கொருவர் முகம் பார்த்து பேசும் காலம் ஆனதால் பிரகடீஸ்வர் தலை குனிந்தபடி போனை எடுத்து பேசினார்.

பிரதமர் மிகவும் கோபத்துடன் காணப்பட்டார்.

''என்ன மிஸ்டர் பிரகடீஸ்வர், இப்படி கோட்டை விட்டு விட்டீர்களே... பாதுகாப்பை பலப்படுத்தி இருக்க வேண்டாமா? நான் உளவுத்துறைக்கு போன் செய்து கேட்டபோது விஞ்ஞானி பவிஷ்கோஷ் பாதுகாப்பு பற்றி தாங்கள் எதுவுமே தெரிவிக்கவில்லையாமே. இது மாபெரும் குற்றம் அல்லவா? அவர் நம் நாட்டுக்கு மட்டும் அல்ல, உலகுக்கே தலைசிறந்த மாபெரும் அரிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி விஞ்ஞான உலகில் சாதனை செய்த பெருமைக்குரிய சிற்பி. அவரை இப்படி அநியாயமாக கடத்தும்படி செய்து விட்டீர்களே!

''போதை சாம்ராஜ்ஜியத்தில் நுழைந்தவர் எங்காவது தப்பி வர இயலுமா? அப்படி ஒரு நிலை வந்தால் அவரை உயிருடன் நாம் மீட்க முடியுமா? இதுற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் மிஸ்டர் பிரகடீஸ்வர். நான் உடனே பார்லிமென்ட்டுக்கு பதில் சொல்லியாக வேண்டும். இப்போதே நாட்டில் கொந்தளிப்பு அதிகமாகி வருவதாக உளவுத்துறை செய்திகள் சொல்கின்றன. என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்? கூறுங்கள்!'' என்று ஆவேசமாக பேசி முடித்தார் பிரதம அமைச்சர்.

மெல்ல பேச்சை ஆரம்பித்தார் தலைமை விஞ்ஞானி.

''சார்! இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தவறு என்னுடையதுதான். இதில் என் ராஜதந்திரம் தோற்றுவிட்டது. வருந்துகிறேன். ஆனால், சார் இதை நான் ஒரு சவாலாக ஏற்கிறேன். நம் பவிஷ்கோஷ் நிச்சயம் கிடைப்பார். அதுவரை நான் ஓயப் போவதில்லை!'' இதைக் கேட்டதும் பிரதமரின் கோபம் அதிகமாகியது.

''என்ன மிஸ்டர் நம் உளவுத் துறைக்கே சவால் விடுகிறீர்களா? அவர்களால் பிடிக்க முடியாத ஒன்றை நீங்கள் தனி மனிதனாக இருந்து கொண்டா செய்யப் போகிறீர்கள். வெட்கம், வெட்கம். சாரி மிஸ்டர் பிரகடீஸ்வர். நான் உங்கள் செயலுக்கு மிக வருந்துகிறேன்!'' என்று கூறி கோபத்துடன் தொலைபேசியை துண்டித்துவிட்டார் பிரதம அமைச்சர்.

அன்று பார்லிமென்ட் அல்லோகலப்பட்டது. அனைவரும் பவிஷ்கோஷை உயிருடன் மீட்க வேண்டினர். இன்றைய தினத்தை கருப்புதினமாக அறிவிக்க எதிர்க்கட்சிகள் முயன்று அதற்கு ஆதரவும் பெற்றன. இந்தியாவை ஒட்டி உலக நாடுகளும் தலைசிறந்த விஞ்ஞானி பவிஷ்கோஷ் கடத்தப்பட்ட நாளை கருப்பு நாளாக அறிவித்தது. உலகெங்கும் இத்தனை ஆர்ப்பாட்டங்களும், கண்டனங்களும் அறிந்து தன் செயலுக்கு வெட்கமும் வேதனையும் பட்டு மிகுந்த சோகத்துடன் பிரகடீஸ்வர் அமர்ந்திருந்த போது அவருக்கு ஒரு போன் வந்தது.

அவரது தங்கை மகன் கைலாஷ், தந்தையையும், தாயையும் ஒரு விபத்தில் பறிகொடுத்தவன். அவன் தான் இப்போது மாமாவை அழைத்தான். அவன் முகத்தில் கலவரம் தெரிந்தது. உடனே போனை எடுத்தவர், ''என்ன கைலாஷ் என்ன விஷயம்? ஏன் பதட்டமாக இருக்கிறாய்?'' என்று கேட்டார்.

''மாமா வானில் ஒரு விந்தை கண்டேன். அமெரிக்க வேவுகணை வானில் வெடித்து சிதறிய போதும், உலக விஞ்ஞானிகளின் சிற்பி பவிஷ்கோஷ் கடத்தப்பட்ட போதும்... 'ஆ... அய்யோ...' அவன் கீழே விழுந்ததை தொலைபேசியின் காமிரா மூலம் பார்த்த பிரகடீஸ்வர் அதிர்ச்சி அடைந்தார். உடனே ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தார்.

இம்முறை மறக்காமல் காவல் துறைக்கும் விவரத்தை கூறவும் காவல் துறை அதிகாரிகளும், மோப்ப நாய்களும், தடய வல்லுநர்களும் சுமந்தபடி நாலைந்து காவல் ஊர்திகள் வரவும் சற்றும் தாமதியாது பிரகடீஸ்வர் தன் இரு மெய்க்காப்பாளர்களோடு கைலாஷ் இருக்கும் இல்லம் நோக்கி விரைந்தார்.

அவனை விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்தின் முதலுதவி சிகிச்சை மையத்துக்கு அழைத்துச் சென்றனர். பிரகடீஸ்வர் தடய வல்லுநர்களுக்கு அவன் விழுந்த இடம் சுற்றியும் உள்ள பொருட்களை சேகரித்து வருமாறு கட்டளையிட்டார். மோப்ப நாய்கள் அவன் வீட்டை சுற்றி வட்டம் இட்டு பின் திரும்பி விட்டன. தலைமை மருத்துவர் அவனை பரிசோதித்துவிட்டு அங்கு வந்து சேர்ந்தார்.

''என்ன டாக்டர், என் மருமகனுக்கு ஒன்றும் அபாயம் இல்லையே?'' பிரகடீஸ்வர் ஒரு படபடப்புடன் கேட்டார்.

''நோ நோ. சின்ன நெருப்பு காயம். ஆனால், அது எப்படி வந்தது என்று தான் தெரியவில்லை. நல்லவேளையாக அவன் நகர்ந்து கொண்டதால் காலோடு போயிற்று. முகத்தில் அல்லது தலையில் அது பட்டிருந்தால் உயிருக்கே ஆபத்தாகி இருக்கும்.''

''அதுக்கு காரணம் நான்தானாக்கும். இந்த பயல் எப்ப எது நடந்தாலும் உடனே வாசலுக்கு போவான். வானத்தை பார்ப்பான். அந்த மாதிரி இவன் செஞ்சுட்டு நம்ம தலைவர் கிட்ட பேசறப்போதான் அந்த சக்தி வாய்ந்த கண்ணுக்கு தெரியாத நெருப்பு அவன் மேல வந்திச்சு. ஆனா நான் கில்லாடியாச்சே. என் கண்ணுக்கு அது தப்புமா? இல்ல விடுவேனா? உடனே அவனை ஒரு தள்ளு தள்ளி விட்டேன். அவன் கீழே விழவும், நெருப்பு காலோடு போச்சு. எல்லாம் நம்ம வேலையாக்கும்!'' கைலாஷின் ரோபோ பெருமையோடு பேசியது.

''வெரிகுட் வெரிகுட். அதுக்குத்தானே உன்னை நான் அவனுக்கு பாதுகாப்பா இருக்க சொல்லி கட்டளை கொடுத்தேன். நீயும் சரியா செய்துட்டியே!'' என்றபடி பிரகடீஸ்வர் ரோபோவின் கைகளை குலுக்கி பாராட்டவும் அது பெருமையுடன் தானும் கைகளை குலுக்கியது.

டாக்டர் சிரித்துக் கொண்டார். அப்போது இரு தடய வல்லுனர்கள் அங்கு வந்து சேர்ந்தனர்.

''என்ன வல்லுனர்களே... ஏதாச்சும் தடயம் கிடைத்ததா?''

''ஓ... கைலாஷ் கால் அடிபட்ட இடத்தின் மண் மிகவும் நீர்கசிவுடன் இருந்தது. ஆனால், அப்போது எங்குமே மழை பெய்யவில்லை. பின் எப்படி அது மிகுந்த ஈரப்பதத்துடன் இருக்கிறது என்று கண்டு அறிய முடியவில்லை. மேலும், மணலில் கொடிய வேதியியல் கொண்ட வெடி மருந்து கலந்திருக்கிறது. அதுதான் மிகவும் கவலை அளிக்கிறது!'' என்றார் ஒருவர்.

''சரி! உடனே அதை பரிசோதனைக்கு அனுப்புங்கள். மற்றபடி யாரும் அவனை கொல்ல வந்ததாக இதுவரை பிடிபடவில்லை. அதனால் மோப்ப நாய்கள் திரும்பிவிட்டன. நான் சிறிது நாழிகையில் வருகிறேன். நீங்கள் காரணம் கண்டு எனக்கு ரிப்போர்ட் கொடுங்கள்!'' என்று கூறி அவர்களை அனுப்பி வைத்தார் பிரகடீஸ்வர்.

''ஏன் டாக்டர் அவன் காயம் ஆறி மயக்கம் தெளிய எத்தனை நாழி ஆகும்?''

''விஞ்ஞான ஆராய்ச்சிக் கூடத்தின் தலைவர் அவர்களே... இதுபற்றி கவலையே வேண்டாம். விஞ்ஞானம் மட்டும் இன்றி மருத்துவத்திலும் இன்று நாம் உலகளவில் முன்னணியில் இருக்கிறோம். இப்போது நான் அளித்திருக்கும் சிகிச்சையால் அவன் முழுதும் குணமாகி எழ இரண்டு மணி நேரம் ஆகலாம். அதற்கு பிறகு அவன் வீடு திரும்பலாம்,'' என்றார் தலைமை மருத்துவர்.

''நல்லது டாக்டர். உங்கள் சேவைக்கு என் நன்றிகள்!'' என்று பிரகடீஸ்வர் கூறும் போதே கைலாஷ் கண் விழித்தான். அருகில் மாமா அமர்ந்திருப்பது கண்டு மகிழ்ந்தான். 'மாமா' மெல்ல மெல்ல அழைத்தான். அவன் குரல் எழவில்லை. அவர் கவனியாது கவலையுடன் இருக்கவும், ''தலைவா! பையன் தான் கூப்பிடறான். காதில் விழலியா? என்னன்னு கேளுங்க,'' என்றது ரோபோ. உடனே பிரகடீஸ்வரின் கவனம் கைலாஷ் பக்கம் திரும்பியது. அவன் அவரை கிட்டே அழைத்தான்.

அவரும் அவனின் அருகில் சென்றார். ''ரகசியம்!'' என்றான்.

தலைமை மருத்துவர் உடனே அங்கிருந்து அகன்றார்.

''மாமா ஒரு முக்கிய விஷயம். அதாவது அமெரிக்க வேவுகணை வானில் வெடித்து சிதறிய போதும், நம் முதிய விஞ்ஞானி பவிஷ்கோஷ் கடத்தப்பட்ட போதும் ஒரு அதிசயம் கண்டேன். ஆம் மாமா. வானில் கருமேகக் கூட்டங்களை கிழித்துக் கொண்டு ஒரு பச்சை நிற நட்சத்திரம் மினு மினுத்தபடி வெளிவந்தது,'' என்றான் கைலாஷ்.

அவ்வளவுதான். பிரகடீஸ்வர் உஷாரானார்.

''அப்படி என்றால் அது உளவு நட்சத்திரம். உன் கால் அடிபட்டபோது நீ இருந்த இடம் ஈரமாக இருப்பதாக தடயவியல் வல்லுனர்கள் சொன்னது சரியே. அதுதான் மேகத்தின் ஊடே உண்டாகும் மின்னலில் இருந்து சக்தியை வாங்கி வானில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அது மிகப்பெரிய சவால். உடனே நான் அதை அழிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். நீ உடம்பை நன்கு கவனித்துக் கொள். நான் உடனே சென்று வருகிறேன்,'' என்ற பிரகடீஸ்வர் அவனை கண்காணிக்கும் பொறுப்பை ரோபோவிடம் ஒப்படைத்து விட்டு தலைமை மருத்துவரிடம் விவரம் கூறாமல் உடனே செல்ல வேண்டிய நிர்பந்தத்தை நாசூக்காக கூறிவிட்டு வேக வேகமாக அங்கிருந்து வெளியேறினார் பிரகடீஸ்வர். (- 3 தொடரும்)

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us